கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மருத்துவமனைக்கு, சீன ஜனாதிபதி விஜயம்: இறந்தோர் தொகை ஆயிரத்தை தாண்டியது

🕔 February 11, 2020

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங் – தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்கு சென்று கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ பணியாளர்களுடன் கலந்துரையாடியுள்ளார்.

இது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த சீனாவையும் புரட்டிப்போட்டு கொண்டிருக்கும் சூழ்நிலையில், மிகவும் ஆச்சரியமான, அந்த நாட்டு ஜனாதிபதியின் இந்த செயற்பாடு பார்க்கப்படுகிறது.

முகமூடி அணிந்திருந்த ஷி ஜின்பிங், மருத்துவமனை மட்டுமின்றி, பெய்ஜிங்கில் உள்ள சமுதாய நலக் கூடம் ஒன்றிற்கும் சென்றார். அப்போது அவரது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்பட்டது.

2002 – 2003ஆம் ஆண்டுகளில் சீனாவில் பலத்த உயிர் சேதத்தை ஏற்படுத்திய சார்ஸ் வைரஸை விட வீரியம் மிக்க கொரோனா வைரஸால் சீனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.

இதன்போது, கொரோனா வைரஸுக்கு எதிராக இன்னும் “தீர்க்கமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று ஷி வலியுறுத்தினார்.

ஒவ்வொரு வாரமும் கொரோனா வைரஸின் பாதிப்பு அதிகரித்து கொண்டே வரும் நிலையில், இதற்கு முன்பு வரை ஷி ஜின்பிங் பொதுவெளியில் தோன்றாமல் இருந்து வந்தார்.

கொரோனா வைரஸ் பரவலின் மையப்புள்ளியாக விளங்கும் வுஹான் நகரில் இந்த புதிய வைரஸ் பரவல் குறித்து முதன்முதலில் தெரிவித்த மருத்துவர் ஒருவர் – இதே வைரஸால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் சீன மக்களிடையே கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதைத்தொடர்ந்து, “எங்களுக்கு பேச்சு சுதந்திரம் வேண்டும்” என்பன உள்ளிட்ட ஹேஷ்டேகுகள் சீனாவின் சமூக ஊடகங்களில் பேசுபொருளாகின.

ஆனால், அவை உடனடியாக சீன அரசாங்கத்தால் தணிக்கை செய்யப்பட்டுவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments