பஸ் உரிமையாளர்களின் வயிற்றிலடிக்கும், கிழக்கு முதலமைச்சர்: அனுமதிப்பத்திரம் விற்று வியாபாரம் செய்வதாகவும் சந்தேகம்

🕔 June 4, 2017

– றிசாத் ஏ காதர் –

ல்முனை – வாகரை பயணவழிப்பாதை ஊடாக திருகோணமலைக்கு போக்குவரத்தில் ஈடுபடும் பஸ்களின் வருமானத்தை தடுக்கும் வகையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் செயற்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட பஸ் உரிமையாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேற்படி பயண வழிப்பாதை ஊடாக தனியாருக்கும், இ.போ.சபைக்கும் சொந்தமான பஸ்கள்சேவையில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில், சொகுசு பஸ்கள் என்ற போர்வையில் சில பஸ்கள் மேலதிகமாக களமிறக்கப்பட்டுள்ளதோடு, மேலும் ஒரு தொகுதி பஸ்களுக்கு அனுமதிப்பத்திரம் வழங்கும் முயற்சி முதலமைச்சர் தலைமையில் அரங்கேறி வருவதாகவும் தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

இந்த பயண வழியில்  தனியாருக்குச் சொந்தமான 24 பஸ்களும்,  இ.போ.சபைக்கு சொந்தமான 11 பஸ்களும் ஒன்றிணைந்த சேவை மூலம் நாளாந்தம் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

ஆயினும், குறித்த பஸ்களுக்கு போதிய வருமானம் கிடைப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையிலேயே, சொகுசு பஸ்கள் எனும் பெயரில் சிலருக்கு தற்காலிக அனுமதி வழங்கப்பட்டு, மேலும் சில பஸ்கள் இந்த போக்குவரத்துப் பாதையில் களமிறக்கப்பட்டுள்ளதாக தென்கிழக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ். பைறூஸ் தெரிவிக்கின்றார்.

அதேவேளை, கிழக்கு மாகாணமுதலமைச்சரும், மாகாண வீதிப் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவரும் இணைந்து, மேலும் பல பஸ்களுக்கு அனுமதி வழங்கவுள்ளதாகவும், இதன் மூலம் மிகப்பெரும் வியாபாரமொன்று இடம்பெறுவதாகவும் பேரூந்து உரிமையாள்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக தென்கிழக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் செயலாளர் எம்.எஸ். பைறூஸ் மேலும் கூறுகையில்;

“தனியார் மற்றும், இ.போ.சபை ஆகிய இருதரப்பினருக்கும் இடையிலான இணக்கப்பப்பாட்டுடன் ஒன்றிணைந்த சேவையின் அடிப்படையில், பஸ்கள் போக்கு பணியில் ஈடுபடுகின்றன. ஒவ்வொரு பஸ் பயணிப்பதற்குமிடையில் போதுமான நேர இடைவெளி உள்ளது.

இந்த நிலையில், தனியாரிடமோ, இ.போ.சபையனரிடமோ எந்த வித ஒப்புதல்களும் பெறாமல், வெறும் வியாபார நோக்கத்தை மாத்திரம் கருத்தில் கொண்டு, சொகுசு பஸ்கள் இரண்டிற்கான அனுமதி திருட்டுத்தனமாக வழங்கப்பட்டுள்ளன. இது விடயமாக சம்பந்தப்பட்ட  அத்தனை பேரையும் சந்தித்து தீர்வுக்கு முயற்சித்தும் பயன் கிடைக்கவில்லை. இதனால்,  இலங்கை மனித உரிமைஆணைக்குழுவில் நாங்கள் முறைப்பாடு செய்துள்ளோம்.

இப்பிராந்தியத்தில் இவ்வாறான சொகுசு பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதாயின், இ.போ. சபையினரிடமும் அனுமதி பெறப்படல் வேண்டும். ஆனால் அந்த நடைமுறையும் பின்பற்றப்படவில்லை. இதனால் ஏலவே பணியில் ஈடுபடும் பஸ்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள நேர இடைவெளியில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது” என்றார்.

