ஒரு புறம் வா என்கிறார்கள், மறு புறம் போ என்கிறார்கள்: தமிழ் தலைவர்களின் நிலைப்பாடு குறித்து அமைச்சர் றிசாத் விசனம்

🕔 May 25, 2017

“வாருங்கள், குடியேறுங்கள், முழு உதவிகளையும் வழங்குகிறோம்’ என்று வடக்கு முஸ்லிம்களை தமிழ்த்தலைவர்கள்  அழைக்கின்றார்கள். அதே நேரம், முஸ்லிம்கள் குடியேறச் செல்லும்போது அழைத்தவர்களின் கட்சியை சேர்ந்த ஒரு சாரார் தடைபோடுகின்றார்கள்” என்று அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குற்றம் சாட்டினார்.

தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் நேற்று புதக்கிழமை இரவு கலந்து கொண்ட அமைச்சர், மறிச்சுக்கட்டி விவகாரம், முஸ்லிம்களின் மீள்குடியேற்றம், அமைச்சரவை மாற்றம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துப் பேசிய போதே, இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கூறுகையில்;

“சுமார் 25வருடங்களாக தென்னிலங்கையில் வாழும் அகதிகளின் மீள்குடியேற்றத்தில்; குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் இல்லை. மேலும், எந்தவொரு திட்டமும் மேற்கொள்ளப்படவுமில்லை. இந்த நிலையில் அரசாங்கத்திடம் நாம் விடுத்த வேண்டுகோளையடுத்தே மீள்குடியேற்ற விசேட செயலணி உருவாக்கப்பட்டது. எனினும், இந்தச் செயலணியை இயங்கவிடப்போவதில்லையென யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் வலுவாக கூறப்பட்டுள்ளது.

புலிகளால் துரத்தப்பட்ட இந்த மக்களை மனிதாபிமானத்துடனும், மனச்சாட்சியுடனும், குடியேற்றவேண்டிய பொறுப்பு புலிகளால் உருவாக்கப்பட்ட மாவட்ட, பிரதேச அபிவிருத்தி குழுக்களினதும், வடமாகாண சபையினதும் அதிகாரத்தை வைத்திருக்கும் கட்சிக்கும் இருக்கின்றது. எனினும், அவர்கள் உதவாவிட்டாலும் பரவாயில்லை தடையாக இருக்கின்றார்கள் என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் பிரச்சினையாகும்.

புலிகள் வடக்கிலே கோலோச்சிய காலம் வேறு. இப்போது ஜனநாயகம் நிலவுகின்றது. எனினும் ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் பங்கு கொண்டவர்கள், வடக்கு முஸ்லிம்கள் குடியேற இன்னும் முட்டுக்கட்டையாக இருப்பதுதான் வேதனையானது.

அரசியல் அமைப்புச் சபைக்கூட்டங்களிலே தேர்தல் முறை மாற்றம், அரசியல் சீர்திருத்தம் என்ற பெரியபெரிய விடயங்களை எல்லாம் பேசிக்கொண்டு இருப்பவர்கள் – துரத்தப்பட்ட, தங்களுடன் இரண்டறக் கலந்து வாழ்ந்த சகோதர இனத்தை அரவணைக்க மறுக்கின்றார்கள். இது தொடர்பில் எங்களுடன் அமர்ந்து ஒரு சிலமணிநேரமாவது, பேசுவதற்கும் விரும்புகிறார்கள் இல்லை.

முஸ்லிம்களின் மீள்குடியேற்றம் தொடர்பிலும் இந்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள அவர்களின் காணிப்பிரச்சினை தொடர்பிலும் தீர்வை காணவேண்டியதன் அவசியம் குறித்து எதிர்க்கட்சி தலைவர் ரா. சம்பந்தன், வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் ஆகியோருக்கு கடிதம் ஒன்றை எழுதியிருக்கின்றேன். அவர்கள் இந்த விடயத்தில் நியாயமாக சிந்திக்க வேண்டுமெனவும் வலியுறுத்தியிருக்கின்றேன்.

நல்லாட்சிக்கு நாம் உதவ முற்பட்டபோது வெறுமனே அந்த தலைவர்களுடன் சங்கமிக்கவில்லை. ஜனாதிபதி வேறொரு கட்சிலிருந்து, ஆக 08 பேருடன் வந்திருந்த நிலையில் அவருடன் முஸ்லிம்களின் பிரச்சினைக்கான தீர்வை பெற்றுக்கொள்ளும் வழிவகைகள் குறித்து பேச்சு நடத்தினோம். எனினும் நல்லாட்சியின் முக்கிய கர்த்தாவான ஜ.தே.க தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நாம் ஒப்பந்தம் ஒன்றையும் செய்துகொண்டோம்.

இந்த ஒப்பந்தத்தில் முஸ்லிம்கள் தொடர்பில் கணிசமான விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதியும், பிரதமரும் முஸ்லிம்களின் மீள்குடியேற்றத்தில் 100 சதவீதம் உதவி அளிப்பார்களென்று நம்புகின்றோம். விசேட செயலணிக்கு வடக்கில் உள்ள வேறு எவராவது தடைகள் ஏதும் ஏற்படுத்தினால், எங்களது ஒட்டுமொத்த பலத்தையும் பயன்படுத்தி நியாயம் கேட்போம். உள்ளுர் பொறிமுறையிலோ இந்த அரசாங்கத்திலோ எங்களுக்கு அநியாயம் இழைக்கப்பட்டால் ஜெனீவா வரை சென்று நாம் நியாயம் கேட்போம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்