ஜனாதிபதிக்கு எதிராக மக்கள் காங்கிரஸ் வழக்குத் தாக்கல் செய்யும்: தலைவர் றிசாட் பதியுதீன் அறிவிப்பு

🕔 November 10, 2018

நாட்டின் அரசியலமைப்பை மீறி, நாடாளுமன்றத்தை உரிய காலத்துக்கு முன்னதாக ஜனாதிபதி கலைத்துள்ளமைக்கு எதிராக, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்ய முடிவு செய்துள்ளது.

கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐவரும் புனித மக்காவிலிருந்து நாடு திரும்பியவுடன், இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுமெனவும், கட்சியின் பாராளுமன்றக்குழு புனித மக்காவில் கூடி, இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டிருப்பதாகவும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் கூறியுள்ளார்.

“அரசியலமைப்பை தமக்கேற்றாற் போன்று ஜனாதிபதி கையிலெடுத்து, சட்டத்துக்கு முரணான வகையில், நாடாளுமன்றத்தை கலைத்திருப்பதை தமது கட்சி வன்மையாகக் கண்டிக்கின்றது”.

“நாட்டின் மீயுயர் சட்டமான அரசியலமைப்பில், நடைமுறையில் இருக்கும் பாராளுமன்றம், 4 1/2  (நாலரை) வருடங்களுக்கு முன்னதாக கலைக்கப்படக் கூடாதென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கு மாற்றமாக ஜனாதிபதியின் செயற்பாடு அமைந்திருப்பது, ஜனநாயகத்தை கேள்விக்குறியாக்கி உள்ளதுடன் அரசியலமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாகவும் மாற்றியுள்ளது” என்றும் மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

“எந்தத் தேர்தல்களுக்கும் முகங்கொடுக்க எமது கட்சி தயாராகவே உள்ளது. தேர்தலுக்கு அஞ்சி நாம் நீதிமன்றம் செல்லவுமில்லை. இவ்வாறான ஜனநாயக விரோத நடவடிக்கைகளை நாங்கள் அனுமதித்தோமேயானால், எதிர்காலத்திலும் ஜனாதிபதி, பாராளுமன்றத்தை தமது விருப்பத்திற்கேற்ப, எந்த வேளையிலும் கலைக்க முடியும் என்ற நிலை வந்துவிடும். எனவே, இவ்வாறன செயற்பாடுகள் எதிர்காலத்திலும் இடம்பெறாமல் இருப்பதற்காகவே, நாங்கள் நீதிமன்றத்தை நாடவுள்ளோம்” என்று அவர்  கூறினார்.

அத்துடன், நாங்கள் நீதிமன்றம் செல்வது மட்டுமின்றி, இவ்வாறான தொடர்ச்சியான ஜனநாயக விரோத செயற்பாடுகளை மக்களுக்கு தெளிவுபடுத்தும் செயற்பாடுகளையும் முன்னெடுக்கவுள்ளோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்