ராணுவத் தளபதிக்கு எதிரான பயணத்தடை குறித்து பொம்பியோ கருத்து

🕔 October 28, 2020

ராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவுக்கு எதிரான பயணத் தடை குறித்து மீளாய்வு செய்யப்படும் என அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ தெரிவித்துள்ளார்.

சவேந்திர சில்வா மீதான பயணத் தடையானது அமெரிக்காவின் சட்ட செயன்முறையின் ஓர் அங்கமாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சவேந்திர சில்வா மீது பயணத் தடை குறித்து ஊடகவியலளார்கள் இன்று எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைக் கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பில் தொடர்ச்சியாக மீளாய்வு செய்யப்பட்டு வருவதாகவும், உண்மையானதும் சட்டரீதியானதுமான விடயங்கள் உறுதி செய்யப்பட வேண்டியதே தமது நோக்கம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாக சவேந்திர சில்வா மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தது.

இறுதிக்கட்ட போரின் போது சவேந்திர சில்வா 58ஆம் படைப்பிரிவுக்கு பொறுப்பாக இருந்தார் எனவும் இதன்போது சட்டவிரோத படுகொலைகள் இடம்பெற்றதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனையடுத்து சவேந்திர சில்வா மீதான பயணத்தடையை நீக்குமாறு இலங்கை அரசாங்கம், அமெரிக்காவிடம் அதிகாரபூர்வமாக ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது

இது இவ்வாறிருக்க அமெரிக்க ராஜாங்க செயலாளர் மைக் பொம்பியோ இலங்கைக்கான விஜயத்தை நிறைவு செய்து மாலைதீவுக்குப் பயணமானார்.

இலங்கையிலிருந்து புறப்படுவதற்கு முன்னதாக கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலத்துக்கு வருகைதந்து மரியாதை வணக்கம் செலுத்தினார்.

நேற்று இரவு இலங்கை வந்தடைந்த அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் மைக் பொம்பியோ, இன்று காலையில் ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ஆகியோருடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

Comments