ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் ஏற்பாட்டில், அஷ்ரஃப் நினைவுகூறல்

🕔 September 17, 2018

– பஷீர் சேகுதாவூத் –

லைவர் அஷ்ரஃப் அவர்களுடைய 18 ஆவது நினைவு கூரலை நேற்று ஞாயிற்றுக்கிழமை மக்ரிப் தொழுகையின் பின்னர், கொழும்பு 7 , அஷ்ரஃப் மாவத்தையில் அமைந்துள்ள மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆப் பள்ளியில் ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பு நடத்தியது. தலைநகரில் அஷ்ரஃபுடைய பெயரில் அமைந்துள்ள பூமியில் அவரது நினைவு நிகழ்வு நடந்தமை பொருத்தமாயமைந்தது.

சிங்களத் தேசியக் கட்சிகளில் அங்கம் வகித்து அமைச்சர்களாய் பதவி வகித்த பதியுத்தீன் மஹ்மூதினதும், பௌஸியினதும் இன்னும் சிலரதும் பெயர்களில் கிழக்கில் உள்ள வீதிகளுக்கு பெயர் சூட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளது.

ஆனால் கிழக்கில் சிங்களத் தேசியக் கட்சிகளில் அங்கம் வகித்து அமைச்சர்களாகப் பதவி வகித்த எவரது பெயரும் கொழும்பில் எந்த மாவத்தைக்கும் இன்றுவரை சூட்டப்படவில்லை.

இனவாதி என்றும், துரோகி என்றும், சதிகாரன் என்றும் சிங்களக் கட்சிகளாலும், அக்கட்சிகளில் அங்கம் வகித்த முஸ்லிம் தலைவர்களாலும் தூற்றப்பட்ட அஷ்ரஃபின் பெயர், கொழும்பின் மேட்டுக்குடிகள் வாழும் பகுதி ஒன்றின் தெருவுக்குப் சூட்டப்பட்டிருக்கிறது.

இது, கொழும்புத் தலைநகர் அரசியலில் (தேசிய அரசியலில்) அஷ்ரஃப் – கொடி நாட்டியவர் என்பதை நிரூபிக்கிறதல்லவா?

கிழக்கில் உதித்த அரசியல் தலைவர் ஒருவர், முஸ்லிம்களுக்கு என்று சொந்தமாக கட்சி ஒன்றை நிறுவாமல், மரணித்த பின்னராயினும் மேற்சொன்ன சாதனையை நிகழ்த்தியிருக்க முடியாதல்லவா?

இந்தப் பெயரை இந்தத் தெருவுக்குச் சூட்டுவதற்கு காரணமாய் இருந்த முன்னாள் கொழும்பு மேயரும், இலங்கைக்கான இந்நாள் மலேசியத் தூதுவருமான நண்பர் முஸம்மில் அவர்களுக்கும் ஏனையோருக்கும் நன்றி கூறுகிறேன்.

இன்றைய நிகழ்வில் அஷ்ரஃப் அவர்கள் மௌத்தான பின்னர் பிறந்த 100 மாணவர்களுக்கு அஷ்ரஃபை அறிமுகப்படுத்தும் பொறுப்பு ஹஸனலி அவர்களால் எனக்கு வழங்கப்பட்டது. அங்கு 10 நிமிடங்கள் அஷ்ரஃபின் வாழ்வும் பணிகளும் பற்றி உரை நிகழ்த்தினேன்.

மிகச் சிறியதாக ஆனால் ஆத்மார்த்தமானதாக அஷ்ரஃபை நினைவு கூர்ந்தோம். இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளைச் செய்த ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் பிரதித் தலைவர் நஸார் ஹாஜி அவர்களுக்கும், கட்சியின் கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் இருவருக்கும் எனது அன்பு உரித்தாகட்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்