மனோ கணேசன் அவர்களே, இனவாதப் பேய்களுக்கு சாமரம் வீசும் உங்கள் நிலை கேவலமானது

🕔 May 11, 2019

மைச்சர் மனோ கணேசன், புவக்பிட்டிய முஸ்லிம் ஆசிரியைகள் விடயத்தில் மகராஜா ஊடகங்களுக்கு ஒப்பாக நடந்து கொள்கின்றார் என்று, அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த டொக்டர் ஆகில் அஹமட் சரிபுதீன் தனது பேஸ்புக் பக்கத்தில் விமர்சித்துள்ளார்.

புவக்பிட்டிய தமிழ் மகா வித்தியாலய முஸ்லிம் ஆசிரியைகளை, ஹபாயா அணிந்து வர வேண்டாம் என்று, அந்தப் பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர் கூறியதாக எழுந்த சர்ச்சையினை அடுத்து, குறித்த ஆசிரியைகளுக்கு வேறு பாடசாலைகளுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ள நிலையில், “முஸ்லிம் ஆசிரியைகள் பாதுகாப்பு பரிசோதனைகளுக்கு ஒத்துழைக்காமையினாலேயே சர்ச்சை எழுந்தது” என, அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளமை குறித்தே, டொக்டர் ஆகில் அஹட், மேற்படி விமர்சனத்தை வெளியிட்டுள்ளார்.

டொக்டர் ஆகில் எழுதியுள்ள மேற்படி பதிவில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;

ஆசிரியைகளை பாடசாலைக்குள் நுழைய விடாமல் தடுத்த சம்பவத்தின் போது ‘கைப்பைச் சோதனை’ பற்றிய எவ்வித வாதப் பிரதிவாதங்களும் இடம் பெற்றிருக்கவில்லை என்பதற்கு சம்பவத்தின் போது எடுக்கப்பட்ட காணொளியே சாட்சியாகும்.

அதில் ஆசிரியைகளின் உடை தொடர்பான உரையாடல் மாத்திரமே இடம் பெறுகின்றது. சேலை அணிந்து வரும் ஆசிரியைகளையே பாடசாலைக்குள் அனுமதிப்பது என பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினால் தீர்மானிக்கப் பட்டிருப்பதாகவும், அவ்வாறு சேலை அணிந்து வர முடியாவிட்டால் வேறு பாடசாலைகளுக்குச் செல்லுமாறும் அதட்டலுடன் சொல்லப் படுகின்றது.

விடயம் தமக்கே விபரீதமாவதை உணர்ந்து கொண்டு, மறுநாள் ஊடகங்ளுக்கு ‘கைப் பைச் சோதனை’ என்றொரு கதை சோடித்துச் சொல்லப்படுகின்றது.

‘கைப் பைச் சோதனை’ தான் விவகாரம் என்றால் அதனை அவ்விடத்தில் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் அல்லவா கையாண்டிருக்க வேண்டும்?

அரச கடமை செய்யும் ஒருவரை, கடமை தொடர்பாக அறிவுறுத்தும் அதிகாரம் நிலைய பிரதானிக்கல்லவா வழங்கப் பட்டிருக்கின்றது?

பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் பாடசாலை ஆசிரியர் தொடர்பான தீர்மானம் ஒன்று பாடசாலை அதிபர் அல்லது முகாமைத்துவ சபையின் மூலமாக அல்லவா அமுல் படுத்தப்பட வேண்டும்?

கிழக்கு மாகாணத்தில் சில தமிழ் பாடசாலைகளில் பணி புரிந்த முஸ்லிம் ஆசிரியைகள் சிலருக்கும் குறித்த விடயத்தில் முஸ்லிம் பாடசாலைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்கப் பட்டுள்ளது. அங்கும் ‘கைப்பைச் சோதனை’தான் காரணமா?

ஐயா மனோ கணேசன் அவர்களே, நிதானமாகப் பேசுங்கள், நீதியைப் பேசுங்கள்.

கேட்டுக் கொண்டிருப்பவனெல்லாம் கேணயன் என எண்ண வேண்டாம்.

உண்மையை மறைத்து, பொய்யை வலிந்துரைத்து இனவாதப் பேய்களுக்கு சாமரம் வீசும் உங்கள் நிலை கேவலமானது.

30 வருட இனப் போரின் ரணங்கள் – உங்களுக்கு கற்றுத்தரவில்லை என்றே தோன்றுகின்றது.

தொடர்பான செய்திகள்: 

01) ஹிஜாப் அணிந்து சென்ற ஆசிரியைகளைத் தடுத்தமையினால் சர்ச்சை; உடனடி இடமாற்றம் வழங்கினார் ஆளுநர் ஆஸாத் சாலி

02) புவக்பிட்டிய முஸ்லிம் ஆசிரியைகள், பாதுகாப்பு சோதனைக்கு அனுமதிக்காததால்தான் சர்ச்சை உருவானது: அமைச்சர் மனோ தெரிவிப்பு

Comments

புதிது பேஸ்புக் பக்கம்