அரசியலுக்கு வருவது உறுதி; தனிக்கட்சி ஆரம்பித்து சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவேன்: நடிகர் ரஜினி அறிவிப்பு

🕔 December 31, 2017

ரசியலுக்கு தான் வருவது உறுதி என்றும், இது காலத்தின் கட்டாயம் எனவும் தென்னிந்திய திரைப்பட நடிகர் ரஜினிகாந்த் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும், எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தான் தனிக்கட்சி ஆரம்பித்து, தமிழகம்  முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சென்னையில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் தனது ரசிகர்களை சந்தித்டது வரும் ரஜினிகாந்த்; இன்று 06ஆவது நாளாகவும் சந்தித்த போதே, மேற்கண்ட தகவல்களை வெளியிடட்டார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்;

“அரசியலுக்கு வருவதற்கு எனக்கு பயம் இல்லை. ஊடகங்களைப் பார்த்துதான் பயப்படுகின்றேன். பெரிய பெரிய ஜாம்பவான்கள் எல்லாம் ஊடகங்களைப் பார்த்து பயப்படுகிறார்கள் – திணறுகிறார்கள். நான் இன்னும் குழந்தை. எனக்கு எப்படி இருக்கும்? நான் ஏதாவது பேசினால், உடனே விவாதமாகிவிடுகிறது.

அரசியலுக்கு வருவது உறுதி. இது காலத்தின் கட்டாயமாகும். எதிர்வரும் சட்டப்பேரவை தேர்தலில் நான் தனிக்கட்சி ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு முடிவு செய்துள்ளேன்.

உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை. அரசியலுக்கு பணத்துக்காக, புகழுக்காக வரப் போவதில்லை. பதவிக்காக என்றால் 1996லேயே வந்திருப்பேன். 45 வயதிலேயே எனக்கு பதவி ஆசை வரவில்லை. 68 வயதில் பதவி ஆசை வருமா? அப்படி வந்தால் நான் ஆன்மிகவாதி என்று சொல்வதற்கே தகுதியற்றவன் ஆகிவிடுவேன்.

அரசியல் மிகவும் கெட்டுப்போய்விட்டது. ஜனநாயகம் சீர்கெட்டுப் போய்விட்டது. தமிழகத்தில் நடந்த சில அரசியல் சம்பவங்கள் ஒவ்வொரு தமிழனையும் தலைகுனிய வைத்துவிட்டது.  ஒவ்வொரு மாநில மக்களும் நம்மைப் பார்த்து சிரிக்கிறார்கள்.

இந்த நேரத்தில் முடிவெடுக்கவில்லையென்றால் எனக்கு வாழ்நாள் முழுக்க குற்ற உணர்ச்சி இருக்கும்.

ஒரு கட்சியை ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு ஆட்சி அமைப்பது சாதாரணம் இல்லை என்பது எனக்குத் தெரியும். கடவுள் அருள், மக்கள் ஆதரவு இரண்டும் எனக்கு கிடைக்கும் என்ற முழு நம்பிக்கை இருக்கிறது. எனக்குத் தொண்டர்கள் வேண்டாம், காவலர்கள் வேண்டும். காவலர்களைக் கண்காணிக்கும் பிரதிநிதிதான் நான். சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு, கட்சி ஆரம்பித்து செயல்திட்டங்கள் வகுப்போம். சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மூன்று ஆண்டுகளில் பதவி விலகுவோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்