சிங்களவர் வாக்குகளைப் பெரும்பான்மையாகப் பெறும் கோட்டாவினால்தான் தமிழர், முஸ்லிம்களுக்கு தீர்வினை வழங்க முடியும்: ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்

🕔 November 2, 2019

“சஜித் பிரேமதாஸவின் தோல்வி – தமிழ் தேசிய கட்சிகளுக்கு விளங்கி விட்டது, ஆகவேதான் அவருக்கு வாக்களியுங்கள் என்று தமிழ் மக்களுக்கு தமிழ் தேசிய கட்சிகள் சொல்லவில்லை, கோட்டாபய ராஜபக்ஷ வென்று ஜனாதிபதியான பின்பு, அவரிடம் சென்று அந்தக் கட்சியினர் பேசுவார்கள்” என, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகுதாவூத் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ரஜபக்ஷவுக்கு ஆதரவான, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் முதலாவது பிரசார கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஏறாவூரில் பஷீர் சேகுதாவூத்தின் வழிகாட்டலில் இடம்பெற்றது.

இதில் பிரதம உரை ஆற்றியபோதே பஷீர் சேகுதாவூத் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்

“இந்த நாட்டின் அடுத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதான் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது. சஜித் பிரேமதாஸ ஜனாதிபதியாக வரவே முடியாது. ஏனென்றால் இந்த நாட்டில் அதிகமாக வாழ்பவர்கள் 78 சதவீதத்தினர் சிங்களவர்கள் ஆவர். அவர்களின் அதிகப்படியான வாக்குகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கே கிடைக்கும்.

வாக்குக் கணக்கு

அதேபோல சிறுபான்மை மக்களின் ஒரு தொகை வாக்குகளும் அவருக்கு கிடைக்கும். பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மை வாக்குகளையும், சிறுபான்மை மக்களின் சிறுபான்மை வாக்குகளையும் பெறுபவரே ஜனாதிபதியாக வர முடியும் என்பதே இந்நாட்டு அரசியல் நிலைவரம் ஆகும்.

சிறுபான்மை மக்களின் பெரும்பான்மையான வாக்குகளையும், பெரும்பான்மை மக்களின் சிறுபான்மையான வாக்குகளையும்  பெறுபவர் ஜனாதிபதியாக வரவே முடியாது.

பெரும்பான்மை மக்களின் பெரும்பான்மையான வாக்குகள் சஜித்துக்கு கிடைக்கவே மாட்டாது. மேலும் சஜித்துக்கு ரணில் கழுத்தறுப்பு செய்கின்றார்.

ஜே.வி.பியினர் கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற்று கொடுத்த 05 லட்சம் வாக்குகள் இம்முறை சஜித் பிரேமதாஸவுக்கு கிடைக்க போவதும் இல்லை.

தமிழ், முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை சிங்கள மக்கள் மத்தியில் கொண்டு போய் சேர்க்க, அவற்றுக்கான தீர்வுகளை பெற்றுத் தர கோட்டாபய ராஜபக்ஷத ஒருவரால் மாத்திரமே முடியும். ஏனென்றால் அவர் சொன்னால்  சிங்கள பெரும்பான்மை சமூகம் செவிமடுக்கும்.

சிங்கள – பௌத்த ஜனாதிபதியால்தான் சிறுபான்மை மக்களின் பிரச்சினைகளை சிங்களப் பெரும்பான்மை மக்கள் மத்தியில் சந்தைப்படுத்த முடியுமே தவிர, பெரும்பான்மை சிங்கள மக்களால் நிராகரிக்கப்படுகின்ற ஒருவரால் அது முடியவே முடியாது.

தமிழ் கட்சிகளின் அரசியல் தந்திரம்

70 வருடங்களாக புத்திசாலித்தனமாக சாணக்கியமாக தமிழ் சமூகம் தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றது. விடுதலை வேண்டி யுத்தம் செய்த சமூகமாகவும் அது இருக்கின்றது. தமிழ் தேசிய கட்சிகள் 13 அம்ச கோரிக்கைகளை கூட்டாக பிரதான வேட்பாளர்களுக்கு முன்வைத்தன. ஆயினும் பிரதான வேட்பாளர்கள் எவரும் அவை தொடர்பாக பேசுவதற்கு அழைப்பு விடுக்கவிலை. அதுவே தமிழ் கட்சிகளின் தேவையாகவும் இருந்தது. ஒருவருடனும் பேச்சு வார்த்தை நடத்த கூடாது என்பதற்காகத்தான் இக்கோரிக்கைகளை அவர்கள் முன்வைத்தும் இருந்தார்கள்.