இந்த நிலையில், மேலும் ஒரு தொகை சொகுசு பஸ்களுக்கான போக்குவரத்து அனுமதி வழங்க எடுக்கப்படும் நடவடிக்கையினால் பாரிய சிக்கல் நிலை தோன்றும் நிலையுள்ளது. அதனை தவிர்க்கும் பொருட்டு தாங்கள் பொலிஸில் முறைப்பாடு செய்திருப்பதாக கல்முனை பிராந்திய இ.போ.ச. முகாமையாளர் புதிது செய்தித்தளத்துக்குத் தெரிவித்தார்.

கல்முனையில் இருந்து வாகரை வழியூடாக திருகோணமலைக்கு செல்லும் பஸ்களுக்கான வருமானம், இரண்டு சொகுசு பஸ்களுக்கு அனுமதி வழங்கப்பட்டமையினால் கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகளுக்கும் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில், மீண்டும் ஒருதொகுதி சொகுசு பஸ்களுக்கு அனுமதி வழங்கும் முதலமைச்சரின் நடவடிக்கை மனிதாபிமானமற்றது என்று குற்றம் சாட்டப்படுகிறது.

முதலமைச்சரின் இந்த நடவடிக்கை காரணமாக, தனியார் பஸ்கள் வருமானம் இழந்துள்ளதோடு, உரிமையாளர்களில் பலர் பஸ்களைவிற்று விட்டு நடுத்தெருவில் நிற்பதாகவும் தெரிவிக்கப்படுகிறதுது.

நிலைமை இவ்வாறு இருக்க, மீண்டும் சொகுசு பஸ்களுக்கு அனுமதி வழங்க எடுக்கப்படிருக்கும் நடவடிக்கையின் எதிர்தாக்கத்தை புரிந்து கொள்ள முடியாத கோமா நிலையிலா கிழக்குமாகாண முதலமைச்சர் உள்ளார் என தனியார் பஸ் உரிமையாளர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

கிழக்கு முதலமைச்சரும் அவரை சுற்றியுள்ளவர்களும்சொகுசு பஸ்களுக்கான அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கு எடுக்கும் பிரயத்தனம், வியாபார நடவடிக்கையுடன் தொடர்புடையதாக இருக்க வேண்டும் எனவும் சந்தேகம் தெரிவிக்கப்படுகிறது.

கல்முனை பிராந்தியத்தில் இருந்து திருகோணமலைக்கு பயணம் மேற்கொள்வோரில் சொகுசு பஸ்களின் தேவை குறித்து ஒரு கணக்கெடுப்பினை, வீதிப்போக்குவரத்து அதிகார சபையினர் அண்மையில் மேற்கொண்டனர். அதில் வெறும் 180 பேர் மாத்திரமே தமக்கு சொகுசு பஸ் தேவை என்றும்,  சாதாரண பயண சீட்டின் பெறுமதிக்கு  சொகுசு பஸ் சேவையினை வழங்குமாறும் வேண்டியிருந்தனர்.

சொகுசு பஸ்களுக்கான அனுமதியை வழங்குவதாயின், அவற்றினை தங்களுக்கு வழங்குமாறு, ஏற்கனவே சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் தனியார்  பஸ் உரிமையாளர் வேண்டுகோள் விடுத்திருந்தும் அதனை முதலமைச்சர் கணக்கெடுக்கவில்லை.

போக்குவரத்து அனுமதிப் பத்திரத்தினை வழங்கும் போது, அதற்குப் பகரமாக பணம் பெறப்படுகிறதா என்கிற சந்தேகம் இதன் மூலம் தமக்கு வலுவடைவதாகவும்  தனியார் பஸ் உரிமையாளர்கள் கூறுகின்றனர்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்