அரச உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கும் போது, படம் பிடித்து வெளியிடும் அதிகாரிகள் குறித்து முறையிடத் தீர்மானம்

🕔 June 4, 2020

– அஹமட் –

ரச நிவாரணங்கள் மற்றும் உதவிக் கொடுப்பனவுகளை பிரதேச அரச நிறுவனங்கள் ஊடாக பொதுமக்களுக்கு வழங்கும் போது, அவற்றினை படம் பிடித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் – சில உத்தியோகத்தர்கள் வெளியிடுகின்றமை குறித்து சமூக ஆர்வலர்கள் தமது கண்டனங்ளைத் தெரிவிக்கின்றனர்.

உதாரணமாக கோரோனாவினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசு வழங்கிய 05 ஆயிரம் ரூபா நிவாரண நிதி, பிரதேச செயலகங்கள் ஊடாக பயனாளிகளுக்கு வழங்கப்பட்டபோது, அதனை சில அதிகாரிகள் படம் பிடித்து, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் வெளியிட்டதாகவும், அதனால் பயனாளிகள் பெரும் தர்மசங்கடத்தை எதிர்கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அரசு வழங்கும் நிவாரணங்களை பயனாளிகளுக்கு வழங்கும் அரச உத்தியோகத்தர்கள், ஏதோ தமது பணத்தில் செய்யப்படும் தர்மம் போன்று, அதனைப் படம் பிடித்து வெளியிடுகின்றமை கீழ்தரமான செயற்பாடு எனவும் விசனம் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு வெளியிடப்பட்ட சில படங்களில் பயனாளிகளின் முகங்கள் மறைக்கப்பட்டிருந்தாலும், அவ்வாறு கூட – அந்தப் படங்களை வெளியிடுடக் கூடாது எனவும், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

அரசு வழங்கும் நிவாரணங்களை பயனாளிகளுக்கு வழங்கும் போது படம் பிடித்து, அவற்றினை சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்களில் வெளியிடும் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் அதிகாரிகள் குறித்து, ‘உரிய இடங்களுக்கு’ ஆதாரங்களுடன் முறையிடுவதற்கும் குறித்த சமூக ஆர்வலர்கள் தீர்மானித்துள்ளனர்.

தனிப்பட்டவர்கள் செய்கின்ற தர்மங்களையே, அடுத்தவருக்கு தெரியாமல் செய்ய வேண்டும் என்றுள்ள நிலையில், அரசு வழங்கும் உதவிகளை – ஏழைகளுக்கு சில அதிகாரிகள் வழங்கும் போது, அவற்றினைப் படம் பிடிப்பதும், பின்னர் அவற்றினை பொதுவெளியில் வெளியிடுவதும் மிக மோசமான செயற்பாடு எனவும் சுட்டிக்காட்டப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்