மாந்தையை வென்றது மக்கள் காங்கிரஸ்; தமிழருக்குத் தலைமை கொடுத்தார் றிசாட் பதியுதீன்

🕔 April 12, 2018

 

ன்னார் மாவட்டம் மாந்தை மேற்கு பிரதேச சபையை, வரலாற்றில் முதன்முறையாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது.

இன்று வியாழக்கிழமை நடைபெற்ற சபையின் முதல் அமர்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்றிபெற்ற ஆசீர்வாதம் சந்தியோகு (செல்லத்தம்பு) 15 வாக்குகளைப் பெற்று தவிசாளராக தெரிவுசெய்யப்பட்டார்.

யானை சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த 11 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த 03 உறுப்பினர்களும், சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த 01 உறுப்பினரும் செல்லத்தம்புக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

செல்லத்தம்புவை எதிர்த்து தவிசாளர் பதவிக்குப் போட்டியிட்ட வேதநாயகம் மஹிந்தன் 06 வாக்குகளை பெற்றுக்கொண்டார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 06 உறுப்பினர்கள் இவருக்கு ஆதரவாக வாக்களித்தனர். தவிசாளர் தெரிவில் தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இருவரும், முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த இருவரும் நடுநிலை வகித்தனர்.

பிரதித் தவிசாளர் தெரிவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பாக போட்டியிட்ட முஹம்மத் ஹனீபா முஹம்மத் தௌபீக் 15 வாக்குகளைப் பெற்றுக்கொண்டார். மக்கள் காங்கிரஸைச் சேர்ந்த 11 பேரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த மூவரும், சுயேச்சைக் குழுவின் ஓர் உறுப்பினரும் இவருக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த முஹம்மத் செல்ஜி 07 வாக்குகளைப் பெற்றார். இவருக்கு ஆதரவாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 06 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸைச் சேர்ந்த ஒருவரும் வாக்களித்தனர்.

இரண்டு உறுப்பினர்களை சபையில் கொண்டிருக்கும் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் ஒருவர் உட்பட, தமிழர் விடுதலைக் கூட்டணியைச் சேர்ந்த இருவரும் பிரதித் தவிசாளர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை.

இந்த சபைக்கான உள்ளூராட்சித் தேர்தலில் யானை சின்னத்தில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 11 உறுப்பினர்களையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு 06 உறுப்பினர்களையும், தமிழர் விடுதலைக் கூட்டணி இரண்டு உறுப்பினர்களையும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இரண்டு உறுப்பினர்களையும், சுயேச்சைக் குழு ஒரு உறுப்பினரையும் பெற்றுள்ளன.

மாந்தை மேற்கு பிரதேச சபையில் போட்டியிட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அணிக்கு தமிழர் ஒருவரை தலைமை வேட்பாளராக நிறுத்தி, அவரைத் தவிசாளராக்கிய அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு தமிழ் மக்கள் தமது நன்றிகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

(அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஊடகப் பிரிவு)       

Comments