ஹரீஸின் இழுத்தடிப்பினால் தாமதமாகும் கல்முனை பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டட நிர்மாணம்: 200 மில்லியன் ரூபாய் திரும்பி விடலாம் எனவும் அச்சம்

🕔 July 28, 2019

– அஹமட் –

ல்முனை பிரதேச செயலகத்துக்கான புதிய கட்டடமொன்றினை நிர்மாணிப்பதற்காக, 200 மில்லியன் ரூபாவை அரசாங்கம் ஒதுக்கியுள்ளபோதும், அந்தக் கட்டடத்தை நிர்மாணிப்பதற்கான இடத்தை தீர்மானிப்பதில் கல்முனையைச் சொந்த இடமாகக் கொண்ட மு.காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் இழுத்தடிப்புச் செய்து வருவதாக ‘புதிது’ செய்தித்தளத்துக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

பொது நிருவாக, உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சு, குறித்த நிதியை ஒதுக்கி நீண்ட காலமாகியும், எந்த இடத்தில் புதிய கட்டடத்தை அமைப்பது என்பதை கூறுமாறு, அங்குள்ள பொறுப்பான அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினரைக் கேட்டு வருகின்ற போதும், இதுவரை உரிய இடத்தை ஹரீஸ் தீர்மானித்துக் கூறவில்லை என அறிய முடிகிறது.

கல்முனையில் தனக்கு தெரியாமலும், தன்னைக் கேளாமலும் அரச அதிகாரிகள் முக்கிய தீர்மானங்களை எடுக்கக் கூடாது என்கிற மனைநிலை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ்; அரச அதிகாரிகளுக்கு இவ்வாறான விடயங்களில் ஒத்துழைப்பு வழங்குவதில் இழுதடிப்புச் செய்கின்றமை விசனத்துக்குரிய விடயமாகும் என்று, ‘புதிது’ செய்தித்தளத்திடம் அரச அதிகாரியொருவர் கூறினார்.

இதேவேளை, கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தை நடத்துவதற்கான திகதியை வழங்குவதிலும் ஹரீஸ் இழுத்தடித்து வருகின்றமையினால், அந்தக் கூட்டங்களை உரிய காலங்களில் நடத்த முடியாமல் உள்ளதாகவும் முக்கிய அதிகாரியொருவர் தெரிவித்தார்.

மேற்படி நிதியை உரிய காலத்துக்குள் பயன்படுத்தத் தவறினால், அது திரும்பி விடுக் கூடிய ஆபத்தான சூழ்நிலை உருவாகும் எனவும், அதிகாரிகள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்