85 ரூபா சீனி, 140 ரூபாவுக்கு விற்பனை: மக்களை ஏமாற்றுகிறதா அரசாங்கம்?

🕔 November 15, 2020

– முன்ஸிப் –

சீனிக்கான கட்டுப்பாட்டு விலையினை அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அது இன்னும் நடைமுறைப்படுத்தப்படாமை குறித்து பொதுமக்கள் அதிருப்தி வெளியிடுகின்றனர்.

பொதி செய்யப்படாத வெள்ளை சீனி ஒரு கிலோகிராமுக்கான அதிகபட்ச சில்லறை விலை 85 ரூபா என, வர்த்தமானி மூலம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது.

அதேபோன்று இறக்குமதி செய்யப்படும் வெள்ளை சீனியின் மொத்த விற்பனை விலை 80 ரூபா எனவும் அந்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆயினும் ஒரு கிலோ வெள்ளைச் சீனி 140 ரூபா வரையில் சில்லறையாக பல இடங்களில் விற்கப்படுகிறது.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களில் இந்த நிலை காணப்படுகிறது.

இது குறித்து சில்லறை வியாபாரிகள் தெரிவிக்கையில்; “அரசாங்கம் சீனிக்கான கட்டுப்பாட்டு விலையை அறிவித்துள்ள போதிலும், அந்த விலைக்கு மொத்த வியாபாரிகளிடமிருந்து சீனியை எம்மால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. நிர்ணய விலைக்கு முன்னர் மொத்த வியாபாரிகளிடமிருந்து நாம் பெற்றுக் கொண்ட விலைக்குத்தான் தற்போதும் சீனியை பெற்றுக் கொள்கிறோம். எனவே ஒரு கிலோ சீனியை 85 ரூபா எனும் விலைக்கு விற்றால் எமக்கு நஷ்டம்தான் ஏற்படும்” என கூறுகின்றனர்.

இந்த நிலையில், சீனியை கட்டுப்பாட்டு விலையிலும் அதிகமாக விற்பனை செய்த சில்லறை வியாபாரிகளுக்கு எதிராக, நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையினர் சட்ட நடடிவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிய முடிகிறது.

தொடர்பான செய்தி: சீனிக்கான கட்டுப்பாட்டு விலை இன்று முதல் அமுல்; நுகர்வோருக்கு இனிப்பான செய்தி: வெளியானது வர்த்தமானி அறிவித்தல்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்