அஷ்ரப் மரண அறிக்கை வழங்கப்படாமை தொடர்பில், சுவடிகள் கூடம் மீது, தகவல் அறிவும் ஆணைக்குழு குற்றச்சாட்டு: பசீர் தகவல்

🕔 January 17, 2018

– மப்றூக் –

முஸ்லிம் காங்கிரசின் ஸ்தாபகத் தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27ஆம் திகதிக்கிடையில் தேடி வழங்குமாறு, தேசிய சுவடிக் கூடத்தின் பணிப்பாளர் நாயகத்துக்கு, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழு பணித்துள்ளதாக, ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான பசீர் சேகுதவூத் தெரிவித்தார்.

அஷ்ரப்பின் மரணம் தொடர்பான அறிக்கையினை பெற்றுத் தருமாறு கோரி, தகவல் அறியும் ஆணைக்குழுவுக்கு பசீர் சேகுதவூத் மேன்முறையீடு செய்தமைக்கிணங்க நடைபெற்று வரும் விசாரணைகளின் மூன்றாவது அமர்வு, நேற்று புதன்கிழமை இடம்பெற்றது. இச்சந்தர்ப்பத்திலேயே, மேற்படி பணிப்புரை வழங்கப்பட்டது.

பசீர் சேகுதவூத்துக்கு  குறித்த அறிக்கையினை வழங்கத் தவறி வருகின்றமை தொடர்பில், தேசிய சுவடிகள் கூடத்தின் மீது, தகவல் அறியும் ஆணைக்குழு இதன்போது குற்றம் சுமத்தியதாகவும் பசீர் கூறினார்.

அஷ்ரப்பினுடைய மேற்படி மரண அறிக்கையின் பிரதிகள் அக்காலப் பகுதியில் குற்றப் புலனாய்வு பிரிவு, அப்போதைய விமானப்படைத் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் போன்றோருக்கு அனுப்பப்பட்டதாகவும், எனவே அவர்களிடமிருந்து ஒரு பிரதியினைப் பெற்று  பசீர் சேகுதவூத்துக்கு வழங்குமாறும் சுவடிகள் கூட பணிப்பாளர் நாயகத்துக்கு,  தகவல் அறியும் ஆணைக்குழு நேற்றைய தினம் அறிவுறுத்தியதாகவும் பசீர் தெரிவித்தார்.    

அஷ்ரப்பின் மரணம் தொடர்பில் உண்மையைக் கண்டறிவதற்காக நியமிக்கப்பட்ட ஆணைக்குழுக்குழுவின் அறிக்கையினை வழங்குமாறு கோரி, ஜனாதிபதி செயலகத்துக்கு கடந்த வருடம் பெப்ரவரி மாதம், பசீர் சேகுதாவூத் கடிதமொன்றினை அனுப்பியிருந்தார்.

ஆயினும் சம்பந்தப்பட்ட அறிக்கையினை சுவடிகள் கூடத்துக்கு தாங்கள் அனுப்பி விட்டதாக, ஜனாதிபதி செயலகத்திலிருந்து பசீர் சேகுதாவூத்துக்கு அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த அறிக்கையினைப் பெற்றுத் தருமாறு கோரி, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு பசீர் சேகுதாவூத் மேன்முறையீடு செய்திருந்தார்.

அதற்கமைவாக தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவுக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதி முதன்முதலாக பசீர் அழைக்கப்பட்டிருந்தார்.

அதன்போது, அங்கு வருகை தந்திருந்த ஜனாதிபதி செயலக பிரதிச் செயலாளர் ஒருவர்; அஷ்ரப் மரணம் தொடர்பான அறிக்கை குறித்து, பசீர் சேகுதாவூதுக்கு பதில் எழுதுவதற்காக, சுவடிகள் கூடத்திலிருந்து அந்த அறிக்கை வைக்கப்பட்டிருந்த கோப்பினை தாங்கள் பெற்றதாகவும், ஆனால், அந்தக் கோப்பினுள் சம்பந்தப்பட்ட அறிக்கை இருக்கவில்லை என்றும், கூறினார்.

இதன் பின்னர், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் இரண்டாவது விசாரணை அமர்வுக்காக, தேசிய சுவடிகள் கூடத்தின் பொறுப்புவாய்ந்த அதிகாரி அழைக்கப்பட்டிருந்தார்.

அதற்கிணங்க இரண்டாவது விசாரணை அமர்வு இடம்பெற்றது. அதன்போது, அஷ்ரப்பினுடைய மரணம் தொடர்பான அறிக்கையின் மூன்று பக்கங்களை மட்டும், தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவிடம் – சுவடிகள் கூடத்தின் அதிகாரி சமர்ப்பித்தார். ஆயினும், தனக்கு முழுமையான அறிக்கை வழங்கப்பட வேண்டுமென பசீர் சேகுதாவூத் அதன்போது வாதிட்டார்.

இந்த நிலையிலேயே, தகவல் அறியும் உரிமைக்கான ஆணைக்குழுவின் மூன்றாவது விசாரணை அமர்வு, நேற்றைய தினம் நடைபெற்றது.

பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி, தகவல் அறியும் ஆணைக்குழுவின் நான்காவது விசாரணை அமர்வு நடைபெறும் என அறிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய அமர்வு தொடர்பில் பசீர் சேகுதவூத் வழங்கிய மேலதிக விபரங்களை வீடியோவில் கேட்கலாம்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்