மு.காங்கிரஸிலிருந்து அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் விலக தீர்மானம்: தேசிய காங்கிரஸில் இணையும் சாத்தியம்

🕔 January 11, 2020

– அஹமட் –

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த முக்கிய பல பிரமுகர்கள், அந்தக் கட்சியிலிருந்து விலகவுள்ளதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு அறியக் கிடைக்கிறது.

இவ்வாறு விலகவுள்ளவர்களில் முஸ்லிம் காங்கிரஸின் உயர் பீடத்தைச் சேர்ந்தவர்களும், அந்தக் கட்சியில் முக்கிய பதவிகளை வகிப்பவர்களும் அடங்குகின்றனர்.

முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரஊப் ஹக்கீம், தம்மை மிக நீண்ட காலம் கட்சிக்குள்ளேயே ஒதுக்கி வருவதாகவும், தமக்குரிய இடத்தை வழங்காமல் ஹக்கீம் தம்மை அகௌரவப்படுத்தி வந்ததாகவும் இவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இவ்வாறு முஸ்லிம் காங்கிரஸிலிருந்து விலகும் ஒரு சிலர், முன்னாள் அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில் இணையக் கூடிய சாத்தியக் கூறுகள் உள்ளதாகவும் அறிய முடிகிறது.

முஸ்லிம் காங்கிரஸில் அந்தக் கட்சியின் தற்போதைய தலைவர் ரஊப் ஹக்கீம் இணைவதற்கு முன்னர், அந்தக் கட்சியின் ஸ்தாபகத் தலைவர் மறைந்த எம்.எச்.எம். அஷ்ரப்புடன் இணைந்து செயலாற்றியவர்களும், இவ்வாறு கட்சியை விட்டு விலகும் முடிவை தற்போது எடுத்துள்ளதாக அறியக் கிடைக்கிறது.

முஸ்லிம் காங்கிரஸில் தன்னை விடவும் சிரேஷ்டமானவர்களை அந்தக் கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம், தொடர்ச்சியாக ஒதுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் உள்ள நிலையில், கட்சியின் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த மேற்படி சிரேஷ்டமானவர்கள், அந்தக் கட்சியிலிருந்து விலகும் தீர்மானத்தை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்