முஸ்லிம் சமூகத்தைப் பலி கொடுத்துள்ள, ஹக்கீமின் துரோக அரசியல்: ராஜபக்ஷவினரின் கோபத்தின் பின்னணி என்ன?

🕔 May 12, 2020

– முகம்மது தம்பி மரைக்கார் –

(தமிழ் மிரர் பத்திரிகையில் வெளிவந்த ‘சாம்பலில் இருந்து எழும் குரல்கள்’ எனும் கட்டுரையின் சில பகுதிகளே இவையாகும்)

ரசியல் ரீதியாக முஸ்லிம்கள் மீது தற்போதைய ஆட்சியாளர்களுக்கு இருக்கும் கசப்புத்தான் – முஸ்லிம்களின் பிரேதங்களைக் கூட, எரிக்குமளவுக்கு வெறுப்பை ஏற்படுத்தியிருக்கிறது என பலரும் குற்றம்சாட்டுகின்றனர். தொடர்ச்சியாக ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் முஸ்லிம்கள் தமக்கு எதிராக செயற்பட்டார்கள் எனும் ஆத்திரத்தில்தான், இவ்வாறான பழி தீர்த்தலில் ராஜபக்ஷவினர் இறங்கியுள்ளதாகவும் முஸ்லிம்களிடையே புகார்களும் உள்ளன.

ஆனால், ஒரு சமூகம் அல்லது ஒரு சமூகத்தைச் சேர்ந்த பெரும்பான்மையானோர் தனக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக, யாரோனும் ஒருவர் – குறிப்பிட்ட சமூகத்தைப் பழிவாங்குதல் என்பது மிகவும் கீழ்தரமான அரசியல் என்பதில் மாற்றுக் கருத்துகள் இல்லை.

மறுபுறம் “அவ்வாறு தம்மைக் கடுமையாக எதிர்க்கும் ஒரு சமூகத்தை ராஜபக்ஷவினர் பழிதீர்க்க வேண்டுமென்றால், தமிழர்களைத்தானே வஞ்சித்துக் கொண்டிருக்க வேண்டும்? ஏன் முஸ்லிம்கள் மீது கை வைத்தார்கள்” என்கிற கேள்வியினையும் முஸ்லிம் சமூகத்திலுள்ள சிலர் எழுப்புகின்றனர்.

ராஜபக்ஷவினரின் கோபம்

இதற்கு பதிலளிக்கின்றமை போல், முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீனின் புதல்வர் அஸ்ஸுஹூர் இட்டிருந்த ‘பேஸ்புக்’ பதிவொன்றினை இங்கு சுட்டிக்காட்டுதல் பொருத்தமானதாகும். “அரசியல் நெருக்கடி ஏற்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் முஸ்லிம் அரசியல்வாதிகள் வாகனங்களையும் பல மில்லியன் ரூபாய் பணத்தையும் பதவிகளையும் கையூட்டாக பெற்றிராவிட்டால், ராஜபக்ஷ தரப்பினர் – முஸ்லிம்களையும் கௌரவமாக நடத்தியிருப்பார்கள். தீர்க்கதரிசனமில்லாத அரசியல் செய்து, நமது நிலைமையை சிக்கலாக்கிக் கொண்டது – நாமே” என்று, அந்தப் பதிவில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடத் தொடங்கிய 2005ஆம் ஆண்டிலிருந்து அவருக்கு எதிராகவே முஸ்லிம்களில் கணிசமானோர் வாக்களித்து வந்தனர். இறுதியாக கோட்டாபய ராஜபக்ஷ போட்டியிட்ட தேர்தலிலும் – முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் அவருக்கு எதிராகவே வாக்களித்தனர்.

முஸ்லிம்களின் கணிசமான வாக்குகளை தன்வசம் கொண்டிருக்கும் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ்தான், ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக – முஸ்லிம்களை வாக்களிக்கத் செய்வதில் முன்னின்று செயற்பட்டது. கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் கோட்டாவுக்கு எதிராக முஸ்லிம்களை வாக்களிக்கச் செய்ததில் – முஸ்லிம் காங்கிரஸ் கடுமையாக உழைத்தது.  

ஹக்கீம் செய்த துரோகம்

ஆனாலும் 2005 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல்களில் முஸ்லிம் காங்கிரஸின் எதிர்ப்பினையும் மீறி, மஹிந்த ஆட்சி பீடமேறியமை அறிந்ததே. இந்த சந்தர்ப்பங்களிலெல்லாம் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக முஸ்லிம்களை வழிநடத்திய முஸ்லிம் காங்கிரஸ், தமது பேச்சைக் கேட்டு வாக்களித்த முஸ்லிம்களை ‘நட்டாற்றில்’ கைவிட்டு, மஹிந்தவின் அரசாங்கத்தில் இணைந்து கொண்டதோடு, அமைச்சுப் பதவிகளையும் பெற்றுக் கொண்டது.