ஆகவேதான் எவரை ஆதரிக்க வேண்டும் என்று சொல்ல வேண்டிய தேவைப்பாடு அவர்களுக்கு அற்றுப் போய் விட்டது.

அப்போதுதான் வெற்றி வேட்பாளர் கோதாபய ராஜபக்ஸவுடன் தேர்தலுக்கு பிற்பாடு அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட முடியும்.

தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கு மாத்திரம் அல்லாமல் சி.வி. விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் ஆகியோருக்கும் சஜித்தின் தோல்வி விளங்கி விட்டது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வாக்களிப்பை பகிஷ்கரிக்க வேண்டும் என்று தமிழ் மக்களை கேட்டு இருக்கின்றார். அதுகூட கோட்டாவுககு வாய்ப்பான விடயமே ஆகும்.

2005 ஆம் ஆண்டு தமிழர்கள் தேர்தலை புறக்கணித்த நிலையிலே மஹிந்த ராஜபக்ஷ வெற்றி பெற்றதை நான் நினைவூட்டுகின்றேன்.

கிழக்கு மாவட்டத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். 10 தமிழ் கட்சிகள் கிழக்கில் இருந்து கோட்டாவை ஆதரிக்கின்றன. பிள்ளையான், வியாழேந்திரன், கருணா ஆகியோர் அவருக்கு வாக்குகளை பெற்று கொடுப்பார்கள். கிழக்கு மாகாணத்தில் ஒன்றரை லட்சம் தமிழ் வாக்குகளை நிச்சயம் கோட்டா பெறுவார். அதிலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 75000 தமிழ் வாக்குகளை பெறுவார்.

கோட்டா சொன்னால் சிங்களவர்கள் கேட்பார்கள்

கோட்டா தைரியமானவர். ஆகவேதான் யாழ்ப்பாணத்துக்குச் சென்று; ‘276 தமிழ் கைதிகளையும் விடுதலை செய்து தருவேன்’ என்று சொல்ல அவரால் முடிந்தது. சஜித்தால் அவ்வாறு சொல்ல முடியாது. கோட்டா சொன்னால்தான் சிங்கள மக்கள் கேட்பார்கள்.

முஸ்லிம்களுக்கு அடிக்க வேண்டாம், முஸ்லிம்களுக்கு அநியாயம் செய்ய வேண்டாம் என்று கோட்டா சொன்னால் நிச்சயம் சிங்கள மக்கள் கேட்பார்கள். முஸ்லிம் சமூகத்தின்  உயிர், சொத்து, மார்க்கம், சமூக கட்டமைப்பு ஆகியன பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் முஸ்லிம்களும் கோட்டாவுக்கே வாக்களிக்க வேண்டும்.

சஜித்தால் இப்பாதுகாப்புகளை பெற்று தரவே முடியாது.

ஐக்கிய சமாதான கூட்டமைப்பு முஸ்லிம் சமூகத்தின் சார்பாக 13 அம்ச கோரிக்கைகளை எழுத்துமூலம் பொதுஜன பெரமுனவுக்கு முன்வைத்து, அவர்கள் அவற்றை நிறைவேற்றி தருவதற்கு இணக்கம் தெரிவித்துள்ள நிலையில்தான், கோட்டாவை ஆதரிக்கின்றது.

ஹக்கீமால் முடியாது

ஆனால் ரவூப் ஹக்கீமால் இவ்வாறான பாதுகாப்பை பெற்று தர முடியாது. சமூகத்தை ரவூப் ஹக்கீமால் பாதுகாக்க முடியாது. ஏனென்றால் அவர்கள் மீது பயங்கரவாத முத்திரை குத்தப்பட்டு இருக்கின்றது. இரண்டாவது அவர்கள் ஆதரிக்கின்ற சஜித் வெற்றி பெறவே மாட்டார். சஜித்தை ஆதரிக்கின்ற ரவூப் ஹக்கீம் – ஐக்கிய தேசிய கட்சியில் கண்டி மாவட்டத்தில் பொது தேர்தல் கேட்பதற்கு ரணில் விக்கிரமசிங்க இனி மேல் சந்தர்ப்பம் கொடுக்கவே மாட்டார். அதே போல ராஜபக்ஷக்களும் அவரை சேர்க்கவே மாட்டார்கள்.

