இலங்கை இறக்குமதி தடை: பொருளாதார மீட்பு பாதையா? ஒரு வழிப் பாதையா?

🕔 November 26, 2020

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

நாடாளுமன்றில் அடுத்த ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் சமர்ப்பிக்கப்பட்டமையை அடுத்து, அது தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும், வாதப் பிரதிவாதங்களும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

வரவு – செலவுத் திட்ட விவாதத்தில் பேசிய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல நாட்டை 70ஆம் ஆண்டு காலப் பகுதிக்குக் கொண்டு செல்ல அரசாங்கம் முயற்சிக்கிறது என குற்றம் சாட்டினார்.

1970களில் ஆட்சிக்கு வந்த சிறிமாவோ பண்டாயநாயக அரசாங்கம், நாட்டில் இறக்குமதிகளைத் தடைசெய்ததோடு, உள்நாட்டு உற்பத்தியையே நாடு முழுமையாக சார்ந்திருக்கும்படி மூடிய பொருளாதாக் கொள்கையைப் பின்பற்றியது.

இதனால் அந்த கால கட்டத்தில் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டனர். உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. பிரதான உணவாக மரவள்ளிக் கிழங்கை சாப்பிடும் நிலை மக்களுக்கு உருவானது.

இதனை சுட்டிக்காட்டும் வகையிலேயே, ‘நாட்டை 70ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு அரசாங்கம் கொண்டு செல்ல முயற்சிப்பதாக’ லக்ஷ்மன் கிரியெல்ல குறிப்பிட்டார்.

இது இவ்வாறிருக்க, இலங்கை ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர், நாட்டின் பொருளாதாரக் கொள்கைகளில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தத் துவங்கியுள்ளார். அதன் ஒரு அம்சமாக இறக்குமதிக் கட்டுப்பாடுகளையும், இறக்குமதித் தடைகளையும் விதிப்பதற்கான தீர்மானங்களை எடுத்துள்ளார்.

சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு – செலவுத் திட்டத்தின் மூலம் உள்நாட்டு உற்பத்திக்கு அதிக முக்கியத்துவம் வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஏற்கனவே வாகன இறக்குமதிக்கு நாட்டில் தடைவிதிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஓர் ஆண்டுக்கு வாகனங்களை இறக்குமதி செய்வதை நிறுத்துவதற்கு அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக கடந்த செப்படம்பர் மாதம் அமைச்சரவைப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்திருந்தார்.

இலங்கையின் நாணயப் பெறுமதியின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காகவே இவ்வாறான முடிவை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாகவும் அவர் அப்போது கூறியிருந்தார்.

அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாயின் பெறுமதி, குறுகிய காலப்பகுதிக்குள் சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கையில் கடந்த 5 ஆண்டுகளில் இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்களின் பெறுமதி சுமார் 5,318 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும் என, வரவு – செலவுத்திட்ட உரையின் போது, நிதியமைச்சரும் பிரதமருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இது அக்காலப் பகுதியில் பெறப்பட்ட கடனில் ஏறக்குறைய 21 சதவீதம் என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

வர்த்தகம் என்பது ஒரு வழிப் பாதையல்ல

இவ்வாறு இறக்குமதித் தடைகளை இலங்கை அரசாங்கம் கடைப்பிடித்து வரும் நிலையில் ‘வர்த்தகம் என்பது ஒரு வழிப் பாதையல்ல’ எனக் குறிப்பிட்டு, ஐரோப்பிய ஒன்றியக் குழு மற்றும் பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து மற்றும் ரொமேனியா தூதரகங்கள் இணைந்து இலங்கை தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளன.

அந்த அறிக்கையில் ‘தற்போது இலங்கையில் காணப்படும் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் காரணமாக, இலங்கை மற்றும் ஐரோப்பிய வியாபாரங்களில் எதிர்மறைத் தாக்கங்கள் ஏற்பட்டுள்ளதுடன், வெளிநாட்டு நேரடி முதலீட்டிலும் தாக்கம் ஏற்பட்டுள்ளது’ எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

‘இவ்வாறான நடவடிக்கைகள், பிராந்தியத்தின் மையமாகத் திகழும் இலங்கையின் முயற்சிகளுக்கு பெரும் தடையாக அமைந்துள்ளதுடன், ஏற்றுமதிக்கு அவசியமான மூலப்பொருட்கள் மற்றும் இயந்திர சாதனங்களின் இறக்குமதியை கட்டுப்படுத்தியமையினால், ஏற்றுமதியிலும் எதிர்மறைத் தாக்கத்தை அது ஏற்படுத்துகிறது’ எனவும் மேற்படி அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், ‘உலக வர்த்தக நிறுவனத்தின் ஒழுங்கு விதிகளுக்கு அமைவாக, இறக்குமதித் தடை நீண்ட காலத்திற்கு இருக்காது என்பதை நாம் நினைவுபடுத்துகிறோம்’ எனவும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பின்னணியில், வரவு – செலவுத் திட்டம் குறித்து லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ள அச்சம் குறித்தும், ஐரோப்பிய ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கை தொடர்பிலும் தென்கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல்துறை பேராசிரியர் ஏ.எல். அப்துல் ரஊப் உடன் பிபிசி தமிழ் பேசியது.

இதன்போது இலங்கை நடைமுறைப்படுத்தியுள்ள மற்றும் நடைமுறைப்படுத்தத் தீர்மானித்துள்ள இறக்குமதி தடைகள், நாட்டுக்கு எவ்வாறான தாக்கங்களை ஏற்படுத்தும் எனவும் அவரிடம் வினவியது.

இதற்குப் பதிலளித்த ரஊப், “தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வரும் இலங்கை ரூபாயின் பெறுமதியை திருப்திகரமான நிலைக்குக் கொண்டுவருதற்கான கடமை அரசாங்கத்துக்கு உள்ளது” என்றார்.

“உள்நாட்டு வருமானத்தை அதிகரிப்பதோடு, இறக்குமதிக்கான செலவுகளைக் கட்டுப்படுத்துவதுவதன் மூலமாகவே, ஒரு நாட்டின் நாணயப் பெறுமதியை சிறப்பான முறையில் பேண முடியும்” எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“அதற்காகத்தான் தற்போது அரசாங்கம் சில இறக்குமதிகளை நிறுத்தியுள்ளதோடு, வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக மேலும் சில இறக்குமதித் தடைகளையும் கொண்டுவரத் தீர்மானித்துள்ளது.

தற்போதைய நிலையில் அரசாங்கத்துக்கு இது ஒரு வகையில் உடனடித் தீர்வாகவும் அமைந்துள்ளது.

தற்போது உலகளவில் ஏற்பட்டுள்ள கொரோனா தொற்று, அதன் காரணமாக விமான நிலையங்கள் மூடப்பட்டமை, கப்பல் போக்குவரத்துக்கள் நிறுத்தப்பட்டமை மற்றும் உலக அளவில் உற்பத்திகள் வீழ்ச்சியடைந்தமை உள்ளிட்ட விடயங்கள், அரசாங்கத்தின் இறக்குமதித் தடைக்கு ஒத்திசைவாகவும் அமைந்துள்ளன” என்று அவர் விவரித்தார்.

வெளிநாட்டு பொருட்களுக்கான இறக்குமதித் தடையை மேற்கொள்ளும் அதேவேளை, வெளிநாட்டுப் பொருட்களுக்கு மாற்றீடான பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வது குறித்து கவனம் செலுத்த வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பை அரசாங்கம் எடுக்க வேண்டும் எனவும் பேராசிரியர் ரஊப் கூறினார்.

மலேசியாவின் அனுபவத்தைப் பின்பற்ற முடியும்

“1997ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட தென்கிழக்காசிய நிதி நெருக்கடியின்போது, மலேசியாவின் அப்போதைய தலைவர் டொக்டர் மஹாதீர் மொஹம்மத் மேற்கொண்ட இரண்டு முக்கிய தீர்மானங்களை இந்த இடத்தில் நினைவுபடுத்துதல் பொருத்தமாக அமையும்”.

“அப்போது இலங்கையை விடவும் மலேசியா பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தது. மலேசியாவின் பொருளாதாரத்தை முன்னேற்றும் பொருட்டு மஹாதீர் மொஹம்மத், தீர்க்க தரிசனம் மிக்க சில கொள்கைப் பிரகடனங்களை வெளியிட்டதோடு, மக்களிடம் முக்கியமான வேண்டுகோள்கள் சிலவற்றையும் முன்வைத்தார்”.

பேராசிரியர் ரஊப்

“அவற்றில் முக்கியமான இரண்டு கோரிக்கைகளைக் குறிப்பிடலாம். முதலாவது இறக்குமதிப் பொருட்களை நுகர்வு செய்வதை மக்கள் கைவிட வேண்டுமென அவர் கேட்டுக் கொண்டார். இரண்டாவதாக, அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசாங்கத்திடமிருந்து மக்கள் எவ்வித சலுகைகளையும் எதிர்பார்க்கக் கூடாது என்ற டொக்டர் மஹாதீர் மொஹம்மத் கேட்டுக் கொண்டார்”.

“இந்த இடத்தில் நாம் முக்கியமான ஒரு விடயத்தை கவனிக்க வேண்டும். வெளிநாட்டு இறக்குமதிகளை அப்போது டொக்டர் மஹாதீர் தடைசெய்யவுமில்லை, அதன் மூலம் வெளிநாடுகளை அவர் பகைத்துக் கொள்ளவுமில்லை. வெளிநாட்டுப் பொருட்களைக் கொள்வனவு செய்ய வேண்டாம் என்றும், அதன் மூலம் உள்நாட்டுப் பொருட்களை கொள்வனவு செய்யுமாறும்தான் அவர் கோரிக்கை விடுத்தார். மலேசியா இதில் வெற்றிகண்டது. பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சி பெற்றது. மலேசியாவின் இந்த அனுபவத்தை இலங்கை பின்பற்ற முடியும்”.

வெளிநாடுகளைப் பகைக்க முடியாது

“தற்போது இலங்கை அரசாங்கம் – வெளிநாட்டுப் பொருட்களுக்கான இறக்குமதித் தடைகளை ஏற்படுத்தியுள்ளதன் மூலம், உள்நாட்டு உற்பத்திகளை ஊக்குவிக்கலாம் என எண்ணக் கூடும். ஆனால், அதையும் வெளிநாடுகளின் உதவியுடன்தான் செய்ய வேண்டும். உதாரணமாக, ஆடை ஏற்றுமதியின் மூலம் இலங்கை அதிகமான வெளிநாட்டு வருமானத்தைப் பெறுகிறது. ஐரோப்பிய நாடுகளில்தான் இலங்கையின் ஆடைகளுக்கான பரந்த சந்தைகளும் உள்ளன. இந்த நிலையில், இறக்குமதித் தடையின் மூலம் ஐரோப்பிய நாடுகளைப் பகைத்துக் கொண்டு, ஏற்றுமதியின் மூலம் இலங்கை வருமானத்தைப் பெறமுடியாது என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்” என்றும் பேராசிரியர் ரஊப் தெரிவித்தார்.

“ஏற்றுமதி தடைகளை ஏற்படுத்தி விட்டு, உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்கப் போவதாக அரசாங்கம் கூறும்போது; ‘நாடு 70ஆம் ஆண்டு காலப் பகுதிக்கு சென்று விடுமோ’ என மக்களுக்கு அச்சம் ஏற்படுமாயின், உள்நாட்டு உற்பத்தியை எவ்வாறு மேற்கொள்ளப் போகிறோம் என்பதை வெளிப்படுத்தி, அந்த அச்சத்தை அரசாங்கம் போக்க வேண்டும்” எனவும் அவர் வலியுறுத்தினார்.

“திடீரென உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க முடியாது. டாக்டர் மஹாதீர் மொஹம்மத் முன்வைத்தது போன்று, அதற்கான திட்டங்களை வெளியிட வேண்டும். உள்நாட்டு உற்பத்தியில் மக்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும். அதற்கான வேலைத் திட்டத்தை அரசாங்கம் முன்வைக்க வேண்டும். இவற்றைத்தான் செய்யப் போகிறோம், இவ்வாறுதான் மக்கள் பங்களிப்புச் செய்ய வேண்டுமென அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். ஒரு பக்கத்தை மூடிக் கொண்டு, இன்னொரு பக்கமாக வெற்றிகரமான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியாது” என்றும் பேராசியர் ரஊப் தெரிவித்தார்.

இது இவ்வாறிருக்க, அரசாங்கம் முன்வைத்துள்ள வரவு – செலவுத் திட்டம் தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியும் ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சிறிமாவோ பண்டாரநாயக ஆட்சிக் காலத்தில் தேசிய உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டங்கள் இருந்தன என்றும், பின்னர் வந்த அரசாங்கம் அதனை இல்லாமல் செய்து, திறந்த பொருளாதார நிலைமையை உருவாக்கியதாகவும், இதனால் நாடு தொடர்ந்தும் பொருளாதார நெருக்கடிக்கு முகம்கொடுத்து வருவதாகவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்