கிறிஸ்மஸ் வாழ்த்துத் தொடர்பில் சாகிர் நாயக் தெரிவித்த கருத்து தொடர்பில் சர்ச்சை

🕔 December 21, 2019

ஸ்லாமியர்கள் எவரும் கிறிஸ்மஸ் வாழ்த்து தெரிவிக்கக் கூடாது என, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சமூக வலைத்தளத்தில் இஸ்லாமிய மதபோதகர் சாகிர் நாயக் தெரிவித்திருந்த கருத்தை மையப்படுத்தி புது சர்ச்சை வெடித்துள்ளது.

“எனதருமை இஸ்லாமியர்களே, தயவு செய்து கிறிஸ்மஸ் வாழ்த்து சொல்வதை தவிர்த்திடுங்கள். அது மிகப்பெரிய பாவச்செயல். கிறிஸ்துமஸ் இஸ்லாத்துக்கு எதிரானது. இந்தச் செய்தியை நீங்களும் மறுபதிவிட்டு பரவச் செய்யுங்கள்” என்று சாகிர் நாயக் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

2016ஆம் ஆண்டு சாகிர் நாயக் ட்விட்டரில் பதிவிட்டதாகக் குறிப்பிட்டு சமூக வலைத்தளங்களில் தற்போது ஒரு தகவல் பரவி வருகிறது.

அவரது இந்தப் பதிவை குறிப்பிட்டு கடந்த 2016ஆம் ஆண்டு ஆப்பிரிக்க நாளேடு ஒன்றில் கட்டுரை ஒன்று வெளியானது. தற்போது அந்தக் கட்டுரையையும் பலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். மேலும் சாகிர் நாயக் கருத்துகளைத் தொடர்ந்து வெளியிட்டு வரும் ஒரு தொலைக்காட்சி அலைவரிசையில் அவரது இந்தச் செய்தியுடன் ஒளிபரப்பப்பட்ட காணொளியும் வேகமாகப் பரவி வருகிறது.

இந்நிலையில் சாகிர் நாயக்கின் கிறிஸ்மஸ் வாழ்த்து தொடர்பான கருத்துக்கு மலேசிய முன்னாள் அமைச்சர் டான்ஸ்ரீ ராய்ஸ் யாத்திம் பதிலளித்துள்ளார்.

“சாகிர் நாயக் இதைத்தான் தெரிவித்தார் என்றால் இந்நாட்டில் உள்ள அனைத்து முஃப்திகளும் உடனடியாக தங்களது ஓய்வூதிய பலன்களை பெற்றுக்கொண்டு பணியில் இருந்து ஓய்வு பெறுவது நல்லது,” என்று சமூக வலைத்தளப் பதிவு ஒன்றில் ராய்ஸ் யாத்தின் குறிப்பிட்டுள்ளார்.

“அடுத்து சீனப் பெருநாள் வாழ்த்துகள் (Kong ci fa cai), தீபாவளிக்கும் அவர் இதே கருத்தைத் தெரிவிக்கக் கூடும். அவர் இந்தியாவுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும் என்பதை மீண்டும் தெரிவிக்கிறேன். ஜாகிர் நாயக் மலேசியாவில் நிரந்தரமாக வசிக்கும் உரிமையை எவ்வாறு பெற்றார்? யார் அவருக்கு அதை அளித்தது? என்பதை எவரேனும் உள்துறை அமைச்சில் உறுதி செய்ய இயலுமா,” என்றும் ராய்ஸ் யாத்திம் தமது பதிவில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Comments