மஹிந்த, நாமல் உள்ளிட்டோர் 11ஆம் திகதியுடன் பதவியிழக்க வேண்டும்: கட்சி மாறியதால் ஏற்பட்டுள்ள சிக்கல்

🕔 December 2, 2018

– முன்ஸிப் அஹமட் –

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் கணிசமானோர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் அங்கம் வகித்துள்ளமை தொடர்பில் தற்போது வாதப் பிரதிவாதங்கள் ஏற்பட்டுள்ளன.

அரசியலமைப்பின் பிரிவு 99 (13) இன் பிரகாரம், நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர், எந்தக் கட்சியில் அல்லது சுயேட்சைக் குழுவில் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்தாரோ, அந்தக் கட்சி அல்லது குழுவிலிருந்து விலகுவதன் மூலம் அல்லது விலக்கப்படுவதன் மூலம் அல்லது வேறு வகையில் அவற்றின் உறுப்பினராக இல்லாதொழியும் திகதியிலிருந்து, ஒரு மாத காலப் பகுதி முடிவுற்றதன் பின்னர், அவருடைய ஆசனம் வறிதாதல் வேண்டும்.

அந்த வகையில், மஹிந்த ராஜபக்ஷ மற்றும் நாமல் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்து, எதிர்வரும் 11ஆம் திகதியுடன் ஒரு மாதம் நிறைவடைகிறது.

இந்த நிலையில், பொதுஜன பெரமுனவில் பகிரங்கமாக ஊடகங்கள் முன்னிலையில் மஹிந்த மற்றும் நாமல் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்துவத்தைப் பெற்றுக் கொண்ட போதும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அங்கத்துவத்திலிருந்தோ அல்லது ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்தோ மேற்படி நபர்கள் உத்தியோகபூர்வமாக விலகிக் கொள்ளவில்லை என்று, அந்தக் கட்சிகளின் செயலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

எவ்வாறயினும், தமது பழைய கட்சி அங்கத்துவத்தை ராஜிநாமா செய்யாமல், புதிய கட்சியில் அங்கத்தும் பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக, பழைய கட்சியின் நிருவாகம் சட்ட நடவடிக்கை எடுக்குமா என்கிற கேள்வியும் உள்ளது.

நடவடிக்கை எடுக்கப்பட மாட்டாது என்றே, அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்