ஈரானுடன் வர்த்தகத்தில் ஈடுபட்டால் எங்களுடன் வேண்டாம்: அமெரிக்க ஜனாதிபதி

🕔 August 7, 2018

ரானுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள்  அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்று அந்த நாட்டு ஜனாதிபதி டொனால்ட்  ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கான உத்தரவில் டிரம்ப்  திங்கட்கிழமை கையெழுத்திட்டார்.

மேலும், ஈரானுடன்  வர்த்தகத்தில் ஈடுபடும் நாடுகள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம் என்றும்  ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இதுகுறித்து ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில்;

‘ஈரான் மீது அதிகாரபூர்வமாக பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.  நொவம்பர் மாதம் இது அடுத்தகட்ட நிலையை அடையும். யாராவது ஈரானுடன் வர்த்தகம் செய்ய விரும்பினால் அவர்கள் அமெரிக்காவுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டாம்.  நான் உலகத்தின் அமைதிக்காகவே இதைக் கேட்கிறேன். வேறு எதுவும் இல்லை’ என்று பதிவிட்டுள்ளார்.

இந்த நிலையில் ஈரான் அரச ஊடகத்தில் திங்கட்கிழமை அந்த நாட்டு ஜனாதிபதி ஹசன்  ரூஹானி பேசும்போது; “அமெரிக்கா எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த உண்மையாகவே தயாராக இருந்தால் நாங்களும் எந்த நிபந்தனையும் இல்லாமல் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருக்கிறோம்” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையிலேயே மேற்படி பதிவை ட்ரம்ப் வெளியிட்டுள்ளார்.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக பராக் ஒபாமா பதவி வகித்த 2015 ம் ஆண்டு காலத்தில், ஈரானுக்கும் – அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட 06 வல்லரசு நாடுகளுக்கும் இடையே அணு சக்தி ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த ஒப்பந்தத்தில், அணு சக்தியை ஆக்கபூர்வ பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்துவோம் என்று ஈரான் உறுதியளித்தது. இதை ஏற்று அந்த நாட்டின் மீது விதிக்கப்பட்ட பல்வேறு பொருளாதாரத் தடைகளும் நீக்கப்பட்டன.

ஆனால், அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, ஈரானுடனான அணு சக்தி ஒப்பந்தத்தை முறிப்பேன் என்றும் ஈரானுடனான அணு ஆயுத ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது என்றும் கடுமையாக விமர்சித்து வந்தார்.

இந்த நிலையில் ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது. அதனைத் தொடர்ந்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்தது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்