ஊடகவியலாளர் ‘புவி’யின் தரை வழி ஹஜ் பயணத்துக்கு வீசா மறுப்பு; மன தைரியத்துக்கு பாராட்டு

🕔 April 20, 2018

 

– எம்.எஸ்.எம். நூர்தீன் –

இலங்கையிலிருந்து ஹஜ் மற்றும் உம்றா வணக்கங்களைச் மேற்கொள்வதற்காக, சவூதி அரேபியாவுக்கு தரை மார்க்கமாகச் செல்வதற்கான அனுமதியினை வழங்க முடியாது என காத்தான்குடியைச் சேர்ந்த ஊடகவியலாளர்  ‘புவி’ எனப்படும் எம்.ஐ.  றஹ்மதுல்லாஹ்விடம் இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு விமானம் மூலமாகவும், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் பயணித்து சவூதி அரேபியா சென்று, இம்முறை ஹஜ் கடமையை மேற்கொள்வதற்கு, ஊடகவியலாளர் புவி றஹ்மதுல்லாஹ் விண்ணப்பித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, அவருக்கு வீசா வழங்க முடியாது என இலங்கைக்கான சவூதி அரேபிய தூதரகம் தெரிவித்துள்ளது.

இலங்கையிலிருந்து ஹஜ் மற்றும் உம்றா வணக்கங்களை மேற்கொள்ளும் பொருட்டு, சவூதி அரேபியாவுக்கு தரை மார்க்கமாகச் செல்ல விரும்புவோர் இந்தியாவுக்கு சென்று அங்கிருந்து தரை வழி வீசா பெற வேண்டும்.

இதற்கு இலங்கையர் விரும்பினால் இலங்கை வெளிவிவகார அமைச்சு, இந்தியாவிலுள்ள இலங்கைத் தூரகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியாவிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்துடன் இணக்கப்பாட்டுக்கு வந்த பின்னர்தான், இலங்கையருக்கான ஹஜ் மற்றும் உம்றாவுக்கான தரை வழி வீசாவை வழங்க முயற்சிக்க வேண்டும் என இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரக அதிகாரி, ஊடகவியலாளர் புவியிடம் தெரிவித்துள்ளார்.

கடந்த செவ்வாய்க்கிழமை காலை சிரேஷ்ட ஊடகவியலாளர் எம்.ஐ. றஹ்மத்துல்லாஹ் (புவி) தரை மார்க்கமாக புனித ஹஜ்ஜுக்கு செல்வதற்காக இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரகத்துக்குச் சென்று அனுமதி கோரிய போதே இலங்கையிலுள்ள சவூதி அரேபிய தூதரக அதிகாரி மேற்கண்ட விடயத்தைக் கூறியுள்ளார்..

ஊடகவியலாளர் றஹ்மதுல்லாஹ்,  ஹஜ் பயணத்துக்கு தரை வழி மூலமான வீசாவைப் பெறும் நோக்குடன் இலங்கையிலுள்ள சவூதி தூதுவராலயத்திற்குச் சென்று அங்குள்ள தூதரக அதிகாரியுடன் கலந்துரையாடினார்.

இதற்கு முன்னதாக தரை வழியாக ஹஜ்ஜுக்குச் செல்வதற்காக, முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்திடம் இவர் விடுத்த மேற்படி கோரிக்கையை, அத்திணைக்களம் ஏற்றுக் கொண்டு,  இலங்கையிலுள்ள சவூதி தூதரகத்திற்கு பரிந்துரை செய்திருந்தது.

எனினும் இலங்கை கடல் சூழ் தீவாக உள்ள காரணத்தால், ஹஜ் மற்றும் உம்றா வணக்கங்களுக்குச் செல்ல எவருக்கும் தரை வழி வீசா வழங்க முடியாதென இலங்கைக்கான சவூதி தூதரக அதிகாரி ஊடகவியலாளர் புவியிடம் விபரித்துள்ளார்.

இதேவைள, ஊடகவியலாளர் புவியின் மன வலிமையை பாராட்டிய சவூதி அரேபிய தூதரக அதிகாரி, புத்தளத்தைச் சேர்ந்த இன்னுமொருவர் துவிச்சக்கர வண்டியில் ஹஜ் கடமைக்காக சவூதி அரேபியாவுக்கு தரை மார்க்கமாக செல்ல அனுமதி கோரியதாகவும் அவருக்கும் இதே விளக்கத்தினை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் இரண்டு நாடுகளின் வெளி நாட்டமைச்சுகளோடு  தொடர்பானது என்பதால், இது கடினமானதொரு காரியமாகும் என்பது தெளிவாகின்றது.

தொடர்பான செய்தி: மோட்டார் சைக்கிளில் ‘ஹஜ்’ செல்வதற்கு; காத்தான்குடியிலிருந்து மூத்த ஊடகவியலாளர் ‘புவி’ விண்ணப்பம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்