மு.கா. தலைவருடன் ஹரீஸ் முரண்பாடு: வேட்பு மனுவில் கையெழுத்திடாமல் தலைமறைவாகி விட்டார் என்கிறது கட்சி வட்டாரம்

🕔 March 18, 2020

– மரைக்கார் –

ம்பாறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ், கட்சித் தலைவர் ரஊப் ஹக்கீமுடன் முரண்பட்ட நிலையில், வேட்புமனுவில் கைச்சாத்திடாமல் தலைமறைவாகி உள்ளதாகத் தெரிய வருகிறது.

ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிடவுள்ள மு.கா. வேட்பாளர்களில் 05 பேர் நேற்றிரவு கையெழுத்திட்ட போதும், முன்னாள் ராஜாங்க அமைச்சர் எச்.எம்.எம். ஹரீஸ் இதுவரை வேட்பு மனுவில் கையெழுத்திடாமல் தலைமறைவாகி உள்ளதாகக் கூறப்படுகிறது.

அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 06 வேட்பாளர்களை நிறுத்துவதென அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் எடுத்த தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தே, வேட்பு மனுவில் கையெழுத்திடாமல் ஹரீஸ் இவ்வாறு தலைமறைவாகியுள்ளார் என, மு.காங்கிரஸ் வட்டாரங்கள் கூறுகின்றன.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 06 வேட்பாளர்களை களமிறக்கினால், தன்னால் வெற்றி பெற முடியாமல் போகும் என, ஹரீஸ் அஞ்சுகிறார் என்று, அந்தக் கட்சியின் அம்பாறை மாவட்ட பிரமுகர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்துக்குக் கூறினார்.

ஹரீஸ் பிரதிநிதித்துவப்படுத்தும் கல்முனைத் தொகுதியிலுள்ள சாய்ந்தமருது பிரதேசம் ஏற்கனவே ஹரீஸைப் புறக்கணித்து, பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு தெரிவிப்பதென தீர்மானம் மேற்கொண்டுள்ளதால், எதிர்வரும் தேர்தலில் ஹரீஸின் வெற்றி கேள்விக்குரியதாக மாறியிருந்தது.

இதேவேளை, கல்முனையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம். ஜவாத், சட்டமுதுமாணி வை.எல்.எஸ். ஹமீட் ஆகியோர் போட்டியிடுவதும், ஹரீஸுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், மு.காங்கிரஸ் சார்பாக 06 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், தன்னால் வெற்றிபெற முடியாமல் போகும் என்று, ஹரீஸ் அச்சப்படுகின்றார் எனவும், மேற்படி மு.கா. பிரமுகர் தெரவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக முன்னாள் ராஜாங்க அமைச்சர் பைசல் காசிம், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஐ.எம். மன்சூர், ஏ.எல்.எம். நஸீர், பொத்துவில் பிரதேச சபைத் தவிசாளர் எம்.எஸ். அப்துல் வாஸித் மற்றும் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஏ.எல். தவம் ஆகியோர் நேற்றிரவு வேட்புமனுவில் கையெழுத்திட்டனர்.

பிந்திக் கிடைத்த செய்தி

ற்று முன்னர் மு.கா. தலைவர் ரஊப் ஹக்கீமுடைய கொழும்பு வீட்டுக்கு முன்னாள் ராஜாங்க அமைச்சர் ஹரீஸ் சமூகமளித்திருந்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மு.கா. சார்பில் போட்டியிடுவோர் வேட்பு மனுவில் கையெழுத்திடும் நிகழ்வு, மு.கா. தலைவரின் வீட்டில் இடம்பெற்றது.

இதன்போது ஹரீஸும் சமூகமளித்திருந்தார்.

ஹக்கீம் வீட்டுக்கு ஹரீஸ் சமூகமளித்த போது…

Comments

புதிது பேஸ்புக் பக்கம்