ஓய்வு பெறுகிறார் மாவட்ட காணி பதிவாளர் ஜமால் முகம்மட்: ‘பிரிந்தும் பிரியாமல்’

🕔 May 6, 2020

– மப்றூக் –

ல்முனை காணிப் பதிவகத்தில் – மாவட்ட காணி பதிவாளராக கடமையாற்றி வந்த எம்.ஏ. ஜமால் முகம்மட், எதிர்வரும் 10ஆம் திகதி ஓய்வு பெறுகிறார்.

இம்மாதம் 07ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை, விடுமுறை மற்றும் வார இறுதி நாட்களாக உள்ளமையினால், அவர் கடமைமையாற்றும் இறுதி நாளாக இன்று புதன்கிழமை அமைந்துள்ளது.

அம்பாறை மாவட்டம் மருதமுனையைச் சேர்ந்த ஜமால் முகம்மட் பிரபல்யமான உதைப்பந்தாட்ட வீரர், மருமமுனை ‘கோல்ட் மைன்ட்’ விளையாட்டுக் கழகத்தின் ஸ்தாபகர், மிகச் சிறந்த கலை ஆர்வலர்.

கல்முனை காணிப் பதிவகத்தில் அவருக்கான கண்ணாடி அறையினுள் நுழையும் எவரும் – அந்த அறையின் வெளியிலும், உள்ளேயும் அவர் எழுதிக் காட்சிப்படுத்தியுள்ள பழமொழிகளையும், அறிஞர்களின் பொன்மொழிகளையும் கவனிக்காமல் வந்திருக்க மாட்டார்கள்.

ஜமால் முகம்மட் பழகுவதற்கு மிகவும் நல்ல மனிதர், மனித நேயம் மிக்கவர், நேர்மையான அரச அதிகாரி.

எப்போதும் ஒரு வானொலி அவரின் அலுவலக அறையினுள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். நடப்பு விவகாரங்கள் பற்றிய தகவல்களை விரல் நுனியில் அவர் வைத்திருப்பார்.

33 வருடங்கள் அரச சேவையில் கடமையாற்றி விட்டு, தான் ஓய்வு பெறும் நிலையில்; ‘பிரிந்தும் பிரியாமல்’ எனும் தலைப்பில், தான் கடந்து வந்த பாதையினை எழுத்தில் நினைத்துப் பார்த்திருக்கிறார் ஜமால் முகம்மட்.

அவர் எழுதியுள்ள அந்த வரிகளை இங்கு வழங்குகின்றோம்.

“எனது அரசசேவைக்கு அகவை முப்பத்து மூன்று. எதிர்வரும் 2020.05.10ஆம் திகதி ஓய்வுநிலைக்கு உரியவனாகின்றேன். இதனையொட்டியே அன்பான உங்களிடம் இதயம் திறந்து இயம்ப விரும்புகின்றேன்.

எனது அரச சேவையின் சிறிய படகு இலங்கையின் வடபுல மன்னார் கச்சேரியிலே 01.04.1987ல் வெள்ளோட்டம் ஆனது. அக்கால இலங்கையின் அசாதாரண சூழலில் ஒன்பது மாதங்கள் அங்கே பணியாற்றக் கிடைத்தது. அப்போது அங்கே அரச அதிபராய் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மர்ஹும் எம்.எம். மக்பூல் அவர்கள் கடமையிலிருந்தார். யாழ் மண்ணின் மைந்தர்கள் மற்றும் உயரதிகாரிகளின் உறவும், மன்னார் வாழ் மகிழ்வான நண்பர்கள் தொடர்பும் என்றும் என் நெஞ்சில் நீங்கா நினைவுகள்.

பின்பு 04 வருடங்கள் மட்டக்களப்பு கச்சேரியில் மாவட்ட காணிப் பதிவகத்தில் கடமை தொடர்ந்தது. அவ்வேளை நாட்டில் நிலவிய போர்ச்சூழலால் மரணமடைந்தவர்களின் இறப்புக்களை பதிவு செய்யும் நடவடிக்கையினை, அப்போதைய எனது மேலதிகாரியும் ஓய்வுநிலை வட – கிழக்கு உதவிப் பதிவாளருமான உயர் திரு எஸ். முத்துக்குமாரன் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலில் நான் மேற்கொண்டேன்.

