அட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலத்தில் வீதியைக் காணவில்லை: பைசால் காசிம் ஒதுக்கிய 20 லட்சம் ரூபா எங்கே?

🕔 June 2, 2020

– அஹமட் –

ட்டாளைச்சேனை அந்நூர் வித்தியாலயத்தில் உள்ளக வீதியொன்றை நிர்மாணிப்பதற்காக முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் – நிதி ஒதுக்கியுள்ள போதும், அந்தப் பாடசாலையில் அவ்வாறான வீதி எதுவும் நிர்மாணிக்கப்படவில்லை என்கிற விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது.

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம் 2018ஆம் ஆண்டு அந்நூர் வித்தியாலயத்தின் உள்ளக வீதி நிர்மாணத்துக்காக 20 லட்சம் ரூபா நிதியினை ஒதுக்கியிருந்தார்.

ஆயினும் குறித்த பாடாசாலையில் மேற்படி நிதியில் வீதிகள் எவையும் நிர்மாணிக்கப்படாதபோதிலும், ஒதுக்கப்பட்ட பணம் முன்னாள் ராஜாங்க அமைச்சருக்குத் திருப்பி அனுப்பப்படவில்லை.

இதேவேளை, அந்நூர் வித்தியாலய உள்ளக வீதி நிர்மாணத்துக்காக ஒதுக்கப்பட்ட பணத்தில், வேறு அபிவிருத்திகளைச் செய்வதற்கு எழுத்து மூல அனுமதியை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அல்லது அதிகாரிகளுக்கு வழங்கியிருந்தீர்களா என, முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசால் காசிமிடம் ‘புதிது’ செய்தித்தளம் வினவியபோது, தான் அவ்வாறு எந்தவித அனுமதியினையும் வழங்கவில்லை என அவர் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேச செயலகத்தினூடாக, அந்நூர் வித்தியாலயத்துக்குரிய உள்ளக வீதி நிர்மாணத்துக்கான பணம் ஒதுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், அந்நூர் வித்தியாலயத்துக்கு முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசால் காசிம் ஒதுக்கிய 20 லட்சம் ரூபா பணத்துக்கும் என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ளும் பொருட்டு, அட்டாளைச்சேனை பிரதேச செயலாளருக்கு தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், விண்ணப்பம் ஒன்றை அனுப்புவதற்கான நடவடிக்கை ஒன்றினை சமூக ஆர்வலர் ஒருவர் மேற்கொண்டு வருகின்றார்.

இதேவேளை அட்டாளைச்சேனை பிரதேசத்துக்கு கடந்த ஆட்சியின் போது – தான் மேற்கொண்ட அபிவிருத்திகள் தொடர்பிலும், அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள் குறித்தும் விவரிக்கும் கையேடு ஒன்றினை அண்மையில் பைசால் காசிம் வெளியிட்டிருந்தார்.

அந்தக் கையேட்டில், அந்நூர் வித்தியாலய உள்ளக வீதி நிர்மாணத்துக்காக 20 லட்சம் ரூபா நிதி ஒதுக்கியமை பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

அட்டாளைச்சேனையில் வீதி நிர்மாணத்துக்காக மட்டும் 02 கோடியே 60 லட்சம் ரூபாவை கடந்த ஆட்சியில் பைசால் காசிம் ஒதுக்கியுள்ளதாகவும், மேற்படி கையேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, அட்டாளைச்சேனை அபிவிருத்திக்காக மொத்தம் 19 கோடி ரூபா நிதியினை தான் வழங்கியுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக அட்டாளைச்சேனை பிரதேச வைத்தியசாலையில் நிருவாகக் கட்டடத்துடன் கூடிய நோயாளர் விடுதி நிர்மாணத்துக்காக 03 கோடியே 50 லட்சம் ரூபாவையும் தான் ஒதுக்கியுள்ளதாகவும், புதிது செய்தித்தளத்தின் சொல்லதிகாரம் நேர்காணல் நிகழ்சியில் கலந்து கொண்டு பேசும் போது பைசால் காசிம் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்