அதாஉல்லா முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை: சபீஸ் குற்றச்சாட்டு

🕔 March 20, 2018

– அஹமட் –

க்கரைப்பற்று மாநகர சபையின் மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகளுக்கான நபர்களின் பெயர்களை அறிவிப்பதில், தேசிய காங்கிரசின் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா – முறையான விதத்தில் நடந்து கொள்ளவில்லை என்று, அக்கரைப்பற்று மாநகர சபைக்கு தேசிய காங்கிரஸ் ஊடாக தெரிவு செய்யப்பட்டுள்ள உறுப்பினர் எஸ்.எம். சபீஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

உள்ளுராட்சி சபை விடயங்கள் தொடர்பாக, ஏனைய ஊர்களில் முறையான விதத்தில் அறிவிப்புச் செய்யப்பட்டுள்ளமை போன்று, அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகள் தொடர்பில் அதாஉல்லா அறிவிப்புச் செய்வார் என்றும், அப்போது தங்களையும் அதாஉல்லா அழைப்பார் எனவும், தான் எதிர்பார்த்திருந்ததாகவும், ஆனால் அவ்வாறு அதாஉல்லா நடந்து கொள்ளவில்லை என்றும் சபீஸ் தெரிவித்துள்ளார்.

அக்கரைப்பற்றில் கடந்த வாரம் அதாஉல்லாவுக்கு எதிராக டயர்களும், அதாஉல்லாவின் படங்களைக் கொண்ட பதாதைகளும் எரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில், தன்னிலை விளக்கம் வழங்கும் வகையில், சபீஸ் பேசியுள்ள வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

குறித்த வீடியோவிலேயே சபீஸ் மேற்கண்ட விடயங்களைக் கூறியுள்ளார்.

“அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயர் பதவியினை சுழற்சி முறையில் பகிர்ந்தளிக்கவுள்ளதாகவும், எனக்கும் குறித்த ஒரு காலப் பகுதிக்கு அந்தப் பதவியை வழங்கவுள்ளதாகவும் என்னிடம் தலைவர் அதாஉல்லா தனியாகக் கூறினார்.

அப்போது, அவர் எனக்கு வழங்குவதாகக் கூறிய காலப் பகுதி போதாது என்று நான் தெரிவித்தேன். மேலும், அதனை நீடித்து வழங்குமாறும் வேண்டிக் கொண்டேன். அதேவேளை, மேயர் பதவியை எனக்கு எப்போது வழங்குவீர்கள் எனவும் அவரிடம் வினவினேன்.

அதற்கு, மற்றவர்களுடன் பேசி விட்டு, என்னிடம் பேசுவதாக தலைவர் அதாஉல்லா பதிலளித்தார்” என்றும் அந்த வீடியோவில் சபீஸ் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அக்கரைப்பற்று மாநகர சபைக்கான மேயர் மற்றும் பிரதி மேயர் பதவிகள் தொடர்பாக, முறையான விதத்தில் அதாஉல்லா அறிவிப்பினை வெளியிடவில்லை எனத் தெரிவித்துள்ள சபீஸ்; அந்த அறிப்பு வெளியாகும் போது, அக்கரைப்பற்றிலுள்ள ஒரு பள்ளிவாசலில் தான் இருந்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும், அதாஉல்லா தனது வீட்டில் நடத்திய கூட்டத்தில் வெளியிட்ட ரகசிய அறிவிப்பு கசிந்தவுடன், ஆத்திரம் கொண்ட ஆதரவாளர்கள்தான் டயர் மற்றும் பதாகை எரிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் சபீஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.

இருந்தபோதும், டயர் மற்றும் பதாகை எரிப்பு நடவடிக்கைகளை தான் தடுத்து நிறுத்த முயற்சித்ததாகவும் அந்த வீடியோவில் சபீஸ் தெரிவித்துள்ளார்.

எது எவ்வாறிருந்த போதும், அதாஉல்லாவுக்கு எதிரான டயர் மற்றும் பதாகை எரிப்பு நடவடிக்கைகளுக்குப் பின்னணியில், சபீஸ் இருந்தார் என, பரவலாகக் குற்றம்சாட்டப் பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

</

Comments

புதிது பேஸ்புக் பக்கம்