எனது சிறப்பான துரித நடவடிக்கை தொடர்பில் பாராட்டி மட்டக்களப்பு பிரஜைகள் குழுவினரால் வழங்கப்பட்ட பாராட்டுப் பத்திரம் தொடர்பில் மகிழ்வுடன் உள்ளேன்.

பின்பு 03 வருடங்கள் கல்முனை காணிப்பதிவகத்தில் கடமையாற்றும் வாய்ப்புக் கிடைத்தது

நாட்டில் பிரதேச செயலக நடைமுறை ஏற்படுத்தப்பட்டதன் நிமிர்த்தம், கல்முனை பிரதேச செயலகத்தின் பதிவாளர் பிரிவுக்குப் பொறுப்பான மேலதிக மாவட்டப் பதிவாளராக 12 வருடங்களுக்கு மேலான காலம் கடமையாற்றியமை கண்ணுக்குள் இன்னும் அப்பிக் இருக்கிறது.

அக்காலம் போர் மேகங்கள் வட்டமிட்ட பொறுப்பான காலம். அப்போது விவாக, பிறப்பு மற்றும் இறப்பு பதிவுகள் கைகளாலே எழுதப்பட்டு வழங்கப்பட்டு வந்தன.

விண்ணப்பித்து பத்து நிமிடங்களுக்குள் பதிவுகளை வழங்கி மேலதிகாரிகளின் நன்மதிப்பையும் பொதுமக்களின் அபிமானத்தையும் பெற்றுக் கொண்டதை இவ்வேளையில் திருப்தியுடன் நினைத்துப் பார்க்கின்றேன்.

2001ம் ஆண்டு சாய்ந்தமருது பிரதேச செயலகம் உருவாக்கப்படும் வரை, கல்முனை பிரதேச செயலகத்தின் கீழேயே சாய்ந்தமருது நிர்வாகம் இருந்து வந்தது.

2005ல் பதிவாளர் சேவைக்குள் உள்வாங்கப்பட்டேன்.

2007.07.05 தொடக்கம் 2016.01.01 வரை கல்முனை காணி மாவட்டப் பதிவகத்துக்கு காணிப்பதிவாளராக நியமிக்கப்பட்டேன்.

இவ்வேளையில் என்னை ஆற்றுப் படுத்தி ஆலோசனைகள் வழங்கிய ஓய்வு நிலை மேலதிகப் பதிவாளர் நாயகம் உயர்திரு என். சதாசிவ ஐயர் அவர்களை நன்றியுடன் நினைவு படுத்திக் கொள்கின்றேன்

நான் பொறுப்பேற்கும் போது காணிப்பதிவகத்தின் புறச்சூழல் உட்கட்டமைப்பு எவ்வாறிருந்தது? பிரசித்த நொத்தாரிசுகளின் செயற்பாடுகள் எவ்வாறு இருந்தன? என்பதை பலரும் அறிவர். அவற்றையெல்லாம் மாற்றி அமைப்பதில் பல துன்பங்களையும் வேதனைகளையும் நான் சந்தித்தாலும், சட்டத்தரணிகள் மற்றும் பிரசித்த நொத்தாரிஸ்மார்களின் நல்லுறவும் அபிமானமும் அன்பும் கிடைத்தமையும், கூடவே பொதுமக்கள் நல்லபிப்பிராயம் நாடிவந்தமையும் மன மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அவ்வேளை கிழக்கு வலய உதவிப் பதிவாளர் நாயகமாக பதவி வகித்த என்.எம். நயீம் அவர்கள் என்னை தைரியப் படுத்தி தட்டித் தந்து ஊக்கமுடன் உற்சாகப்படுத்தி, நான் அலுவலகத்தை அழகுபடுத்தி முன்னெடுக்க எனக்கு அரணாக இருந்தார். இவ்வேளையில் அவரை தாராளமாக நினைவு கூர்கின்றேன்.

2016 ஜனவரி – மார்ச் வரை 03 மாதங்கள் நெல்வளம் கொழிக்கும் நிந்தவூர் மண்ணின் பிரதேச செயலகத்திலும், 2016 ஏப்ரல் தொடக்கம் 2019 ஏப்ரல் வரை 03 வருடங்கள் நன் மனம் நிறை நண்பர்கள் கொண்ட சந்தணக்காற்று வீசும் சாய்ந்தமருது பிரதேச செயலகத்திலும் மேலதிக மாவட்டப் பதிவாளராகக் கடமை புரிந்தேன்.

