அறுவடைக்கு தயாராகவுள்ள நெற்பயிர் வெள்ளத்தில்; தீர்வு கேட்டு விவசாயிகள் கல்முனையில் ஆர்ப்பாட்டம்

🕔 July 1, 2020

ஏ.எல்.எம். ஷினாஸ்

ல்முனை பிரதேச செயலகத்துக்கு முன்பாக நேற்று செவ்வாய்கிழமை விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் சிறுபோக நெல் அறுவடை மேற்கொள்வதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், மாவட்டத்தின் கல்முனை மற்றும் நற்பிட்டிமுனை பகுதியிலுள்ள சுமார் 13 கண்டங்களிலும் உள்ள வயல் நிலங்களில் நீர் வழிந்தோட முடியாத நிலையில்  நீர் தேங்கிக் காணப்படுகின்றன. இதனால் 15000 ஏக்கருக்கும் மேற்பட்ட நெற் காணிகளில் அறுவடைசெய்ய முடியாத துர்பாக்கிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் குறித்த இந்தப் பிரச்சினைக்கு உடனடி தீர்வை பெற்றுத்தர வேண்டும் இல்லையெனில் தாம் தீக்குழிக்கவும் தயாராக இருப்பதாக தெரிவித்து  நேற்று கல்முனை பிரதேச செயலகத்திற்கு முன்னால் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் – பாதிக்கப்பட்டுள்ள நெற்பயிர்களை அறுவடை செய்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள களப்பு முகத்துவாரத்தை வெட்டி நீரோடுவதற்கு வழி அமைத்து தரவேண்டும் என கோஷம் எழுப்பியவாறு கோரிக்கை விடுத்தனர்.

தகவலறிந்த பொதுஜன பெரமுன கட்சியின்  அம்பாறை மாவட்ட அமைப்பாளரும் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற வேட்பாளருமான டொக்டர் கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க ஆர்ப்பாட்டம் நடைபெற்ற கல்முனை பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து விவசாயிகளின் பிரச்சினைகளை கேட்டு அறிந்து கொண்டதுடன் உடனடி தீர்வை பெறுவதற்காக பிரதேச செயலாளர் எம். எம் நசீர் ஊடாக அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டார்.

நீர்ப்பாசன திணைக்களத்தினால் மட்டக்களப்பு முகத்துவாரத்தை வெட்டுவதற்கு அனுமதி கிடைத்துள்ள போதிலும், சில அரச நிருவாக அதிகாரிகள் தீர்வை பெற்றுக்கொடுக்க முன்வராமல் இருப்பது வேதனைக்குரிய விடயமாகும் என கீர்த்தி ஸ்ரீ வீரசிங்க ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார் .

இந்நிலையில் பிரதேச செயலாளர் மற்றும் கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுஜித் பிரியந்த ஆகியோர் அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டு விடயங்களை தெரிவித்தனர்.

இதனையடுத்து அரசாங்க அதிபர் குறித்த பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக் கொடுப்பதாக உறுதி வழங்கியதை அடுத்து பொலிசாரின் அறிவுறுத்தலுக்கு அமைய ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்

கல்முனைக் கண்டம் , நற்பிட்டிமுனை கீழ் – மேல் கண்டம், ஏத்தாளை நீண்டகரை, பண்டித்தீவு, சேவகப்பற்று மற்றும் மன்டூர் எல்லை போன்ற கண்டங்களிலுள்ள வயல் காணிகளிலேயே இவ்வாறு 04 அடிக்கு மேல் நீர் தேங்கி நின்று பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

லட்சக்கணக்கான முதலீடுகளை செய்து நெற்பயிர் செய்கையில் ஈடுபட்டுள்ள இந்த விவசாயிகளின் நெற்பயிர்கள் தற்போது அழுகி விழுவதுடன் அறுவடை செய்ய முடியாத நிலையும் காணப்படுகின்றன. இந்த நிலை தொடருமாக இருந்தால் சுமார் 2000 கோடி ரூபா நட்டம்  ஏற்படும் என விவசாயிகள் அங்கலாய்க்கின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் முகத்துவாரத்தை வெட்டி நீரை ஓட விடுவதன் ஊடாக ஒருசில மணி நேரத்துக்குள் இந்தப் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுத்தர முடியும் எனத் தெரிவிக்கும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் இதற்கு மறுப்பு தெரிவிப்பதன் மர்மம் புரியவில்லை எனவும் தெரிவிக்கின்றனர்.

இந்த விடயத்தில் சில அரசியல்வாதிகள் தம்மை ஏமாற்றி வருவதாகவும் விவசாயிகள் சுட்டிகாட்டுகின்றனர். இந்தப் பிரச்சினை தொடர்பாக அதிகாரிகளுக்கு பல முறை தெரிவித்தும் இதுவரை தீர்வுகள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்