முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு 28 வருடங்கள்: யாழில் துக்க தினம் அனுஷ்டிப்பு

🕔 October 31, 2018

– பாறூக் ஷிஹான் –

டக்கு மாகாணத்தில் வாழ்ந்த முஸ்லிம்கள், விடுதலைப் புலிகள் அமைப்பினால் வெளியேற்றப்பட்டு, 28 ஆண்டுகள்  பூர்தியடைகின்றமையை, நேற்றைய தினம் யாழ்ப்பாண முஸ்லிம்கள் துக்க தினமாக அனுஷ்டித்தனர்.

யாழ்ப்பாணத்தில் முஸ்லிம்கள் செறிந்து வாழும் ஐந்து சந்திப் பகுதியில் கடைகளை அடைத்து, கறுப்புக் கொடிகளைப் பறக்க விட்டு, நேற்றைய தினத்தை முஸ்லிம் மக்கள் துக்க தினமாக அனுஷ்டித்தனர்.

1990 ஆம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் தீவிரமடைந்திருந்த காலப்பகுதியில், வடக்கு மாகாணத்தில் வாழ்ந்த சுமார் 01 லட்சம் முஸ்லிம் மக்களை, அவர்களின் வாழ்விடங்களிலிருந்து விடுதலைப் புலிகள் பலவந்தமாக வெளியேற்றினர்.

இவ்வாறு வெளியேறிய முஸ்லிம்களில் பெருமளவானோர், இன்னும் தமது சொந்த இடங்களுக்கு திரும்பாமல், வெளி மாவட்டங்களில் அகதிகளாகவே வாழ்ந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்றைய தினம் யாழ்ப்பாணம் ஐந்து சந்தியில் ஒன்று கூடிய முஸ்லிம் மக்கள்; வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கு அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.

”இன்றைய தினத்தை நாங்கள் துக்க தினமாக அனுஷ்டிக்கிறோம். வடக்கில் வாழ்ந்த முஸ்லிம் மக்கள் தங்கள் சொந்த இடங்களிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டு 28 வருடங்களாகின்றன.

இவ்வாறு வெளியேற்றப்பட்ட வெளியேற்றப்பட்ட யாழ்ப்பாண மாவட்ட முஸ்லிம்களின் சனத்தொகை, தற்போது மும்மடங்காக அதிகரித்துள்ளது. இந்த மக்கள் இலங்கையின் பல பாகங்களிலும் சிதறுண்டு அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

ஆயினும், அந்த மக்களை இன்னும் அரசாங்கம் மீள்குடியேற்றவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். எனவே, அந்த மக்களின் விடயத்தில் அராசங்க பிரதிநிதிகளும், அதிகாரிகளும் கரிசனை கொள்ள வேண்டும். யாழ் மாவட்ட முஸ்லிம் மக்களை உடனடியாக மீள்குடியமர்த்த வேண்டும் என்று” எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.

யாழ்ப்பாணத்திலிருந்து 1990ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 30ஆம் தேதியன்று, முஸ்லிம்கள் பலவந்தமாக விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டனர்.

இதன்போது, முஸ்லிம் மக்கள் அவர்களின் எந்தவிதமான அசையும் சொத்துக்களையும் தம்முடன் கொண்டு செல்வதற்கு புலிகள் அமைப்பு அனுமதிக்கவில்லை.

நேற்றைய தினத்தை துக்க நாளாக அனுஷ்டிக்குமாறு, ‘யாழில் சுயமாக மீள்குடியேறிய முஸ்லிம்கள்’ எனும் பெயரில், துண்டுப் பிரசுரம் மூலம் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்