லாயக்கு

🕔 January 29, 2019

– முகம்மது தம்பி மரைக்கார் –

ரு மக்கள் கூட்டம் தனக்கான நிலத்தையும் மொழியையும் இழத்தல் என்பது மிகவும் ஆபத்தானது.

ஓர் இனத்தை அழித்து விடுவதற்கு, அவர்களை நிலமற்றவர்களாக மாற்றி விடுவதே, மிகச் சூழ்ச்சிகரமான வழியாகும். நிலத்தை மீட்பதற்காகவும் மொழிக்கான அங்கிகாரத்துக்காகவும் உலகில் ஆரம்பித்த சண்டைகள், இன்னும் முடிந்தபாடில்லை.

இலங்கையின் சிறுபான்மைச் சமூகங்களும், நீண்ட காலமாக, இந்த ஆபத்துக்குள் சிக்கி விட்டன. ‘தேசிய இனம்’ எனும் அடையாளத்தை, சமூகமொன்று பெற்றுக் கொள்வதற்கு, நிலமும் மொழியும் மிகப் பிரதானமானவையாகும். அதனால்தான், தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் நிலங்களை அபகரிக்கும் முயற்சிகளில், பெரும்பான்மையினப் பேரினவாதிகள், தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டில் மாறிமாறி ஆட்சிக்கு வந்த, அனைத்து அரசாங்கங்களும் சிறுபான்மைச் சமூகங்களின் நிலத்தை, ஆக்கிரமிக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளன. தொல்பொருள் திணைக்களம், வன பாதுகாப்புத் திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம், ராணுவம் ஆகியவற்றைக் கொண்டு, சிறுபான்மைச் சமூகங்களின் பல்லாயிரக் கணக்கான ஏக்கர் வளமான நிலங்கள், பறித்தெடுக்கப்பட்டுள்ளன. பௌத்த மதத்தின் பெயராலும், சிறுபான்மையினரின் நிலங்கள் கபளீகரம் செய்யப்பட்டுள்ளன.

அந்தவகையில், கிழக்கு மாகாணத்தில் 60 ஆயிரம் ஏக்கர்களுக்கும் மேற்பட்ட நிலங்களை முஸ்லிம் சமூகம் இழந்திருக்கிறது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும், அம்பாறை மாவட்டத்தில் மட்டும், முஸ்லிம்களின் 30 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் அபகரிக்கப்பட்டுள்ளதாக, முன்னாள் ராஜாங்க அமைச்சரும், ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளருமான எம்.ரி ஹசன் அலி கூறுகிறார்.

அம்பாறை மாவட்டத்தில், ஹிங்குரான சீனிக் கூட்டுத்தாபனத்துக்கென கைப்பற்றப்பட்ட முஸ்லிம்களின் காணிகள், சம்மாந்துறை – கரங்கா வட்டை, பொத்துவில், வட்டமடு, பொன்னன்வெளி, அஷ்ரப் நகர் போன்ற பகுதிகளில், முஸ்லிம்கள் பறிகொடுத்த காணிகளின் பட்டியல் மிக நீளமானது.

அம்பாறை மாவட்டம், அட்டாளைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்கு உட்பட்ட பொன்னன்வெளி, அஷ்ரப் நகர் ஆகிய பகுதிகளில் மட்டும், முஸ்லிம்களுக்குச் சொந்தமான பல நூறு ஏக்கர் காணிகள், பெரும்பான்மையினப் பேரினவாதிகளால் அபகரிக்கப்பட்டுள்ளன.

அங்குள்ள தீகவாபி பிரதேசமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் 1987ஆம் ஆண்டு, புனித பூமியாகப் பிரகடனம் செய்யப்பட்டது. அதையடுத்து, முஸ்லிம்களின் பொன்னன்வெளி விவசாயக் காணி 600 ஏக்கர் அபகரிக்கப்பட்டது.

2009ஆம் ஆண்டு அஷ்ரப் நகரில், முஸ்லிம்களுக்குச் சொந்தமான சுமார் 150 ஏக்கர் காணியை சுற்றி, வனஜீவராசிகள் திணைக்களம் யானை வேலியை அமைத்து விட்டு, அந்தக் காணிகளைக் கையகப்படுத்தினர். 2011ஆம் ஆண்டு, அந்தப் பகுதிக்குள் ராணுவத்தினர் வந்து, முகாம் அமைத்துக் கொண்டனர்.

இதன் மூலம் 69 குடும்பங்கள், தமது காணிகளை இழந்தன. ராணுவத்துக்குப்  பயந்து அங்கிருந்து அந்த மக்கள் வெளியேறினார்கள். அவ்வாறு வெளியேறியவர்களில் ஏராளமானோர்,  வசிப்பதற்குச் சொந்த இடமில்லாமல், இன்று வரை அலைந்து கொண்டிருக்கின்றார்கள் என்பது, வேறு கதை.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் பல்வேறு ஆர்ப்பாட்டங்களையும் கவனயீர்ப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருந்த போதும், சில வாரங்களுக்கு முன்னர் வரை, அந்த முயற்சிகள் கைகூடவில்லை.

அஷ்ரப் நகர் கிராமத்தின் ஆதிப் பெயர் – ஆலிம்சேனை. யுத்தம், சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களை 2006ஆம் ஆண்டு, அந்தக் கிராமத்தில் மீள்குடியேற்றியபோது, ‘அஷ்ரப் நகர்’ என்று, அக்கிராமத்துக்கு மாற்றுப் பெயர் வைக்கப்பட்டது.

