முதலமைச்சரை அம்மணமாக்கிய கேலிச் சித்திரம்; ஊடகவியலாளர் பாலா கைது

🕔 November 5, 2017

மிழகத்தின் நெல்லை பிரதேசத்தில் இடம்பெற்ற தீக்குளிப்பு சம்பவம் தொடர்பாக கேலிச் சித்திரமொன்றினை வரைந்த, சென்னையைச் சேர்ந்த ஊடகவியலாளர் பாலா என்பவரை, தமிழக பொலிஸார் இன்று ஞாயிற்றுக் கிழமை கைது செய்துள்ளனர்.

கந்து வட்டிக் கொடுமையால் பாதிக்கப்பட்ட நெல்லையைச் சேர்ந்த இசக்கி முத்து என்பவர் கடந்த ஒக்டோபர் 23ம் திகதி, நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் முன்னால், தனது குடும்பத்துடன் தீக்குளித்தார். இதில் இசக்கி முத்து, அவருடைய மனைவி சுப்புலட்சுமி, குழந்தைகள் மதி சரண்யா மற்றும் அட்சயா ஆகியோர் உயிர் இழந்தனர்.

இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனையடுத்து, இந்த தீக்குளிப்பு தொடர்பில்  கேலிச் சித்திரமொன்றினை வரைந்த ஊடகவியலாளர் பாலா, அதனை அவர் நடத்திவரும் இணைத்தளத்திலும், தனது பேஸ்புக் பக்கத்திலும் பதிவேற்றியிருந்தார்.

தமிழக முதல்லமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நெல்லை மாவட்ட ஆட்சியர் மற்றும் நெல்லை பொலிஸ் ஆணையாளர் ஆகியோரை கடுமையாக சாடும் வகையில் அந்தக் கேலிச் சித்திரம் அமைந்திருந்தது.

இதேவேளை, பாலாவின் அந்தக் கேலிச் சித்திரம் வைரலாகப் பரவத் தொடங்கியது.

இதையடுத்து ஊடகவியலாளர் பாலா மீது நெல்லை மாவட்ட ஆட்சியர், நெல்லை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை பதிவு செய்தார். இதன் பேரில் சென்னை வந்த நெல்லை பொலிஸார் பாலாவை கைது செய்தனர்.

இந்த நிலையில் பாலா எங்கு கொண்டு செல்லப்பட்டார் என்பது குறித்து தகவல்கள் ஏதுமில்லை என, தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன.

பாலாவின் பேஸ்புக் பக்கத்தில் வெளிவிடப்பட்டுள்ள குறித்த கேலிச் சித்திரத்தை தற்போது வரை (ஞாயிறு இரவு 10.00 மணி) 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளதோடு, சுமார் 40 ஆயிரம் பேர் -அந்த சித்திரத்தை பகிர்ந்துள்ளனர்.

கைதுக்கு காரணமாக அமைந்த – பாலா வரைந்த கேலிச் சித்திரம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்