சேகு, அதா இணைகிறார்கள்; அக்கரைப்பற்று முழுக்க சுவரொட்டிகள்

🕔 January 12, 2018

– அஜ்மல் அஹம்மத் –

‘அக்கரைப்பற்றை ஒரு குரலாக்க இரு துருவங்கள் இணைகின்றனவா?’ எனும் தலைப்பபினைக் கொண்ட சுவரொட்டிகள் அக்கரைப்பற்று முழுவதும் பரவலாக ஒட்டப்பட்டுள்ளன.இச்சுவரொட்டியில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாவுல்லா மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எச். சேகு இஸ்ஸதீன் ஆகியோரின் படங்கள் உள்ளன.

முன்னாள் அமைச்சர் சேகு இஸ்ஸதீன், முஸ்லிம் காங்கிரஸில் மீண்டும் தவிசாளராகின்றார் என செய்திகள் வெளிவந்த நிலையில் இச்சுவரொட்டிகள் வெளியாகியுள்ளன.

இச்சுவரொட்டிகள் தற்போது முஸ்லிம் அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், அக்கரைப்பற்று மக்களின் பேசு பொருளாகவும் மாறியுள்ளது.

அதாவுல்லா மற்றும் இஸ்ஸதீன் ஆகியோர் கடந்த 30 வருடங்களாக எதிர் அரசியலில் ஈடுபட்டு வந்தனர். அக்கரைப்பற்றைச் சேர்ந்த இவர்கள் இருவரும் ஒருபோதும் இணைய மாட்டார்கள் என்ற நிலைப்பாடு பொது மக்களிடம் இருந்தது. எனினும்  இவர்கள் இருவரும் இணைந்து அரசியலில் பயணிக்க வேண்டும் எனும் விருப்பம், அக்கரைப்பற்று கல்விச் சமூகத்தினரிடையே இருந்து வந்தது. மேலும், இவர்கள் இருவரும் இணைந்து அக்கரைப்பற்றின் நன்மைக்காக செயற்பட வேண்டும் என்கிற கோரிக்கையும் நீண்ட காலமாக உள்ளது.

அரசியல் ரீதியாக இவர்கள் இருவருக்குமிடையில் கொள்கை முரண்பாடுகள் இருந்தலும், இவர்கள் ஒன்றிணைவது அக்கரைப்பற்றுக்கு மாத்திரமன்றி கிழக்கு மாகாண அரசியலிலும் பாரிய மாற்றத்தினை ஏற்படுத்தும் எனவும் நம்பப்படுகின்றது.

குறிப்பாக தேசிய காங்கிரஸ் தலைமையினை வலுப்படுத்துவதற்கும், அந்தக் கட்சியினை வடக்கு – கிழக்கு முழுவதும் விரிவுபடுத்துவதற்கும் சேகு இஸ்ஸதீனின் இணைவு பாரிய உறுதுணையாக இருக்கும் என்பதுடன், இவர்களின் கூட்டு – முஸ்லிம் அரசியலிலும் பாரிய தாக்கத்தையும் செலுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

சேகு இஸ்ஸதீனும், அதாஉல்லாவும் முஸ்லிம் காங்கிரசின் தவிசாளர்களாகப் பதவி வகித்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்