மு.கா.வின் இரட்டை முகம்; 20ஆவது திருத்தத்துக்கு கிழக்கின் ஆதரவை பெற்றுக்கொடுக்க முஸ்தீபு: எதிர்கட்சித் தலைவரையும் வளைத்துப் பிடிக்க முயற்சி

🕔 August 24, 2017

– மப்றூக் –

ரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு எதிராக, ஜனநாயகத்தை விரும்பும் அனைத்துத் தரப்பினரும் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், கிழக்கு மாகாண சபையில் அதற்கு ஆதரவாக வாக்கெடுப்பு ஒன்றினை நடத்தி முடிக்கும் முயற்சியில், முஸ்லிம் காங்கிரஸ் ஈடுபட்டு வருகின்ற மோசடியான செயற்பாடு தொடர்பில் புதிது செய்தித்தளத்துக்கு அறியக் கிடைத்துள்ளது.

அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் ஒரே தினத்தில் நடத்தப் போகிறோம் எனக் கூறி, அரசியலமைப்பிலுள்ள மாகாணசபை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு ரணில் விக்ரமசிங்க யோசனையொன்றினை அமைச்சரவையில் முன்வைத்திருந்தார். தற்போது அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச் சட்ட மூலமாக அந்த யோசனை நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த திருத்தச் சட்ட மூலத்தினை கொண்டு வந்துள்ளமையின் நோக்கம் ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று கூறப்படுகிறது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளின் ஆயுட்காலம் நிறைவடைகின்றன. எனவே, குறித்த மாகாண சபைகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும். அப்படி நடத்தினால், அந்தத் தேர்தல்களில் தாம் தோற்று விடுவோம் என்று, தற்போதைய ஆட்சியாளர்கள் அச்சப்படுகின்றனர். எனவே தேர்தல்களை பிற்போடுவதுதான் இப்போது, ஆட்சியாளர்களுக்கு உள்ள ஒரே வழியாகும்.

தற்போதுள்ள மாகாண சபைகளில் ஊவா மாகாண சபையின்  பதவிக் காலம்தான் இறுதியாக நிறைவடைகிறது. 2019ஆம் ஆண்டு அதன் ஆட்சிக் காலம் நிறைவுக்கு வரவுள்ளது. எனவே, அந்த ஆண்டு, ஊவா மாகாண சபையுடன் சேர்த்து அனைத்து மாகாண சபைகளின் தேர்தல்களையும் நடத்துவதுதான் ரணில் விக்ரமசிங்கவின் திட்டமாகும்.

இதற்காகத்தான் அரசியலமைப்பில் 20ஆவது திருத்தத்தினை மேற்கொள்ளவுள்ளனர்.

மேலும், மாகாணசபைகளைக் கலைக்கும் அதிகாரம், மாகாண சபைகளுக்கான தேர்தல் தினத்தை தெரிவு செய்யும் அதிகாரங்களெல்லாம், 20ஆவது திருத்தத்தின் மூலம் நாடாளுமன்றத்தின் கைகளுக்குச் செல்லவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறானதொரு நிலையில், ஒக்டோபர் மாதம் கலைகின்ற மூன்று மாகாண சபைகளுக்குமான தேர்தல்களையும் பிற்போடக் கூடாது என்று, பல்வேறு தரப்புக்களும் கோரிக்கை விடுகின்றன. முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அவ்வாறு கோரிக்கை விட்டிருந்தார்.

இது இப்படியிருக்க அரசாங்கம் கொண்டு வந்துள்ள 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவளிப்பதா இல்லையா என்பது தொடர்பில், மாகாண சபைகள் வாக்கெடுப்புகளை நடத்தி வருகின்றன.

அந்த வகையில் கடந்த செய்வாய்கிழமை வடமத்திய மாகாண சபை நடத்திய வாக்கெடுப்பு, 20 ஆவது திருத்தத்துக்கு ஆதரவாக அமைந்துள்ளது.

ஊவா மாகாண சபையில் இன்று வியாழக்கிழமை வாக்கெடுப்பொன்று நடைபெற்றது. அதில் பெரும்பான்மையானோர் 20ஆவது திருத்தத் சட்ட மூலத்துக்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

இந்த நிலையில், கிழக்கு மாகாண சபையில் 20 ஆவது திருத்தச் சட்ட மூலம் தொடர்பில் வாக்கெடுப்பொன்றினை, நாளை வெள்ளிக்கிழமை நடத்துவதென தீர்மானிக்கப்பட்டிருந்தது.

இருந்த வாக்கெடுப்பில் பெரும்பான்மையானோரின் வாக்குகளை 20ஆவது திருத்தத்துக்கு ஆதரவாகப் பெற்றுக் கொடுப்பதுதான், கிழக்கு மாகாண சபையின் முதலமைச்சர் ஹாபீஸ் நசீரின் திட்டமாகும். கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீரும் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு, கிழக்கு மாகாணசபை ஆதரவளிக்க வேண்டும் எனும் நிலைப்பாட்டில் உள்ளார்.

எனவே, முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் மற்றும் சுகாதார அமைச்சர் நசீர் ஆகியோர் கிழக்கு மாகாண சபையின் தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் மற்றும் ஏனைய எதிர்கட்சி உறுப்பினர்களிடம் இது தொடர்பில் பேசியுள்ளனர்.

கிழக்கு மாகாண எதிர்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பையுடனும் இதுதொடர்பில் மு.கா. தரப்பு பேசியுள்ளது.

கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் சார்பாக,  கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் யூ.எல்.ஏ. அஸீஸ், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் சிலருடன் பேசியதாகவும் அறிய முடிகிறது.

எவ்வாறாயினும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினரும், எதிர்கட்சித் தலைவர் உதுமாலெப்பையும் 20ஆவது திருத்தச் சட்ட மூலத்துக்கு ஆதரவளிக்கப் போவதில்லை என்பதை, தம்முடன் பேசியவர்களிடம் உறுதிபடத் கூறியுள்ளனர்.

எனவே, இவ்வாறானதொரு சூழ்நிலையில் 20ஆவது திருத்தம் தொடர்பில் வாக்கெடுப்பொன்றினை கிழக்கு மாகாண சபையில் நடத்தினால், அதிகமானோர் அதற்கு எதிராகவே வாக்களிப்பர் என்பதை முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் புரிந்துகொண்டுள்ளார்.

அதனால், இது தொடர்பாக நாளை வெள்ளிக்கிழமை நடத்துவதற்கு தீர்மானித்திருந்த வாக்கெடுப்பினை, நடத்துவதில்லை என அறிவித்துள்ளனர்.

காலவதியடையும் மாகாண சபைகளுக்கான தேர்தல்களை உடனடியாக நடத்த வேண்டும் என, ஒருபுறம் கூறிக் கொள்ளும் முஸ்லிம் காங்கிரஸ்; மறுபுறமாக, மாகாண சபைகளுக்கான தேர்தல்களை ஒத்தி வைக்கும் 20ஆவது திருத்தத்துக்கு, கிழக்கு மாகாண சபையின் ஆதரவினைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீயாக வேலை செய்து கொண்டிருக்கின்மையானது, அதன் இரட்டை முகத்தினை வெளிக்காட்டும் படியாக உள்ளது.

முஸ்லிம் காங்கிரஸை – சமூகக் கட்சி என்று நம்பிக் கொண்டிருக்கும் பொதுமக்கள்தான் பாவம்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்