நஸீர் குறித்து தவம் பேசியதாக வெளியான செய்தி: மன்னிப்பு கோருகிறது புதிது

🕔 July 30, 2020

“நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்”: தவத்தின் குரலில், வெளியான ஒலிப்பதிவால் மோதல் நிலை, எனும் தலைப்பில் புதிது செய்தித்தளம் இன்றைய தினம் வெளியிட்ட செய்தி தொடர்பில் மன்னிப்பு கோருகிறது.

குறித்த செய்தியை முஸ்லிம் காங்கிரஸின் முக்கிய பிரமுகரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நஸீருக்கு ஆதரவுகோரும் தேர்தல் பிரசார மேடைகளில் பேசி வருகின்றவருமான ஒருவர்தான் புதிது செய்தித்தளத்துக்கு வழங்கியிருந்தார்.

அந்தக் குரல் தவமுடையதுதானா என்பதை உறுதிப்படுத்திய நாம், அதன் பின்புலம் குறித்து முழுமையாகத் தெரிந்து கொள்ளத்த தவறி விட்டோம். செய்தியை வழங்கியவர் மீதான நம்பிக்கையின் காரணமாக அதனை நாம் வெளியிட நேர்ந்தது.

நஸீர் குறித்து எதிர்க்கட்சியினர் என்ன கூறுகின்றனர் என்பதைத்தான் தேர்தல் பிரசார மேடையொன்றில்; “நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்” என தவம் கூறியிருந்தாரே தவிர, அது அவருடைய கருத்து இல்லை என்பதை, செய்தியை வெளியிட்ட பின்னர் நாம் அறிந்து கொண்டோம். இது குறித்து தவம் பேசிய வீடியோவும் கிடைத்தது.

எவ்வாறாயினும் தவறுகளை ஏற்றுக் கொண்டு திருத்திக் கொள்வதற்கு புதிது செய்தித்தளம் ஒருபோதும் பின்நிற்பதில்லை என்பதனால், குறித்த செய்தி பற்றிய உண்மைத்தன்மையை இங்கு தெரியப்படுத்துவதோடு இந்தச் செய்தியினால் அசௌகரியங்களுக்கு உள்ளான அனைவரிடமும் புதிது செய்தித்தளம் மன்னிப்புக் கோருகிறது.

குறிப்பாக, வேட்பாளர்களான ஏ.எல். தவம் மற்றும் ஏ.எல்.எம். நஸீர் ஆகியோருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக நாம் வருந்துகிறோம்.

இந்த செய்தி வெளியானதை அடுத்து ஒவ்வொருவொருவரும் தத்தமது அறிவு, நாகரீகம் மற்றும் யோசிக்கும் திறன் ஆகியவற்றின் அடிப்படையில் புதிது செய்தித்தளத்தின் பேஸ்புக் பங்கங்களில் கருத்துக்களை எழுதியிருந்தனர்.

அவற்றில் சில மிகவும் அடிமட்டகரமானவையாகவும், கேவலமானதாகவும் அமைந்திருந்தன. அவ்வாறு எழுதப்பட்ட கருத்துக்களில் அதிகமானவை அரசியல்வாதிகளின் அடிமைகளுடையவை என்பதை நேர்மையாகச் சிந்திப்போர் உணர்ந்திருப்பார்கள்.

ஆனாலும், சில வாசகர்கள் உண்மையை உணர்த்தும் வகையில் தமது கருத்துக்களைப் பதிவு செய்திருந்ததோடு, எம்மைத் தொடர்பு கொண்டும் பேசினர். அவர்களுக்கு எமது நன்றிகள்.

புதிது செய்தித்தளம் ஒருபோதும் நேர்மை தவறியதில்லை. ஆனால், புதிது வெளியிடும் சில செய்திகள் சிலருக்கு கசப்பாகவும், ஜீரணிக்க முடியாதவையாகவும் இருக்கும் போது, அவர்கள் புதிது செய்தித்தளத்தை வசை பாடவும், திட்டுவதற்கும் தொடங்குகின்றனர்.

தவறுகளை ஏற்பதும், கசப்பான உண்மைகளை ஜீரணிக்கக் கற்றுக் கொள்வதும்தான் நாகரீகத்தின் தொடக்கப் புள்ளிகளாக அமையும் என்பதை இங்கு நினைவுபடுத்த விரும்புகிறோம்.

தவம் நஸீர் குறித்து பேசிய வீடியோவின் முழு வடிவம்

தொடர்பான செய்தி: “நஸீருக்கு வாக்குகள் இல்லை; தேர்தலில் இருந்து விலக யோசிக்கிறான்”: தவத்தின் குரலில், வெளியான ஒலிப்பதிவால் மோதல் நிலை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்