மஹிந்த அரசாங்கத்துடன் முஸ்லிம் காங்கிரஸ் இணையும்: கட்சியின் பிரதித் தலைவர் ஹாபிஸ் நஸீர் பல்டி

🕔 July 22, 2020

– அஹமட் –

நாடாளுமன்றத் தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முஸ்லிம் காங்கிரஸ் இணைந்து கொள்ளும் என்று, முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவரும், அந்தக் கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ஹாபிஸ் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் இதனைக் கூறினார்.

“மஹிந்த ராஜபக்ஷவுடனும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடனும் முஸ்லிம் காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடத்தி, ஆட்சியை தீர்மானிக்கும் சக்தியாக மீண்டும் முஸ்லிம் காங்கிரஸ் எழும்” என்று அதன் போது அவர் குறிப்பிட்டார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் அரசாங்கத்தை தேர்தல் பிரசார மேடைகளில் முஸ்லிம் காங்கிரஸின் பேச்சாளர்கள் திட்டித் தீர்த்து வரும் நிலையிலேயே இவ்வாறானதொரு விடயத்தை ஹாபிஸ் நஸீர் அஹமட் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம் முஸ்லிம்களுக்கு எதிரானது என்றும், எதிர்வரும் நாடாளுமன்றில் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு ஆட்சியமைத்தால் தமது கட்சி, நாடாளுமன்றில் எதிரணியிலேயே அமரும் எனவும் முஸ்லிம் காங்கிரஸின் முக்கியஸ்தர்கள் தேர்தல் மேடைகளில் பேசி, வாக்கு கேட்டு வருகின்ற நிலையில், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் இவ்வாறு கூறியுள்ளமை கட்சிக்குள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, ‘சக்தி’ தொலைக்காட்சியில் நேற்று செவ்வாய்கிழமை இடம்பெற்ற ‘மின்னல்’ நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மு.காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீமிடம், “தேர்தலின் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு ஆட்சியமைத்தால், அதில் நீங்கள் இணைவீர்களா’ என, நிகழ்ச்சித் தொகுப்பாளர் எழுப்பிய கேள்விக்கு, ஹக்கீம்; “இல்லை” என பதிலளிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அப்படியென்றால், மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைவதற்கு விருப்பமுள்ள மு.காங்கிரஸ் தலைவரின் விருப்பத்தைத்தான், அந்தக் கட்சியின் பிரதித் தலைவர் பகிரங்கமாகத் தெரிவித்துள்ளாரா எனவும் முஸ்லிம் காங்கிரஸுக்குள் கேள்வியெழுப்பப்படுகின்றது.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்