தெ.கி.பல்கலைக்கழக உபவேந்தர் தெரிவு: இந்தக் கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்கள்

🕔 July 26, 2018

– அஹமட் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல், நாளை மறுதினம் 28ஆம் திகதி நடைபெறவுள்ளது.

ஏற்கனவே, சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.எம்.எம். இஸ்மாயில் இந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக இருந்த காலத்தில், இந்த நிறுவனமானது ஊழல் மோசடிகள் நிறைந்த இடமாகக் காணப்பட்டது.

இந்த நிலையில், அதற்கு ஒரு முற்றுப் புள்ளி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில், தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக காலி பிரதேசத்தைச் சேர்ந்த பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் நியமிக்கப்பட்டார்.

ஆனால், இவர் காலத்தில் வேறு பிரச்சினைகள் தலைகாட்டத் தொடங்கின. இவர் வெறுமனே தூய்மைவாதம் பேசிக் கொண்டு இருந்தாரே தவிர, பல்கலைக்கழகத்தில் எந்தவிதமான அபிவிருத்திகளையும் மேற்கொள்ளவில்லை.

இவரின் காலத்தில் பல்கலைக்கழகத்தின் தரமும், அபிவிருத்தியும் கடுமையாக வீழ்ந்து போயின.

இன்னொருபுறம், உரிய தகுதிகளைக் கொண்டிராத போதிலும், தனக்கு விருப்பமானவர்களாக இருந்த பலருக்கு,  பதவி உயர்வுகளை உபவேந்தர் நாஜிம் வழங்கியிருந்தார்.

அந்த நியமனங்களை தற்போது, பல்கலைக்கழகத்தின் இடைக்கால அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள உமா குமாரசாமி நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், நாஜிமின் உபவேந்தர் பதவிக் காலம் நிறைவடைவதற்கு முன்னராகவே, அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதோடு, ‘தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகம் பாரதூரமான வகையில் ஒழுங்கு குலைந்துள்ளது’ என்றும், ‘இந்தப் பல்கலைக்கழகத்தின் அதிகாரிகள் இயல்பு நிலையினை மீட்டெடுப்பதற்கு தவறிப்போய் விட்டனர்’ எனவும்,  உயர் கல்வி அமைச்சர் வெளியிட்டிருந்த வர்த்தமானி அறிவித்தலில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில்தான் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய உபவேந்தரைத் தெரிவு செய்தவற்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்தப் பதவிக்கு 19 பேர் விண்ணப்பித்துள்ளனர். இந்த விண்ணப்பதாரிகளில் – முன்னைய உபவேந்தர் நாஜிமும் ஒருவராவார்.

இப்போது கேள்வி என்னவென்றால், யாருடைய காலத்தில் ‘தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் நிருவாகம் பாரதூரமான வகையில் ஒழுங்கு குலைந்திருந்ததாக’ உயர்கல்வி அமைச்சர் அறிவித்திருந்தாரோ, அதே முன்னாள் உபவேந்தர் நாஜிம், மீண்டும் இந்தப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தராவதற்கு அனுமதிக்க முடியுமா?

தென்கிழக்கு பல்கலைக்கழகம் யாரின் பொறுப்பில் இருந்தபோது,  அதன் நிருவாகம் பாரதூரமான வகையில் ஒழுங்கு குலைந்திருந்ததோ, அதே நபரை மீண்டும் அதே நிறுவனத்துக்கு பொறுப்பாளராகக் கொண்டு வருவதென்பது நியாயமற்றதும் முட்டாள்தனமானதுமான செயற்பாடாகவே இருக்கும்.

எனவே, தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு நாஜிம் அல்லாத புதியதொரு உபவேந்தர் தெரிவு செய்யப்பட வேண்டும். அதற்கு, இந்தப் பல்கல்கலைக்கழகத்தை நேசிக்கும் எல்லோரும் முயற்சிக்க வேண்டும்.

குறிப்பாக, உபவேந்தரை தெரிவு செய்வதற்கான  வாக்களிப்புப் பலத்தைக் கொண்டுள்ளவர்கள், இது விடயத்தில் நேர்மையாக யோசித்துச் செயற்பட வேண்டும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்