கடலுக்குச் சென்ற அட்டாளைச்சேனை மீனவர்கள், இரண்டு நாட்களாக கரை திரும்பவில்லை; தேடும் பணி தொடர்கிறது

🕔 December 14, 2018

– மப்றூக், படங்கள் – றிசாத் ஏ காதர் –

லுவில் மீன்பிடிதுறைமுகத்திலிருந்து நேற்று முன்தினம் புதன்கிழமை சிறியரக மோட்டார் படகில் கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர், இதுவரை கரை திரும்பாமையினால், அவர்களைத்தேடும் நடவடிக்கையில் சக மீனவர்கள் ஈடுபட்டுளனர்.

கடற்றொழிலுக்காக நேற்றுமுன்தினம் புதன்கிழமை மாலை 5.00 மணியவில், அட்டாளைச்சேனையைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள், சிறியரக மோட்டார் படகொன்றில் கடலுக்குச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறு மாலை வேளையில் கடலுக்குச் செல்பவர்கள், மறுநாள் காலை கரைக்குத் திரும்புவது வழமையாகும். ஆனாலும், இவர்கள் கரை திரும்பவில்லை.

இந்த நிலையில், நேற்று பகல் 1.00மணியவில், கடலுக்குச் சென்றவர்களின் தொலைபேசிலிருந்து கரையில் இருந்தவர்களுக்கு அழைப்பொன்று வந்துள்ளது.

தாங்கள் சென்ற படகின் இயந்திரம் பழுதடைந்து விட்டதால், தம்மால் கரை திரும்ப முடியவில்லை என்றும், தங்கள் படகு கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும் அந்தப் படகிலிருந்தவர்கள் கூறியுள்ளனர்.

இதனையடுத்து, குறித்த படகைத்தேடி, கரையிலிருந்து சில படகுகளில் சக மீனவர்கள் கடலுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடலில் காணாமல் போனவர்களுடனான தொலைபேசித் தொடர்பு திடீரென தடைப்பட்டு போனமையினால், அவர்களை கண்டுபிடிக்க முடியாமல், தேடிச் சென்றவர்கள் கரை திரும்பினார்கள்.

இதேவேளை, இன்று வெள்ளிக்கிழமையும் காணாமல்போன படகினைத் தேடி சில படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றிருந்தனர். ஆயினும் அவர்களைகண்டு பிடிக்க முடியவில்லை.

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த 56 வயதுடைய 04 பிள்ளைகளின் தந்தையான சகாப்தீன் மற்றும் 32 வயதுடைய 03 பிள்ளைகளின் தந்தையான அப்துல் கனி ஆகியோரே இவ்வாறு படகில் சென்று காணாமல் போயுள்ளனர்.

இவர்களைத் தேடும் நடவடிக்கை தொடர்ந்தும் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்