அட்டாளைச்சேனையில் அதிக வட்டாரங்களை மு.கா. கைப்பற்றியுள்ள போதும், ஆட்சியமைப்பதில் சிக்கல்

🕔 February 11, 2018

– மப்றூக் –

ட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான தேர்தலில், யானைச் சின்னத்தில் போட்டியிட்ட மு.காங்கிரஸ் அதிக வட்டாரங்களைக் கைப்பற்றியுள்ள போதிலும், அந்தக் கட்சியினால் தனித்து  ஆட்சியமைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

வட்டார நிலைவரம்

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மொத்தமாக 11 வட்டாரங்கள் உள்ளன. அவற்றில் அட்டாளைச்சேனையிலுள்ள 06 வட்டாரங்களில் 05 வட்டாரங்களை யானை சின்னமும், 01 வட்டாரத்தினை தேசிய காங்கிரசும் கைப்பற்றியுள்ளன.

அதேவேளை, பாலமுனையிலுள்ள இரண்டு வட்டாரங்களில் ஒரு வட்டாரத்தினை ஐக்கிய மக்கள் கூட்டணியின் மயில் சின்னமும், மற்றைய வட்டாரத்தினை யானைச் சின்னமும் கைப்பற்றியுள்ளன.

ஒலுவிலிலுள்ள இரண்டு வட்டாரங்களையும் மு.காங்கிரஸ் சார்பான யானைச் சின்னம் கைப்பற்றிக் கொண்டது.

இந்த நிலையில், தீகவாபி வட்டாரத்தின் ஓர் ஆசனத்தை மஹிந்த ராஜபக்ஷ சார்பான தாமரை மொட்டுச் சின்னம் கைப் பற்றியுள்ளது.

மொத்த வட்டாரக் கணக்கு

இந்தக் கணக்கின்படி அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மு.கா. சார்பான யானைச் சின்னம் 08 வட்டாரங்களையும், மயில் சின்னம் 01 வட்டாரத்தையும், தேசிய காங்கிரஸ் 01 வட்டாரத்தையும், தாமரை மொட்டு 01 வட்டாரத்தினையும் கைப்பற்றியுள்ளன.

அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கான மொத்த உறுப்பினர் எண்ணிக்கை 18 ஆகும். வட்டாரங்களிலிருந்து 11 உறுப்பினர்களும், விகிதாசாரப் பட்டியலில் இருந்து 07 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுவர்.

இதற்கிணங்க, நடைபெற்ற தேர்தலில் – அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் மொத்தமாக 24,027 வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளன.

கட்சிகளுக்கான மொத்த ஆசனங்கள்

அந்த வகையில் ஓர் உறுப்பினரைப் பெறுவதற்கான வாக்குகளின் எண்ணிக்கை (24,027 /18) 1334 ஆகும்.

நேற்றைய தேர்தலில் மு.காங்கிரஸ் சார்பான யானைச் சின்னம் பெற்றுக் கொண்ட வாக்குகளின் எண்ணிக்கை 11,044 ஆகும். எனவே, யானைச் சின்னம் பெற்றுக் கொள்ளும் ஆசனங்களின் எண்ணிக்கை (11,044 /1334) 08 ஆக அமைகிறது.

ஏற்கனவே, குறித்த 08 ஆசனங்களையும், வட்டாரங்களில் யானைச் சின்னம் வென்று விட்டது. எனவே, யானைச் சின்னத்துக்கு விகிதாரப் பட்டியலில் ஆசனங்கள் கிடைக்காது.

இந்த நிலையில் 7748 வாக்குகளைப் பெற்ற தேசிய காங்கிரசுக்கு (7748/1334) 06ஆசனங்கள் கிடைக்கும். ஏற்கனவே, வட்டாரத்தில் ஓர் ஆசனத்தை தேசிய காங்கிரஸ் வென்று விட்டதால், 05 ஆசனங்கள் விகிதாசாரப் பட்டியலில் இருந்து கிடைக்கும்.

இந்த நிலையில், ஐக்கி மக்கள் கூட்டமைப்பின் மயில் சின்னம் 4456 வாக்குகளை மொத்தமாக பெற்றுள்ளது. அதற்காக அந்தக் கட்சிக்கு (4456/1334) 03 ஆசனங்கள் கிடைக்க வேண்டும். ஏற்கனவே, வட்டாரத்தில் ஓர் ஆசனத்தை மயில் சின்னம் வென்றெடுத்துள்ளதால், விகிதாசாரப் பட்டியலில் இருந்து 02 ஆசனங்கள் கிடைக்கும்.

மொத்தக் கணக்கு

ஆக, அட்டாளைச்சேனை பிரதேச சபையில் மு.கா. சார்பான யானைச் சின்னத்துக்கு 08 ஆசனங்களும், தேசிய காங்கிரசுக்கு 06 ஆசனங்களும், ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு சார்பான மயில் சின்னத்துக்கு 03 ஆசனங்களும் கிடைக்கும். தாமரை மொட்டுச் சின்னம் 01 ஆசனத்தை வென்றெடுத்துள்ளது.

அந்த வகையில், மு.கா. சார்பான யானைச் சின்னத்துக்கு 08 ஆசனங்களும், எதிர்கட்சிகள் 10 ஆசனங்களையும் வைத்திருக்கும்.

50 வீதத்துக்கு குறைந்த நிலை

வட்டார தேர்தல் முறையில் அளிக்கப்பட்ட வாக்குகளில் 50 வீதத்துக்கு அதிகமான வாக்குகளைப் பெற்றிராத கட்சி, சபையின் தலைவர் பதவியினைக் கோர முடியாது.

எனவே, சபை ஒன்று கூடும் முதலாவது நாளில், அந்த சபையின் தலைவர் யார் என்பதை, உறுப்பினர்கள் வாக்களித்தே தீர்மானிக்க வேண்டும்.

அப்படியாயின் மு.காங்கிரஸ் சார்பான யானைச் சின்னத்துக்கு எதிராக, ஏனைய கட்சிகள் அனைத்தும் ஒன்றினையுமாயின், அந்த கட்சிகளிலிருந்து ஒருவரை அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவு செய்ய முடியும்.

அதாவது, அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் அதிக வட்டாரங்களை மு.கா. சார்பான யானைச் சின்னம் கைப்பற்றிக் கொண்டுள்ள போதும், அந்தக் கட்சியால் ஆட்சியமைக்கவோ, அந்தக் கட்சி சார்பான ஒருவரை தவிசாளராக நியமிக்கவோ முடியாது என்பதுதான் தற்போதைய கள நிலைவரமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்