நான் அப்படிக் கூறவில்லை; புதிது செய்தித்தளத்துக்கு டிலந்த மறுப்பு

🕔 June 17, 2017

– றிசாத் ஏ காதர் –

‘சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்’ எனும் தலைப்பில் ‘புதிது’செய்தித்தளம் வெளியிட்டிருந்த செய்தியின் உள்ளடக்கம் தொடர்பில் பொதுபல சேனாவின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிலந்த விதானகே மறுப்புத் தெரிவித்துள்ளார்.

சம்பிகவும், அதுரலியே ரத்ன தேரரும் வன்முறையை ஏற்படுத்துமாறு ஞானசார தேரரை தூண்டி விட்டதாக, தான் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

‘Champika, Rathana Thera responsible for Gnanasara Thera’s actions’ (ஞானசாரரின் நடவடிக்கைகளுக்கு சம்பிக்கவும், ரத்ன தேரரும்தான் பொறுப்பு) எனும் தலைப்பில் நேற்று வெள்ளிக்கிழமை ‘டெய்லி மிரர்’ இணையத்தளம் செய்தியொன்றினை வெளியிட்டிருந்தது. அந்தச் செய்தியில் சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர் என்று, டிலந்த விதானகே கூறியதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

டெய்லி மிரரின் செய்தியினை தமிழுக்கு மாற்றம் செய்து புதிது செய்தித்தளம் வெளியிட்டிருந்தது.

இந்த நிலையில், மேற்படி செய்தி தொடர்பாக மேலதிக தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு, டிலந்த விதானகேயை ‘புதிது’ செய்தித்தளம் தொடர்பு கொண்டு பேசியபோது, டெய்லி மிரரில் குறிப்பிடப்பட்டிருப்பது போல், தான் கூறவில்லை என்று அவர் மறுப்புத் தெரிவித்தார்.

மேலும், ஊடகங்கள் தமக்குத் தேவையான வகையில் செய்திகளை வெளியிடுகின்றன எனவும் டிலந்த குற்றம் சாட்டினார்.

எவ்வாறாயினும், அமைச்சர் சம்பிக்க ரணவக்கவும், அதுரலியே தேரரும் தமது அரசியலுக்காகவே ஞானசாரரைக் கொண்டு வந்தனர் என்று, தான் கூறியதாக, டிலந்த ஒப்புக் கொண்டார்.

எனவேதான், ஞானசாரரின் செயற்பாடுகள் தொடர்பில் மேற்படி இருவரும் பொறுப்புக் கூற வேண்டும் என, தான் குறிப்பிட்டதாகவும் அவர் கூறினார்.

அமைச்சர் சம்பிக்கவுடன் தனக்கு தனிப்பட்ட ரீதியில் எவ்வித கோபதாபங்களும் இல்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, ‘டெய்லி மிரர்’ இணையத்தளம் நேற்று வெளியிட்டிருந்த செய்தியினை தனது பக்கத்திலிருந்து தற்போது நீக்கியயுள்ளது (http://www.dailymirror.lk/pagenotfound). எவ்வாறாயினும், அதன் பேஸ்புக் பக்கத்தில் அந்தச் செய்தியினைப் பகிர்ந்தமைக்கான இணைப்பு (https://www.facebook.com/Dailymirroronline/?ref=br_rs) தொடர்ந்தும் காணப்படுகின்றது.

தொடர்பான செய்தி: சம்பிகவும் ரத்ன தேரரும்தான் வன்முறையைத் தூண்டி விடுமாறு ஞானசாரரை ஏவினர்: பொதுபல சேனா வாக்குமூலம்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்