கடந்த 2019.05.10ம் திகதியிலிருந்து, ஓய்வு பெறும் நாள் வரையில் சரியாக ஒருவருடம் மீண்டும் கல்முனை காணிப் பதிவகத்தில் காணி மாவட்டப் பதிவாளராக (RL&ADR) கடமையாற்றி ஓய்வுநிலைக்கு வரவிருக்கின்றேன்.

என் அந்திம சேவைக்காலத்தில் உலகையே உலுக்கும் கொவிட் 19 எனும் கொறோனா தொற்று நம் நாட்டிலும் ஆட்கொண்டிருப்பது துரதிஸ்டம் நிறைந்த சோதனை என்பதை நினைக்கையில் மனம் வேதனை அடைகின்றது. கிட்டத்தட்ட ஒருமாதகாலம் அலுவலக தொடர்பு அற்ற நிலையில் காலம் கழிந்தது.

எனது சேவைக்காலத்தில் கிழக்கு வலய உதவிப் பதிவாளராக சிறிது காலம் செல்வி ஆனந்தி ஜெயரெட்ணம் அவர்கள் கடமை புரிந்தார்கள். அவர் சிறப்பான ஆலோசனை வழங்கியது மட்டுமல்லாமல் கல்முனை காணி மாவட்டப் பதிவகத்தை ஆழமாக நேசித்தார் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன்.

தற்போது கிழக்கு வலய உதவிப் பதிவாளராக கடமைபுரியும் திரு கே. திருவருள் அவர்களுடன் எனது கடைசி ஒருவருடத்தை கழிக்க முடிந்தது. அவரும் எனது பணிக்கு ஆதரவாகவும் பக்கபலமாகவும் இருந்தார். மேலும் எனது கடமை தொடர்பில் திருப்தியுடனுள்ளார். அவருக்கும் நான் நன்றியுடையவனாகவுள்ளேன்

நான் இவ் அலுவலகத்தை 2007ல் பொறுப்பேற்கும்போது 46 பிரசித்த நொத்தாரிசுகள்/சட்டத்தரணிகள் இணைக்கப் பட்டிருந்தனர். தற்போது 157 பேர் இணைக்கப்பட்டுள்ளனர். பிரசித்த நொத்தாரிசுகள்/சட்டத்தரணிகள் பெரும்பாலானவர்கள் என்னுடன் அன்பு கலந்த மாண்பான உறவுடன் இருப்பதையிட்டு பெருமை கொள்வதுடன் மன மகிழ்ச்சியுடன் உள்ளேன்

முறையற்ற சம்பாத்தியம் மிகமிக இலகுவாக கிடைக்கப் பெறும் இடத்தில் – ஒட்டு மொத்தமாக 10 வருடங்கள் கடமையாற்றிய போதும், நீதியற்ற வருமானங்களைப் பெற்றுக் கொள்ளாமல் அதிலிருந்து விலகிச் செல்கின்றமையை எண்ணி பெருமகிழ்வும் ஆனந்தமும் அடைகின்றேன்

எனது சேவைக்காலத்தில் என்னுடன் கடமையாற்றி விவாக, பிறப்பு, இறப்பு பதிவாளர்கள் கௌரவ காதி நீதிவான்கள் மற்றும் உடன் கடமையாற்றிய உத்தியோகத்தர்கள் அலுவலக உதவியாளர்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றிகளை தெரியப் படுத்துகின்றேன்.

மே மாத ஆரம்பத்தில் அதிக விடுமுறைகள் வந்துள்ளதால் எனது கடமையின் இறுதி நாளாக 06.05. 2020 அமைகிறது.

எனது கடமைக் காலத்தில் என்னால் தெரிந்தோ, தெரியாமலோ ஏதாவது சிறிய தவறுகள் மனக்கசப்புக்கள் நடந்திருந்தால், அவற்றினைப் பெரிதுபடுத்த மாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் உங்களின் மேலான அன்பையும் உறவையும் விட்டுப் பிரிந்தும் பிரியாமல் செல்கின்றேன்”.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்