ஜனாதிபதி செயலாளரின் கோரிக்கையை, அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது: செயலாளர் பைஸர்

🕔 May 8, 2020

– முன்ஸிப் அஹமட் –

ரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை வழங்குமாறு ஜனாதிபதி செயலாளர் பி.பி. ஜயசுந்தர கேட்டிருப்பது, முறையற்றதும் வெறுக்கத்தக்கதுமான கோரிக்கை என்றும், இதனை அஞ்சல் திணைக்கள உத்தியோகத்தர்கள் சங்கம் வன்மையாகக் கண்டிப்பதாகவும், அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் யூ.எல்.எம். பைஸர் தெரிவித்தார்.

அஞ்சல் திணைக்கள ஊழியர்கள் ஏற்கனவே 2.2 கோடி ரூபாய் நிதியை, தமது ஏப்ரல் மாத சம்பளத்தில் சேகரித்து, ஜனாதிபதி ஆரம்பித்துள்ள நிதியத்துக்கு வழங்கியுள்ள நிலையில், மீண்டும் அரச ஊழியர்களிடம் பி.பி. ஜயசுந்தர இவ்வாறு கோரிக்கை விடுத்திருப்பது நியாயமற்றது எனவும் அவர் கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அரசு ஊழியர்கள் தங்களது மே மாத சம்பளத்தை முழுவதுமாகவோ அல்லது ஒரு வாரத்துக்குரியதாகவோ அல்லது ஒரு நாள் சம்பளத்தையோ வழங்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர கோரியிருந்தார்.

இதை ஆரம்பத்தில் அவர் ஒரு விதமாக கூறிவிட்டு, இப்போது ஓய்வூதியத் திணைக்களத்துக்கு வழங்குவதற்கான பணம் போதாமல் இருக்கிறது, அதனால் மே மாத சம்பளத்தை தாருங்கள் என்று கேட்கின்றார்.

உண்மையிலேயே இது நியாயம் இல்லாத ஒரு கோரிக்கையாக இருக்கிறது.

ஏனென்றால், அரசு ஊழியர்களில் அதிகமானோர் தங்கள் மாதாந்த சம்பளத்தை நம்பி வாழ்கின்றார்கள். அதே போன்று அவர்கள் ஏற்கனவே கடைகளில் பொருட்களை வாங்கி – மாத சம்பளம் வந்தவுடன் அந்த கடனை இறுக்கின்றவர்களாகத்தான் இருக்கின்றார்கள். அதன் பின்னர் சம்பளத்தில் ஒரு சிறு தொகையை வைத்துக் கொண்டுதான் அந்த மாதத்தையே ஓட்டிக் கொண்டிருப்பார்கள்.

இவ்வாறிருக்கும் நிலையில், ஜனாதிபதி செயலாளரின் இந்தக் கோரிக்கையானது முறையற்றதும் வெறுக்கத்தக்கதாகவும் உள்ளது. இதனை எங்கள் சங்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.

அஞ்சல் திணைக்களத்தைப் பொறுத்தவரையில் எமது ஊழியர்கள் கடந்த ஏப்ரல் மாதத்தின் ஒரு நாள் சம்பளத்தை வழங்கியுள்ளோம். 2.2 கோடி ரூபா பணம் இதன் மூலம் ஜனாதிபதியினால் ஆரம்பிக்கப்பட்ட நிதியத்துக்கு வழங்கப்படுவதற்குரிய ஏற்படுகள் செய்யப்படுகின்றன.

ஏனைய அரச நிறுவனங்களும் இப்படிச் செய்திருக்கின்றன.

இவ்வாறான நிலையில் – மீண்டும் ஒரு மாதச் சம்பளத்தை அல்லது அதில் ஒரு பகுதியை கேட்பது எவ்வாறு நியாயமாகும்” எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

தொடர்பான செய்தி: மே மாத சம்பளத்தை வழங்குமாறு அரச ஊழியர்களிடம் பி.பி. ஜயசுந்தர கேட்டமை, அரசாங்கத்தின் கோரிக்கையல்ல: பந்துல விளக்கம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்