நாடாளுமன்றத் தேர்தல்; மாற்றுத் திகதியை தீர்மானிக்கும் அதிகாரம், ஆணைக்குழுவுக்கே உள்ளது: மஹிந்த தேசப்பிரிய

🕔 April 20, 2020

நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியாமல் போயுள்ள நிலையில், அதற்கான மாற்றுத் திகதியொன்றை முடிவு செய்வதற்கான அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது என, அதன் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

தனது பேஸ்புக் பக்கத்தில் இந்த விடயத்தை அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏப்ரல் 25ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஏற்பட்ட அசாதாரண நிலை காரணமாக, தேர்தலை நடத்த முடியாத நிலை உருவாகியது.

இதன் காரணமாக இவ் விவகாரம் தொடர்பில் உச்ச நீதிமன்றத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளுமாறு, ஜனாதிபதிக்கு தேர்தல்கள் ஆணைக்குழு – கடிதமொன்றின் மூலம் கோரிக்கை விடுத்தது.

ஆயினும், இது விடயத்தில் நீதிமன்றின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ள வேண்டிய தேவையில்லை என, தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஜனாதிபதியின் செயலாளர் பதில் கடிதமொன்றை எழுதியிருந்தார்.

இந்த நிலையில் பொதுத் தேர்தலை நடத்துவதற்கான மாற்றுத் திகதியொன்றை அறிவிக்கும் அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளது எனத் தெரிவித்து, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, அறிக்கையொன்றை வெளியிட்டிருந்தார்.

இந்தப் பின்னணியிலேயே, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கான மாற்றுத் திகதியைத் தீர்மானிக்கும் அதிகாரம், தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு உள்ளதாக மஹிந்த தேசப்பிரிய தெரிவித்திருக்கிறார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்