இருபதாவது திருத்தமும், மு.கா. தலைவரின் நாடகமும்: ஒரு கூட்டுத் துரோகம் பற்றிய கதை

🕔 October 23, 2020

– மரைக்கார் –

முஸ்லிம் காங்கிரஸின் ஐந்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் நால்வர் – இருபதாவது திருத்தத்துக்கு ஆதரவாக வாக்களித்தமையினை அடுத்து, அந்தத் திருத்தத்தை ஆதரித்து வாக்களித்த மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீம் தனிமைப் பட்டுப் போயுள்ளதாக கணிசமானோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர்.

அதேவேளை, 20க்கு ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும், கட்சிக்குத் துரோகமிழைத்து விட்டதாகவும், அந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் விசனம் தெரிவித்து வருகின்றனர்.

20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம். ஹரீஸ், பைசல் காசிம், எம்.எஸ். தௌபீக் மற்றும் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோர் நேற்று நாடாளுமன்றில் வாக்களித்திருந்தனர்.

உண்மையாகவே, இவர்கள் நால்வரும் மு.காங்கிரஸ் தலைவரின் விருப்பத்துக்கு மாறாக வாக்களித்தார்களா என்கிற கேள்வி இங்கு முக்கியமானதாகும்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் 20ஆவது திருத்தத்துக்கு எதிராக வாக்களித்தமையும், ஏனைய உறுப்பினர்கள் நால்வரும் ஆதரவாக வாக்களித்தமையும், அந்தக் கட்சித் தலைவரின் திட்டமிட்ட நடவடிக்கையாகும்.

முஸ்லிம் காங்கிரஸின் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரஊப் ஹக்கீமுடைய விருப்பத்துக்கு மாறாக நடந்து கொண்டாலும், முஸ்லிம் காங்கிரஸின் திருகொணமலை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக் – ஒரு கடுகளவேனும் ஹக்கீமுடைய விருப்பத்துக்கு மாறாக நடக்க மாட்டார் என்பதை, மு.காங்கிரஸில் உள்ளோர் அறிவர். அதற்கு பல காரணங்கள் உள்ளன.

எனவே, 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக எம்.எஸ். தௌபீக் வாக்களித்தமையானது, ஹக்கீமுடைய விருப்பமாகும். முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் 20க்கு ஆதரவாக வாக்களித்தமையானது மு.கா. தலைவரின் விருப்பத்துடன் நடந்த நாடகமாகும்.

முஸ்லிம் காங்கிரஸை அந்தக் கட்சியின் தலைவர் தாரை வார்ப்பதும், விற்று விடுவதும் அடிக்கடி நடக்கும் வழங்கமாகும். அவ்வாறு நடக்கும் போது, அந்தப் பழியை வேறு ஒருவரின் அல்லது சிலரின் தலைகளில் மு.கா. தலைவர் கட்டிவிடுவதும் வாடிக்கையாகும்.

மு.காங்கிரஸின் தவிசாளராக பஷீர் சேகுதாவூத் பதவி வகித்த போது, முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமுடைய தலையைக் காப்பாற்றுவதற்காக, பலமுறை அந்தக் கட்சி தாரை வார்க்கப்பட்டது. அவ்வாறான சந்தர்ப்பங்களில் ஹக்கீமுக்கு பஷீர் உதவப் போய், கட்சி ஆதரவாளர்களிடம் பஷீர் துரோகியான வரலாறுகளும் உள்ளன.

அந்த வகையில் ஹக்கீமுடைய விருப்பத்துடன் 20ஆவது திருத்தத்துக்கு நேற்று ஆதரவளித்த முஸ்லிம் காங்கிரஸின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களும் இப்போதுரோகிகளாக பலிகொடுக்கப்பட்டுள்ளனர்.

மு.கா. தலைவர் ஹக்கீம் மிக நல்ல நடிகர் என்பதைத் தெரிந்தவர்களுக்கு, இந்த விடயங்களைப் புரிந்து கொள்தல் சிரமமாக இருக்காது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்