சௌதி அரேபியருக்கு கொரோனா தொற்று: ஈரானிலிருந்து பஹ்ரைன் வழியாக வந்ததாக தெரிவிப்பு

🕔 March 3, 2020

சௌதி அரேபியாவில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பதை அந்த நாடு உறுதி செய்துள்ளது.

ஈரானிலிருந்து பஹ்ரைன் வழியாக சௌதிக்குள் நுழைந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

சௌதி அரேபியாவைச் சேர்ந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை இதுவே முதல்முறை.

அந்நாடு முன்பே கொரொனா தம் நாட்டிற்குள் நுழையாமல் இருக்கப் பல முயற்சிகளை எடுத்திருந்தது. ஹஜ் பயண விசாவையும்கூட ரத்து செய்திருந்தது.

ஈரானிலிருந்து பஹ்ரைன் வழியாக

பஹ்ரைன் வழியாக சௌதிக்குள் நுழையும்போது, அந்த நபர் சமீபத்தில் ஈரானுக்குச் சென்றுவந்ததை மறைத்ததாகச் சௌதியின் சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

”முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக தொற்றுநோய் தடுப்பு குழுவை நாங்கள் அனுப்பி அந்த நபரை சோதனை செய்தோம். அவரிடம் இருந்து எடுக்கப்பட்ட ரத்த மாதிரிகளை ஆய்வகத்தில் சோதனை செய்தபோது, அந்த நபருக்கு கோவிட் 19 வைரஸ் தொற்று இருப்பது தெரியவந்தது. அந்த நபரை தற்போது மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைத்திருக்கிறோம். அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது” என சுகாதாரத்துறை அமைச்சு கூறியுள்ளது.

சௌதியைச் சேர்ந்த அந்த நபரோடு தொடர்பிலிருந்த மற்றவர்களிடம் இருந்து ரத்த மாதிரிகளை எடுத்து சோதனைக்கு அனுப்பியிருக்கிறோம். முடிவுகளுக்காகக் காத்திருக்கிறோம் எனவும் சௌதி தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்