ஆசிரிய உதவியாளர்கள் ஆர்ப்பாட்டம்; நிரந்தர நியமனம், கொடுப்பனவு நிலுவைகளை வழங்குமாறு கோரிக்கை

🕔 August 27, 2020

– க. கிஷாந்தன்

பெருந்தோட்ட உதவி ஆசிரியர்களாக 2015 ஆம் ஆண்டு நியமனம் பெற்ற சுமார் 600 ஆசிரியர்கள் தமக்கு இதுவரை நிரந்தர நியமனம் வழங்கப்படவில்லை எனத் தெரிவித்து இன்று வியாழக்கிழமை நுவரெலியாவில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

2015 ஆம் ஆண்டு வர்த்தமானி அறிவித்தல் மூலம் ஆசிரிய உதவியாளர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

தங்களுடைய மேற்படிப்பை பூர்த்தி செய்தவுடன் இவர்களை ஆசிரியர்களாக உள்வாங்குவது என தீர்மானிக்கப்பட்டு இவர்களுக்கான பயிற்சிகள் வழங்கப்பட்டன.

இவர்கள் கொட்டகலை யதன்சைட் ஆசிரியர் பயிற்சி கல்லூரி அட்டாளைச்சேனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம் ஆகிய கல்லூரிகளில் தங்களுடைய பயிற்சிகளை 2018ஆம் ஆண்டு நிறைவு செய்து கொண்டார்கள்.

அப்படி நிறைவுசெய்து கொண்ட பலரும் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டு அவர்களுடைய நிலுவை கொடுப்பனவு வழங்கப்பட்டதோடு, அவர்களுக்கான நிரந்தர நியமனமும் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் நுவரெலியாவில் இருக்கின்ற 600 ஆசிரிய உதவியாளர்கள் இன்னும் நிரந்தர ஆசிரியர்களாக உள்வாங்கபடாமல் இருந்து வருகின்றார்கள்.

இவர்களுக்கு வெறுமனே மாதாந்தம் பத்தாயிரம் ரூபா கொடுப்பனவு மாத்திரமே வழங்கப்படுகின்றது.

ஏனைய மாவட்டங்களில் ஆசிரிய உதவியாளர்களாக உள்வாங்கப்பட்டவர்கள் பயிற்சிகளை நிறைவு செய்த பின்பு, அவர்கள் ஆசிரியர்களாக உள்வாங்கப்பட்டு அவர்களுக்கான நிலுவைத் தொகையையும் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

எனவே இந்த ஆசிரியர்கள் தங்களையும் நிரந்தர ஆசிரியர்களாக உள்வாங்கி தங்களுடைய நிலுவைத் தொகையையும் பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்து ஆர்ப்பாட்டத்தில் இன்று ஈடுபட்டனர்.

இது தொடர்பாக ஆசிரியர்கள் கருத்து தெரிவிக்கையில் எங்களுடைய இந்த போராட்டம் வெற்றி அடையாது விட்டால், தாங்கள் எதிர்வரும் காலத்தில் மத்திய மாகாண கல்வி செயலாளரின் காரியாலயத்துக்கு முன்பாக காரியாலயத்தை முடக்கும் வண்ணம் போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் கூறினர்.

மேலும் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பலரும் தங்களுடைய நியமனத்தை நிரந்தரமாக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறி இருந்தாலும், இதுவரை அவர்கள் எதுவிதமான காத்திரமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை எனவும் அவர்கள் குற்றம் சுமத்தினர்.

இதுதொடர்பாக நுவரெலியா வலயக்கல்விப் பணிப்பாளர் அமரசிறி பியதாசவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பிய பொழுது; இன்றைய போராட்டம் தொடர்பாக தனக்கு கடிதம் மூலம் யாரும் அறிவிக்கவில்லை எனவும் ஆனால் இவர்களுடைய நிரந்தர நியமனம் தொடர்பாக மத்திய மாகாண கல்வித் திணைக்களம் நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்