சாய்ந்தமருது: தோடம்பழக் குழுவின் துரோகத்தனம்

🕔 March 24, 2018

– ஏ.எச். சித்தீக் காரியப்பர் –

சாய்ந்தமருதுவில் சுயேட்சையாக களமிறங்கி தோடம்பழச் சின்னத்தில் அனைத்து வட்டாரங்களிலும் வெற்றி பெற்ற குழுவினர், விரும்பத்தகாத செயல் ஒன்றில் இன்று தங்களை ஈடுபடுத்தியமை மன வேதனையைத் தருகிறது.

ஆரம்பம் முதல் இறுதி வரை தனித்துவத்தைப் பேணி, அரசியல் சாயம் கலக்காமல் தங்களைப் பாதுகாத்து, அவ்வாறானதொரு நம்பிக்கையையே மக்கள் மத்தியில் தோற்றுவித்த இந்த சுயேட்சைக் குழுவின் தலைமைத்துவத்தை சார்ந்தவர்கள் மேற்கொண்ட இந்தத் தவறான முடிவை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது.

வெறும் சத்தியப் பிரமாண நிகழ்வு ஒன்றுக்காக மாற்று அரசியல் பின்னணிக்குள் தங்கள் ஆடைகளைத் தொங்க விட்டமை இவர்களின் எதிர்கால செயற்பாடுகளிலும் கூட பல கேள்விகளைத் தோற்றுவித்துள்ளன.

சுயேட்சைக் குழுவினர் உள்ளூராட்சிமன்ற உறப்பினர்களாக சத்தியப் பிரமாணம் செய்ய வேண்டும் என்பதற்காக, தேசிய காங்கிரஸின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லாவின் உதவியைக் கோரியமையானது எதிர்காலத்தில் இந்தச் சுயேட்சைக் குழுவை வழி நடத்துவோரின் அரசியல் சோரத்துக்கான கோரல் மணியாகவே ஒலிக்கிறது.

யார் இவ்வாறான தீர்மானத்தை எடுத்தார்கள்? மக்கள் மன்றத்தில் கலந்துரையாடப்பட்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதா? மக்களிடம் சென்று நாங்கள் ஒற்றுமையாகச் செயற்பட வேண்டும், எமது ஒற்றுமையின் மூலமே நமக்கான உள்ளூராட்சி மன்றத்தைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றெல்லாம் கூறி, மக்களை மூலைச் சலவை செய்து, அதனை நம்பிய மக்களும் வாக்குப்பிச்சை அளிக்க, இன்று அந்த வெற்றியை   ஓர் அரசியல் தலைமைக்கு மொத்தமாகவே விற்பனை செய்துள்ளமையானது கேவலமான  செயலாகும்.

இது அரசியல் சோரமா? , விபசாராமா? பள்ளிவாசல் தலைமையின் கீழ் மறைந்துள்ள துரோகிகள் இதற்குப் பதில் தர வேண்டும்.

ஆளுநரின் கீழ்தான் தாங்கள் சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டுமென்றால் அதற்கான ஒழுங்குகளைத் தனித்துவமாகச் செய்வதற்கு இலகுவான வழிமுறைகள் உள்ள நிலையில், அதாவுல்லாவின் மூலமே அதற்கான வழி உள்ளது என நம்புவோர், மக்களின் மன நிலையை மறந்து செயற்பட்டது மிகத் தவறானது. இதற்காகவா மக்கள் இவர்களுக்கு வாக்களித்தனர்?

 “அக்கரைப்பற்றில் தங்களுடைய ஆட்களுடன் சத்தியப் பிரமாணம் செய்ய அதாவுல்லாஹ் அழைத்தார். ஆனால், நாங்கள் மறுத்து விட்டோம். பின்னர் அம்பாறையில் எமக்கான ஏற்பாடுகளை அதாவுல்லா செய்து தந்தார். அதன் போதே அதாவுல்லவையும் ஆளுநர் அழைத்து வந்தார். எங்களால் என்ன செய்ய முடியும்” என  இந்த விடயத்துக்கு யாராவாது நியாயம் கற்பிக்க முனைந்தால்  அந்த நியாயம்  முட்டாள்தனமானதாகும்.

மேலும், இதனை ஒரு தற்செயல் நிகழ்வு அல்லது விபத்து என்று யாராவாது சித்தரிப்பார்களானால் அவரே சாய்ந்தமருதுவின் முதலாவது துரோகியாக இன்றைய நிலையில் பெயர் குறிப்பிடப்பட வேண்டியவராவார்.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் முக்கியஸ்தரும்  சாய்ந்தமருதைச் சேர்ந்தவருமான ஏ.எம். ஜெமீல் கடுமையாகச் சுகயீனமடைந்து கொழும்பு லங்கா வைத்தியசாலையில் உயிருக்காகப் பேராடிய நிலையில் சிகிச்சை பெற்று வந்த போது, கொழும்புக்கு வந்திருந்த, சாய்ந்தமருது பள்ளிவாசல் தலைமையிலான குழுவினரில் பலர் ஜெமீலை பார்க்க வேண்டுமென ஆதங்கப்பட்ட போது, அவர்களில் சிலர்; “சீச்சீ.. அது கூடாது.. அவரை நாங்கள் பார்க்கச் செல்லக் கூடாது. அப்படி பார்க்கச் சென்றால் சாய்ந்தமருது மக்கள் எம் மீது அரசியல் சாயம் பூசி விடுவார்கள்” என்று கூறி ஒற்றைக் காலில் நின்று தடுத்து புனிதம் காத்தவர்கள், இன்று அதாவுல்லாவின் கால்களில் சரணாகதி அடைந்தது எந்த வகையில் நியாயமானது?

மனிதாபிமானத்துக்கு ஊரின் பெயரால் அரசியல் சாயம் பூசியோர், இன்று தங்கள் சுயநல அரசியலுக்காக இன்னொரு அரசியல் கட்சியின் சால்வையையே  அணிந்து கொண்டுள்ள கேவலம் கெட்ட நிலைமை இதுவாகும்.

உள்ளூராட்சித் தேர்தலில் தேசிய காங்கிரஸ் சாய்ந்தமருதுவில் போட்டியிடாமைக்கான உள்நோக்கம் என்னவென்று ஒருவன் முன்னர் பிழையாகச் சிந்தித்திருந்தாலும், அன்றைய அவனது சிந்தனை இன்று சரியானது என நியாயப்படுத்த  வேண்டியுள்ளது.

பருந்திடமிருந்து காப்பாற்றிய கோழிக் குஞ்சை ஓநாயிடம் கொடுத்த கதையாக இன்று எல்லாம் முடிந்துள்ளது

(இங்கு நான் கௌரவ அதாவுல்லாவை இலக்கு வைத்து இதனைப் பதிவிடவில்லை. எந்த அரசியல்வாதியின் உதவியை இந்த தோடம்பழக் குறூப் நாடியிருந்தாலும் நான் அந்த அரசியல்வாதியின் பெயரைக் குறிப்பிட்டே எழுதியிருப்பேன். ஹக்கீமாக இருந்தாலும் சரி ரிஷாத்தாக இருந்தாலும் சரியே)

Comments