முஸ்லிம் தலைவர்கள், தலை குனிந்து நிற்கின்றனர்: தே.கா. வேட்பாளர் சலீம்

🕔 June 24, 2020

– முஹம்மட் றிகாஸ் –

கைவிடப்பட்ட மக்களை – கையேற்கும் இயக்கமாக தேசிய காங்கிரஸ் விளங்குறது என, அந்தக் கட்சியின் திகாமடுல்ல மாவட்ட வேட்பாளரும் சட்டம் ஒழுங்கு அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளருமான ஏ.எல்.எம். சலீம் தெரிவித்தார்.

சாளம்பைக்கேணி பிரதேசத்தில் நடைபெற்ற வேட்பாளர் அறிமுக நிகழ்வில் உரையாற்றும்போதே அவர் இதனைக் கூறினார்.

தேசிய காங்கிரஸ் தேசிய தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ்வின் பங்கேற்புடன் இடம்பெற்ற நிகழ்வில் – சலீம் மேலும் தெரிவிக்கையில்;

“முஸ்லிம்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சிகள் பல்வேறு பிரதேசங்களுக்கும் விதவிதமான வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு அவற்றை நிறைவேற்றாது காலத்தைக் கடத்தி வந்தமையால்- அவர்களால் பாதிக்கப்பட்ட பிரதேச மக்கள் தற்போது தேசிய காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து வருகின்றனர்.

இந்த இணைவுகள் பிரதேச, தொகுதி ரீதியான தேவைகளை மாத்திரம் முன்வைத்தவையல்ல. அவற்றுக்கும் அப்பால் தேசிய  ரீதியிலான அபிலாஷைகளை முன்வைத்துச் செய்யப்படுபவை.

தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் அமைச்சராக இருந்த காலப்பகுதியில் இரண்டாயிரம் கோடி ரூபாய் செலவில் நாவிதன்வெளி பிரதேசத்துக்கு குடிநீர்வழங்கல் திட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

ஆனால், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் தலைவர்கள் இருவரும் இணைந்து இவ்வாறான தொகையில் இந்தப் பிரதேசத்துக்கு இதுபோன்ற ஒதுக்கீடுகளைச் செய்துள்ளார்களா? என்பதைக் காண முடியவில்லை.

அது மாத்திரமன்றி இங்கு ஒரு தொழிநுட்பக் கல்லூரியை அமைத்துள்ளதுடன், வீதி  அபிவிருத்தி மற்றும் பாடசாலை கட்டிட அபிவிருத்தி போன்றவற்றையும் அவர் அமைச்சராக பதவி வகித்த காலப்பகுதியில் முன்னெடுத்திருந்தார்.

இவை மட்டுமல்லாது எதிர்காலத்தில் பல்வேறு அபிவிருத்திகளை  இந்தப் பிரதேசங்கள் அடைய வேண்டியுள்ளது. இதற்காக வேண்டி எமது தேசிய காங்கிரஸ் கட்சி சார்பானவர்கள்  திட்டங்களை வகுத்து செயற்படுகின்றனர். இவற்றைச் செய்து முடித்து இந்த மக்களின் தேவைகளை நிறைவு செய்யக்கூடிய தலைமை ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் மாத்திரமே.

தேசிய காங்கிரஸ் தலைமை ஏனைய தலைவர்களைப் போன்று அப்பட்டமான பொய்களைக் கூறி மக்களை ஏமாற்றுகின்ற தலைமையல்ல. முஸ்லிம் தேசியமே எதிர்பார்க்கின்ற முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரேயொரு தலைவர் அதாவுல்லாஹ் என்ற ஆளுமையே.

எதிர்வரும் ஆட்சியில் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக முஸ்லிம்களின் ஏக பிரதிநிதியான தேசிய தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லாஹ் திகழ்வார். தேசிய காங்கிரஸ் கட்சியில் தலைமைத்துவ போட்டிகளிலில்லை. இந்தக் கட்சியுடன் இணைந்துள்ளவர்கள் அனைவரும் சுயநல அரசியலுக்காக அன்றி சமூகத்தின் அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்ற தூய எண்ணத்துடன் பயணிப்பவர்கள்.

ஏனைய கட்சிகள் பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து மக்களை ஏமாற்றிய நிலையில் அவர்களால் அந்த மக்களிடம் முகங்கொடுக்க முடியாத நிலை காணப்படுகின்றது. அது மட்டுமல்லாது அவர்கள் இன்று சமூகத்தின் மத்தியில் தலை குனிந்து நிற்கின்றனர். ஆனால், எமது தேசிய காங்கிரஸ் தலைமையானது கடந்த காலங்களில் நேர்மையான முறையில் நடந்து கொண்டமையால் தலைநிமிர்ந்து அரசியல் செய்கின்றது” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்