காணாமல் போய் மீட்கப்பட்ட மீனவர்களின் குடும்பங்களுக்கு, கல்முனை மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ் நிதியுதவி

🕔 October 13, 2019

– பாறுக் ஷிஹான் –

டலுக்கு மீன் பிடிப்பதற்காக சென்று  22 நாட்களின் பின்னர்  கரை திரும்பிய  மீனவர்களின் குடும்பங்களுக்கு முதற்தொகுதி கொடுப்பனவு ஒன்றினை தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபை உறுப்பினர்   சப்ராஸ் மன்சூர் தனது சொந்த நிதியில் இருந்து வழங்கி வைத்துள்ளார்.

சாய்ந்தமருது பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த மீனவ குடும்பங்களின் வீடுகளுக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மதியம் சென்ற மாநகரசபை உறுப்பினர், குறித்த உதவி தொகையினை வழங்கியதுடன் தற்போது சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள இரு மீனவர்களின் நலனை விசாரிப்பதற்காக கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கும் சென்று அவர்களை சந்தித்தார்.

மேலும், இவர்களின் நலன் தொடர்பில் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப். றஹ்மானிடம் கேட்டறிந்து கொண்டார்.

கடந்த   2019.09.25 திகதி நடைபெற்ற  கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டத்தில்  உரையாற்றிய சப்ராஸ்; குறித்த மீனவ குடும்பங்களின் நலன்கருதி  நஷ்ட ஈடு ஒன்றினை சபையின் ஊடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தார்.

இதன் போது சபையில் உள்ள அனைத்து உறுப்பினர்களும் இணைந்து, அக்குடும்பம்களுக்கு உதவி வழங்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் வித்திருந்தார். இதனை சபை முதல்வர் ஏற்று அதற்கான நடவடிக்கைகள் உடனடியாக மேற்கொள்ளப்படும் என உறுதியளித்திருந்தார்.

எனினும் கடந்த 18.09.2019ம் திகதி கடலுக்கு மீன்பிடிக்கச் சென்று 22 நாட்கள் காணாமல் போன நிலையில், கரை திரும்பிய மீனவர்களான சாய்ந்தமருதை சேர்ந்த சீனி முகம்மது ஜுனைதின் (வயது 36) இஸ்மா லெப்பை ஹரீஸ் (வயது 37 ) ஆகியோரது குடும்பங்களுக்கான உதவிகளை வழங்குவதாக மாநாகரசபை ஏற்றுக்கொண்ட போதிலும், எந்த உதவியையும் வழங்கவில்லை.

இதனையடுத்து மாநகர சபை உறுப்பினர் சப்ராஸ், குறித்த மீனவ குடும்பங்களுக்கு ஆறுதல் கூறி, குறிப்பிட்ட உதவி தொகை ஒன்றினை கையளித்துள்ளார்.

இதேவேளை தத்தமது வீடுகளுக்குத் திரும்பிய பின்னர் திடிரென ஏற்பட்ட உடல் நலகுறைவு காரணமாக, மேற்படி மீனவர்கள் கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதில் கரை திரும்பிய மீனவர்களுடன்சென்ற சக மீனவரான காரைதீவை சேர்ந்த சண்முகம் ஸ்ரீகிருஷ்ணன் (வயது 47)  என்பரின் குடும்பத்துக்கு, காரைதீவு பிரதேச சபை முதற்கட்டமாக ஒரு கொடுப்பனவை வழங்கியுள்ளதுடன், மற்றுமொரு கொடுப்பனவையும் வழங்க நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இது தவிர காரைதீவு வாழ் சமூகமும் மரணமடைந்த மீனவரின் குடும்ப நிலையை கருத்திற் கொண்டு நிதி சேகரிப்பு முயற்சியில் இறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: இறந்தவரின் உடலை 06 நாட்கள் வைத்திருந்த பின்னர், கடலில் விட்டோம்: காணாமல் போய் கரை திரும்பிய சாய்ந்தமருது மீனவர்களின் திகில் அனுபவம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்