எனது தம்பியை கைது செய்தமை அரசியல் பழிவாங்கல்; இந்த அநீதிக்கு எதிராக சட்ட நடிவடிக்கை எடுப்போம்: றிசாட் பதியுதீன்

🕔 April 15, 2020

– முன்ஸிப் அஹமட் –

னது சகோதரர் றியாஜ் பதியுதீன் அநியாயமாகக் கைது செய்யப்பட்டமைக்கு எதிராக, சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக உள்ளதாக, முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, தானோ தனது குடும்பத்தினரோஅல்லது சகோரர்களோ ஈஸ்டர் தாக்குதலுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் என்பதை உறுதியாக நான் கூறிக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பேஸ்புக் ஊடாக வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் இந்த விடயங்களைக் கூறியள்ளார்.

“எனது சகோதரர் ரியாஸ் பதியுதீன் புததளம் பகுதியில் அவர் வீட்டில் இருந்த பொழுது, நேற்று சி.ஐ.டியினர்அங்கு சென்று, ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்துடன் அவர் சம்பந்தப்பட்டுள்ளார் எனச் சந்தேகிப்பதாக கூறி, அவரை கைது செய்ததாக ஊடகங்களின் ஊடாக தெரியப்படுத்தினார்கள்.

இந்தக் கைதில் நடைபெற்றுள்ள அநியாயம் சம்பந்தமாகவும், இந்த அநீதிக்கும் பழி வாங்கலுக்கும் எதிராகவும் நாங்கள் நிச்சயமாக சட்ட நடவடிக்கை எடுக்கத் தயாராக இருக்கிறோம்.

நான், எனது குடும்பத்தினர் அல்லது சகோரர்கள் ஈஸ்டர் தாக்குதலுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவர்கள் என்பதை நான் உறுதியாக நான் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.

நாட்டில் பயங்கரவாதம் உருவாவதற்கு ஒருபோதும் நாங்கள் அனுமதிக்க மாட்டோம், அதற்கு உதவவும் மாட்டோம். அதற்கு எதிராகவே நாங்கள் எல்லாக் கட்டங்களிலும் செயல்பட்டிருக்கிறோம், செயல்படுவோம்.

ஆனால் இந்த பயங்கரவாத சம்பவத்தோடு எனது சகோதரரை சம்பந்தப்படுத்தி, இவ்வாறான ஒரு செயலைச் செய்திருப்பது என்னுடைய அரசியல் மீது கொண்டிருக்கின்ற காழ்ப்புணர்ச்சியினால் என்றுதான் நான் நம்புகிறேன்.

பாதுகாப்பு தரப்பினர் நடத்துகின்ற விசாரணைக்கு எம்முடைய பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டியது எனது கடமை என்ற வகையில், எமது சகோதரர் பூரண ஒத்துழைப்பை இந்த விசாரணைகளுக்கு வழங்குவார்

ஆனால் விசாரணை முடிவதற்கு முன்னர், அவரைக் கைது செய்த மறு நிமிடத்திலிருந்து, அவர் ஏதோ அந்தப் பயங்கரவாதச் சம்பவத்தோடு சம்பந்தப்பட்டவர் என்ற ரீதியில், பொய்யான செய்தியை நாடு முழுவதும் சில இனவாத ஊடகங்கள் முன்னெடுத்துச் செல்கின்றன.

இதற்கு முன்னரும், அந்த பயங்கரவாத சம்பவம் நடந்த நிமிடத்திலிருந்து, அதனுடன் றிசாட் பதியுதீன் சம்பந்தப்பட்டிருக்கிறார் என்று, என் மீதும் அபாண்டங்களை சுமத்தினார்கள்.

எங்களுடைய அரசியல் கருத்துக்கு மாறாக இருந்தவர்கள், கடந்த காலங்களிலே அவர்களுடைய அரசியல் நடவடிக்கைகளுக்கு நாங்கள் உதவி செய்யவில்லை என்ற காரணத்தினால், சில அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக அந்த ஏப்தல் 21 தாக்குதல் சம்பவத்தோடு என்னை சம்பந்தப்படுத்தி பேசினார்கள். பிழையான பிரசாரங்களை அரசியல் ரீதியாக முன்னெடுத்தார்கள்.

அதனையடுத்து பொலிஸ் மா அதிபர் – மூன்று விசேட பொலிஸ் குழுக்களை அமைத்து, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடாக; “அந்தத் தாக்குதலுடன் இவர்களுக்கு சம்பந்தம் இருந்தால், அது சம்பந்தமாக தகவல்கள் உங்களிடம் இருந்தால், நீங்கள் வந்து பொலிஸில் முறைப்பாடு செய்யலாம்” எனக்கூறி, இந்த நாட்டிலுள்ள 20 மில்லியன் மக்களுக்கும் கால அவகாசம் கொடுத்திருந்தார்.

இதனையடுத்து நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டன. அதனை விசாரணை செய்வதற்காக மூன்று விசேட பொலிஸ் குழுக்கள் பொலிஸ் மா அதிபரால் நியமிக்கப்பட்டன. அந்தத் தாக்குதல் தொடர்பில் வழங்கப்பட்ட அத்தனை விடயங்களும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டன.

அதன் பிறகு, அந்த பயங்கரவாத சம்பவத்துடன், அல்லது எந்த பயங்கரவாத சம்பவத்தோடும் றிசாட் பதியுதீன் சம்பந்தப்படவில்லை என்பதை, நாடாளுமன்றத்துக்கு இன்றிருக்கின்ற பதில் பொலிஸ் மா அதிபர்தான் அன்றும் இருந்து – எழுத்து மூலமாக வழங்கியிருந்தார்.

நாடளுமன்ற தெரிவுக்குழு அறிக்கையிலே, அந்தக் கடிதமும் தகவல்களும் சொல்லப்பட்டிருக்கின்றன.

அந்த வகைியல், என்னுடைய சகோதரர் றியாஜ் பதியுதீனோ, அல்லது எனது குடும்பத்தினரோ இந்த பயங்கரவாத சம்பவத்தோடு சம்பந்தப்பட்ட இருக்க மாட்டார்கள் என்பதை உறுதியோடு சொல்ல விரும்புகின்றேன்” என்றும் றிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: முன்னாள் அமைச்சர் றிசாட் பதியுதீனின் சகோதரர் கைது

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்