பைசல் காசிம், தவம் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம்: மறைமுகமாகக் கூறினார் நஸீர்

🕔 July 6, 2020

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தொலைபேசி சின்னம் சார்பாக பொதுத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடுகின்வருமான ஏ.எல்.எம். நஸீர்; அவரின் கட்சி சார்பில் போட்டியிடும் முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் ஆகியோருக்கு வாக்களிக்க வேண்டாம் என மறைமுகமாகத் தெரிவித்துள்ளார்.

அட்டாளைச்சேனை அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேள பிரதிநிதிகளுடன் நேற்று முன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின்போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.

தொலைபேசி சின்னத்தில் போட்டியிடும் தனது இலக்கத்துக்கும், அதே சின்னத்தில் போட்டியிடும் பொத்துவிலைச் சேர்ந்த வாஸித் என்பவருக்கும் தமது விருப்பு வாக்குகளை மக்கள் வழங்க வேண்டும் என இதன்போது கூறிய நஸீர்; மூன்றாவது விருப்பு வாக்கை சம்மாந்துறை அல்லது கல்முனையைச் சேர்ந்த தொலைபேசி சின்ன வேட்பாளருக்கு வழங்க முடியும் எனத் தெரிவித்துள்ளார்.

தொலைபேசி சின்னத்தில் சம்மாந்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் போட்டியிடும் அதேவேளை, கல்முனையில் முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் போட்டியிடுகின்றார்.

இம்முறை அம்பாறை மாவட்டத்தில் தொலைபேசி சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸின் 06 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

வீடியோ

Comments