ஆனால் அமைச்சரவை அமைச்சராக பிள்ளையானும், கிழக்கு மாகாண அபிவிருத்திக்கு பொறுப்பான அமைச்சராக வியாழேந்திரனும் வருவார்கள். தமிழர் ஒருவர் முதலமைச்சராக வருவார்.

கோதாபய ராஜபக்ஷ ராணுவத்தில் இருந்தவர். ராணுவத்தினர் சொல்வதை செய்வார்கள், செய்வதையே சொல்வார்கள். அந்த வகையில் இனப் பிரச்சினைக்கான தீர்வை நிச்சயம் கோட்டா வழங்கி வைப்பார்.

உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக ஒதுக்கீடுகள், அபிவிருத்திகள், காணி அதிகாரங்கள் ஆகியன கையாளப்பட்டு அதன் மூலமாக உள்ளூராட்சி மன்றங்களுக்கு கூடுதல் அதிகாரங்கள் வழங்கப்படும்.

ஆனால் ரவூப் ஹக்கீம், றிசாட் ஆகியோரால் தீர்வை பெற்று தர முடியுமா? என்று நான் கேட்கின்றேன். எம்மை போன்றவர்களுக்கு அரசியலில் நல்ல பெயர் இருக்கின்றது. நாங்கள் பெயரை கெடுத்து கொள்ளவில்லை. கட்சி தாவல்கள் செய்யாமல் பற்றுறுதியுடன் ஒரு இடத்திலேயே இருந்து வந்திருக்கின்றோம். எனவே நாங்கள் சொன்னால் அவர்கள் கேட்பார்கள். அந்த வகையில் எம்மால் ஏறாவூர் நகர சபையை மாநகர சபையாக தரம் உயர்த்தி தரமுடியும். ஏறாவூர் பற்று முஸ்லிம் பகுதிக்கு, தனியான பிரதேச சபையை பெற்றுத் தர முடியும்.

அலிகார் தேசிய பாடசாலை எதிர்கொண்டு உள்ள காணி பிரச்சினைக்கு கோட்டாபய மூலமாக நிரந்தர தீர்வு பெற்று தர முடியும்.

எனவே ஏறாவூர் உறவுகள் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவாக வீடு வீடாக சென்று பிரசாரம் செய்ய வேண்டும். முஸ்லிம் சமூகம் கோட்டாபய ராஜபக்ஷவையே ஆதரிக்க வேண்டும். அதே நேரத்தில் முஸ்லிம்கள் இத்தேர்தலில் அவர்களுடைய வாக்குகளை கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நேரடியாக வழங்க வேண்டும் என்பது முக்கியமான விடயம் ஆகும்.

வெற்றி பெறாத ஹிஸ்புல்லாவின் வியூகம்

நண்பர் ஹிஸ்புல்லாவின் வியூகம் வெற்றி பெற போவதில்லை. ஏன்ன்றால் 50 வீதத்துக்கு மேல் எந்த வேட்பாளரும் இத்தேர்தலில் வாக்கு பெற மாட்டார் என்கிற நிலைப்பாடு ஒரு மாயையே ஆகும். ஹிஸ்புல்லாவுக்கு வாக்குகள் இருக்கின்றன. ஆனால் அவருக்கு வழங்கப்படுகின்ற வாக்குகள் வீண் விரயமாகி, பயன் அற்று போய் விடும்.

தமிழ் மக்கள் தெளிவடைந்து விட்டார். அரசாங்கத்தில் பங்காளிகளாக இருப்பதற்கு முடிவெடுத்து விட்டார். அபிவிருத்தி, வேலை வாய்ப்பு ஆகியன எமக்கும் தேவைப்படுகின்றன. எனவே முஸ்லிம்களும் தமிழ் மக்களுடன் சேர்ந்து நின்று மொட்டு கட்சியின் வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு வாக்குகளை அள்ளி வழங்க வேண்டும்.

இதன் மூலமாக அவரவர் பங்கை அரசாங்கத்திடம் இருந்து தமிழர்களும், முஸ்லிம்களும் பெற்று கொள்ள கூடியதாக இருக்கும்” என்றார். 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்