உதாரணமாக 2005ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராகச் செயற்பட்ட முஸ்லிம் காங்கிரஸ், அதனையடுத்து அமைந்த மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் 2007ஆம் ஆண்டு இணைந்ததோடு, முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம் – துறைமுகங்கள் மற்றும் தொடர்பாடல் ஆகிய துறைகளுக்கான அமைச்சர் பதவியையும் பெற்றுக் கொண்டார்.

பின்னர், 2010ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக முஸ்லிம் சமூகத்தை வழிநடத்தும் செயற்பாட்டில் முஸ்லிம் காங்கிரஸ் இறங்கியது. ஆனால், அந்தத் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவே வெற்றிபெற்றார்.

அதனையடுத்து, மீண்டும் மஹிந்த அரசாங்கத்தில் 2010ஆம் ஆண்டு முஸ்லிம் காங்கிரஸ் இணைந்ததோடு, அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் – நீதியமைச்சர் பதவியையும் மஹிந்த அரசாங்கத்தில் பெற்றெடுத்தார்.

பிறகு – 2015ஆம் ஆண்டிலும் அதே பல்லவி.  அந்த வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலிலும் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து ரஊப் ஹக்கீம் தலைமையிலான முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கியது.

இவை போன்ற வரலாறுகளைத்தான் அஸ்ஸுஹூர் சேகு இஸ்ஸதீன் தனது ‘பேஸ்புக்’ பதிவில் சுட்டிக்காட்டியிருக்கின்றார்.

அரசியல் ரீதியாக மஹிந்தவை முஸ்லிம்கள் எதிர்த்ததில் எந்தத் தவறும் இல்லை. யாரை ஆதரிக்க வேண்டும் என்பது அவரவர் உரிமையாகும்.

முஸ்லிம்களை பலிகொடுத்த மு.கா தலைவர்

ஆனால், மஹிந்த ராஜபக்ஷ களமிறங்கிய ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும், அவரை முஸ்லிம் காங்கிரஸ் எதிர்த்து விட்டு, அந்த ஈரம் காய்வதற்குள் மஹிந்த அமைக்கும் ஆட்சியில் முஸ்லிம் காங்கிரஸினர் ஓடிச் சென்று ஒட்டிக்கொண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்று நன்றாக அனுபவிப்பதும், பிறகு அடுத்து வந்த தேர்தலில் மஹிந்தவுக்கு எதிராக முஸ்லிம் காங்கிரஸ் களமிறங்கியதும், பின்னர் வந்து ஒட்டிக் கொண்டு அமைச்சர் பதவிகளைப் பெற்றதும் மஹிந்த ராஜபக்ஷவின் கணக்கில் அவருக்கு முஸ்லிம்கள் செய்த மிகப்பெரும் துரோகமாகும். அந்தக் கோபம்தான் முஸ்லிம்களின் சடலங்களை எரிக்கும் நிலைவரை அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறது என்பது, முஸ்லிம்களில் ஒரு சாராரின் கருத்தாகும்.

தமிழர்களின் பெரும்பான்மை ஆதரவைப் பெற்றுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பு, மஹிந்த ராஜபக்ஷவை ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தலிலும் எதிர்த்து வந்தமை போலவே, மஹிந்த அமைத்த ஆட்சிகளிலும் பங்கேற்காமல் – ஒவ்வொரு தடவையும் அவர்களுக்கு எதிராகவே நாடாளுமன்றில் அமர்ந்தது. அந்த வகையில், தமிழ்கள் அரசியல் ரீதியாக தமக்கு எதிராளிகளாக இருந்தார்களே தவிர, துரோகிகளாக இருக்கவில்லை என்பது – மஹிந்த தரப்பின் பார்வையாக இருக்கிறது என்கிற கருத்துக்களும் அரசியலரங்கில் உள்ளன.

அதனால்தான் பிரதமர் தலைமையில் அலறி மாளிகையில் சில நாட்களுக்கு முன்னர் நடந்த கூட்டமொன்றில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பங்கேற்ற போது, அவர்களை மரியாதையாக மஹிந்த நடத்தினார் என்றும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அங்கு முன்வைத்த எழுத்து மூலக் கோரிக்கைகள் கொண்ட ஆவணத்தை – மறுப்பின்றி மஹிந்த பெற்றுக் கொண்டார் எனவும் கூறப்படுகிறது.

ஆக, ‘முஸ்லிம்கள் மீது ராஜபக்ஷவினர் இவ்வாறானதொரு ஆத்திரம் கொள்ளும் நிலைக்கு, அந்தச் சமூகத்தினைக் கொண்டு வந்து நிறுத்திய அரசியல் செயற்பாடுகள் எவை’ என்பதையும் முஸ்லிம் மக்கள் புரிந்து கொள்தல் வேண்டும்.

சாம்பலில் இருந்து எழும் குரல்கள்’ கட்டுரையை முழுவதும் வாசிப்பதற்கு: சாம்பலில் இருந்து எழும் குரல்கள்

Comments