நிலங்களை இழந்த மக்கள் எல்லோரும் சேர்ந்து, ராணுவம் கைப்பற்றிக் கொண்ட தமது காணிகளை உடனடியாக விடுவிக்குமாறு கோரி, அடிக்கடி ஆர்ப்பாட்டத்திலும், கவனயீர்ப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்தனர். ஆனாலும், கடந்த எட்டு வருடங்களாக அந்த மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை.  அங்குள்ள நாடளுமன்ற உறுப்பினர்களாலும், மேற்படி விடயத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்க முடியவில்லை.

இந்த நிலையில்தான், அஷ்ரப் நகரில் அமைக்கப்பட்ட முகாமிலிருந்து ராணுவம் வெளியேறியுள்ளது. இதையடுத்து, தாம் முகாம் அமைத்திருந்த காணிகளை விடுவித்துள்ள இராணுவத்தினர், அதற்கான ஆவணங்களை கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாவிடம் கடந்த 18ஆம் திகதி உத்தியோகபூர்மாகக் கையளித்துள்ளனர்.

ராணுவத்தால் இவ்வாறு 39.25 ஏக்கர் காணி விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் மாகாண காணி ஆணையாளர் ஊடாக, உரிமையாளர்களிடம் காணிகளைக் கையளிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஜே. லியாகத் அலி தெரிவித்தார்.

இந்தநிலையில், ராணுவத்தினர் விடுவித்தவை மட்டுமன்றி, தாங்கள் இழந்த 150 ஏக்கர் காணிகளையும் மீட்டுத் தருமாறு, கிழக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்த அஷ்ரப் நகர் மக்கள், எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது ஒருபுறமிருக்க, வடக்கு மாகாணத்தில் ராணுவம் மற்றும் ஏனைய அரச இயந்திரங்களால் ஆக்கிரமிக்கப்பட்டிருந்த 90 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாக, அந்த மாகாணத்தின் ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்திருக்கின்றார்.

மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாகப் பதவியேற்றதன் பின்னர், வடக்கில் தமிழர்கள் பறிகொடுத்த கணிசமானளவு காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமிழர்களின் நாடாளுமன்றப் பிரதிநிதிகள் எதிர்க்கட்சியில் இருந்து கொண்டு, இதைச் சாதித்திருக்கின்றனர்.

இன்னொருபுறம், தமது காணிகளை வடக்கில் பறிகொடுத்த தமிழர்கள், அவற்றை மீட்டெடுக்கும் பொருட்டு, கேப்பாப்புலவு போன்ற இடங்களில், தன்னெழுச்சியாக சாத்வீகப் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

ஆனால், கிழக்கில் முஸ்லிம்களின் காணிகளை விடுவிப்பதில், அரசாங்கம் பெரிதாக அக்கறை காட்டவில்லை. மறுபுறம், முஸ்லிம்களின் அரசியல் பிரதிநிதிகளும் இவ்விவகாரத்தில் ஆட்சியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரியவில்லை. ஆனால், ‘தானாக விழும்’ பழங்களை, தாங்கள்தான் ‘வீழ்த்தியதாக’ உரிமை கோரும், அரசியலை, முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்து கொண்டிருப்பதுதான் வெட்கக்கேடாகும்.

மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை ஆட்சியில் அமர்த்துவதற்குத் தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் கட்சிகள் பெரிதும் உதவியிருக்கின்றன. குறிப்பாக, அண்மையில் நடந்த அரசியல் குழப்பத்தின்போது, சிறுபான்மை அரசியல் கட்சிகளின் நாடாளுமன்ற பிரதிநிதிகள், ரணில் விக்கிரமசிங்கவை ஆதரித்திருந்தன.

இவற்றுக்குக் கைமாறாக, முஸ்லிம் அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களுக்கும் தமது கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் ‘கொழுத்த’ அமைச்சர் பதவிகளைத் தெரிவு செய்து பெற்றுக் கொண்டனர். ஆனால், தமிழர் தரப்பு, அமைச்சர் பதவிகளைத் தவிர்த்து, தங்கள் மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்ட காணிகளை மீட்டெடுப்பதிலும், புதிய அரசியல் யாப்பில் தமது சமூகத்துக்குத் தேவையானவற்றை உள்ளடக்குவதிலும் ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.

வடக்கில் தமிழர்கள் இழந்த 90 சதவீதமான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், கிழக்கு முஸ்லிம்கள் இழந்த 10 சதவீதமான காணிகளேனும் விடுவிக்கப்படவில்லை என்பதிலிருந்தே, இங்குள்ள முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ‘லாயக்கு’ என்ன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

எனவே, கிழக்கு முஸ்லிம்கள், இன்னும் ‘இலவு’ காத்துக் கொண்டிராமல், தாங்கள் இழந்த காணிகளை மீட்டெடுப்பதற்குத் தன்னெழுச்சிப் போராட்டங்களைத் தொடங்க வேண்டும்.

பூனைக்கு மணியை, யாராவது கட்டியே ஆக வேண்டுமல்லவா?

நன்றி: தமிழ் மிரர் பத்திரிகை (29 ஜனவரி 2019) 

Comments

புதிது பேஸ்புக் பக்கம்