உஸ்மானிய சாம்ராஜியத்தின் வசமிருந்த தங்கக் குர்ஆன், மலையாளிக்கு சொந்தமாகிறது

🕔 June 3, 2017

– புதிது செய்தித்தளத்துக்காக, மலையாளத்திலிருந்து தமிழாக்கம்: அம்பலத்துவீட்டில் காதர் துவான் நஸீர் –

ஸ்மானிய சாம்ராஜியத்தின் (துருக்கி) வசமிருந்த 517 வருடங்கள் பழமை வாய்ந்த தங்கத்தினாலான புனித குர்ஆன் பிரதி, இனிமேல் ஒரு மலையாளிக்கே சொந்தமாகிறது. 02 கிலோ நிறையுடைய இந்தத் தங்கக் குர்ஆனின் இந்திய விலை 12 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. (இலங்கை மதிப்பில் சுமார் 28 கோடியே 38 லட்சம் ரூபாய்)

விஞ்ஞானத்தின் திறவுகோலான இப் பரிசுத்த குர்ஆன் பிரதியின் முழு உரிமையையும், தனக்கே உரித்தானதாக ஆக்கிக் கொண்டிருப்பவர், கேளரா தாராபுரத்தைச் சேர்ந்த ஹாரிஸ் என்பவராவார். 22 கரட் தங்கத் தகட்டில், கையினால் எழுதப்பட்டுள்ள இக் குர்ஆன் பிரதி, அனைத்து ஆயத்துக்களையும் கொண்டுள்ளது.

16ஆம் நுாற்றாண்டில் எழுதப்பட்ட இக் குர்ஆன் பிரதியை மலேசியாவிலுள்ள ஹாரிசின் மனைவினுடைய சகோதரன், ஹாரிசுக்கு வழங்கியுள்ளார்.

“இக் குர்ஆன் பிரதியை எனது சகோதரன் எனக்குத் தந்தார். தர்ம ஸ்தானனங்களுக்கோ, வறிய மக்களுக்கோ இதனைப் பயன்படுத்த அவர்  எண்ணம் கொண்டிருந்தார்” என்று, ஹாரிசின் மனைவி தெரிவிக்கின்றார்.

17 சென்றி மீற்றர் அகலமும், 22 சென்றி மீற்றர் நீளமும் கொண்ட இக் குர்ஆன் பிரதி, சீனாவில் உருவாக்கப்பட்டமைக்கான ஆதாரங்கள் உள்ளன. இது ஆரம்பத்தில், (கி.பி. 16 ஆம் ஆண்டு காலப்பகுதியில்) 50 வருட காலம், உஸ்மானிய சாம்ராஜியத்தின் கையில் இருந்தது. அதற்குப் பிற்பட்ட காலத்தில் 339 வருட காலமாக, சீனாவிலுள்ள முஸ்லிம் ஆசான்களிடம் இருந்துள்ளது.

இந்த தங்கக் குர்ஆன் பிரதியின் 07ஆவது உரிமையாளரான ஹாரிஸ், 02 வருட காலமாக எடுத்த சட்ட நடவடிக்கைகள் மற்றும் முயற்சிகளின் விளைவாக, இது இப்போது மலேசியாவிலிருந்து அபுதாபிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

“குர்ஆனை ஓதிப் படித்த பிறகு, எனது வாழ்க்கையில், அது எனக்கு எல்லாமுமாகி விட்டது” என்று கூறும் ஹாரிஸ், “இக் குர்ஆன் பிரதி குறித்து, உலகமெங்கும் அறியத்தரப்பட வேண்டும். சரித்திர ஆராய்ச்சியாளர்களுக்கும், மாணவர்களுக்கும் இது பெரிய உபகாரமாக இருக்க வேண்டும். எனவே, இதனை ஒரு நூதனசாலைக்கு வழங்க வேண்டும்  என்பதே, எனது எண்ணமாயிருக்கிறது”  என்று கூறினார்.

வீடியோ

Comments

புதிது பேஸ்புக் பக்கம்