கல்முனையில் முஸ்லிம்களின் வீட்டுக் கூரைகளுக்கு மேலால், தமிழர்கள் எல்லை கேட்பது யுத்தம் புரிவதற்கா?

🕔 July 28, 2019

– பாறுக் ஷிஹான் –

ல்முனையில் தமிழர்களுக்குத் தேவையானது பிரதேச சபைதான். ஆனால் அவர்கள் அதனைக் கேட்காமல் பிரதேச செயலகத்தை வழங்குமாறு கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என முன்னாள் அமைச்சரும் தேசிய காங்கிரஸ் தலைவருமான ஏ.எல்.எம். அதாஉல்லா தெரிவித்தார்.

மஹிந்த ராஜபக்ஷ ஒரு காலத்தில் ஜனாதிபதியாக வருவார் என்று  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரஃப்  ஒரு காலகட்டத்தில் தீர்க்கதரிசனமாக தெரிவித்தார் என்றும் இதன் போது அவர் கூறினார்.

தேசிய காங்கிரஸின் கல்முனை மாநகர சபைக்கான புதிய உறுப்பினராக தெரிவாகிய  சப்றாஸ் மன்சூர்  ஐ கௌரவிக்கும் விழா   நேற்று சனிக்கிழமை இரவு கல்முனையில் இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவற்றைத் தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்;

“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம். அஷ்ரஃப்   ஒரு காலகட்டத்தில் தீர்க்கதரிசனமாக, மஹிந்த ராஜபக்ஷ ஒரு காலத்தில் ஜனாதிபதியாக வருவார் என தெரிவித்திருந்தார். இந்தப் பகுதியிலே இருக்கின்ற தொழில்நுட்பக் கல்வி பயிற்சிக் கல்லூரிகளை மஹிந்த ராஜபக்ஷ அமைச்சராக இருந்து திறந்து வைக்க வந்த போது அஷ்ரஃப் இவ்வாறு கூறினார்.

எங்களுக்கு என்று ஒரு வெளிநாட்டுக் கொள்கை வேண்டும். இலங்கை மேலைநாட்டவர்களின் குப்பை தொட்டி அல்ல. இலங்கையை தங்களது ஆயுதங்களை விற்பனை செய்வதற்காக பயன்படுத்தியவர்கள், பல நாடுகளை இல்லாமல் செய்ததுள்ளனர். அந்த நாடுகளின் நிலைமை தற்போது  மோசமாக இருக்கின்றது. இலங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற ஆசிய நாடுகளை ஒன்றிணைத்து ஒரு வலயமாக மாற்ற வேண்டும்.

இனப் பிரச்சனைக்கான தீர்வு காணப்பட வேண்டும். முஸ்லிம் மக்களோ தமிழ் மக்களோ தனியான அலகுகோரி நிற்கவில்லை. இந்த நாட்டில் 75 வீதமான இதர சிங்கள பௌத்த மக்கள் இருக்கிறார்கள். 25 வீதமாக சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்கள் இருக்கிறார்கள். ஆகவே அந்த சிறுபான்மை மக்களை வாழ வைப்பதற்கான பொறிமுறைகளை உருவாக்க வேண்டும்.

இலங்கை ஒரு சிறிய நாடு. இங்குள்ள 09 மாகாணங்களும் சமஸ்டி கோரி நின்றால் இந்த  நாடு  பாதாளத்திற்கு செல்லும். இதனால்தான் சிங்கள மக்களும் முஸ்லிம் மக்களும் இந்த சமஸ்டியை எதிர்க்கின்றனர்.

நாடு கடந்த தமிழ் ஈழ அமைப்புகள் டயஸ்போரா போன்றோர்களின் ஊதுகுழலாக ரவூப்  ஹக்கீம் இருந்து கொண்டு, சமஸ்டி கோரி செயற்படுகின்றார்.

இந்த நாட்டிலே ஒவ்வொரு ஜனாதிபதித் தேர்தல் வரும் போதும் பாரிய குழப்பங்கள் வருகின்றன. இவற்றிற்கெல்லாம் காரணம் சர்வதேச சக்திகள். இங்கு மீனவர்களின் மீன்பிடி படகுகளை தரித்து நிற்க செய்வதற்கு எம்மிடம் இடம்   இல்லை. ஆனால் இலங்கையில் அழகு மிகுந்த பொக்கிஷமான திருகோணமலையை கபளீகரம் செய்ய அமெரிக்கா முனைகிறது.

தமிழர்கள் கல்முனை பிரதேச செயலகம் தான் கேட்கிறார்கள். ஆனால் தமிழ் மக்களுக்கு தேவை பிரதேச சபை. அவர்கள் அதைக் கேட்கவில்லை.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ரா. சம்பந்தன், இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றுமு் கோடீஸ்வரன் இருக்கின்ற சபையிலே நான் பகிரங்கமாக தெரிவித்தேன்; ‘கல்முனையில் நான்கு  உள்ளூராட்சி சபை உருவாக்கப்பட வேண்டும்’ என்று, அதனை சம்பந்தன் ஏற்றுக்கொள்ளவில்லை.

முஸ்லிம்களின் வீட்டு கூரைக்கு மேலால் தமிழர்கள் எல்லையை இப்போது கேட்பது யுத்தம் புரிவதற்கா? என்ற கேள்வி எங்கள் மத்தியில் எழுகின்றது. கோடுகள் போடுவது நிர்வாகத்துக்கு மாத்திரமே. அதைவிடுத்து எங்களை நாங்களே பயங்கரவாதிகளாக மாற்றுவதற்கு அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்