ட்ரக் வண்டியால் பொதுமக்கள் மீது மோதி தாக்குதல்; 08 பேர் பலி; நிவ்யோக்கில் சம்பவம்

🕔 November 1, 2017

மெரிக்காவின் நிவ்யோக் – மன்ஹட்டன் எனும் பகுதியிலுள்ள சைக்கிள்கள் ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது, டரக் வண்டியினை மோதி நடத்தப்பட்ட தாக்குதலில் 08 பேர் பலியாகியுள்ளனர் என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தத் தாக்குலில் ஆகக்குறைந்தது 11 பேர் காயமடைந்துள்ளனர்.

ட்ரக் வண்டியில் வந்தவர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். இதனையடுத்து அவர் – சத்திர சிகிச்சையொன்று உட்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலை நடத்தியவரின் ட்ரக் வண்டியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட குறிப்புகள் சிலவற்றினூடாக, சந்தேக நபர் – ஐ.எஸ்.ஐ.எஸ். இயக்கத்தைச் சேர்ந்தவர் என அறிய முடிவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தத் தாக்குதல் உலக வர்த்தக மையத்துக்கு அருகாமையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

சம்பவம் குறித்து நிவ்யோக் மேயர் பில் டி பிளாசியோ கூறுகையில்; “இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலாகும். மேலும் கோழழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலாகவும் இது உள்ளது. அப்பாவிப் பொதுமக்கள் இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். தங்கள் மீது ஏன் தாக்குதல் நடத்தப்படுகிறது என்பதைக்கூட, தெரிந்து கொள்ளாத மக்கள் மீது இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது” என்றார்.

தாக்குதலை நடத்தியவர் 29 வயதுடைய சைபுல்லா ஹபீபுல்லா என அடையாளம் காணப்பட்டுள்ளார். உஸ்பெகிஸ்தானைச் சேர்ந்த இவர் 2010ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு வந்துள்ளார் என விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதல் நடத்திய போது, சந்தேக நபர் “அல்லாஹு அக்பர்” என்று உரத்துச் சத்தமிட்டதாக, சம்பவத்தைக் கண்டவர்கள் கூறுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்